Published : 11 Feb 2019 10:51 AM
Last Updated : 11 Feb 2019 10:51 AM
இந்திய சாலைகளில் சீறிப் பாய அறிமுகமாகியுள்ளது லம்போகினி ஹரிகேன் இவோ. இந்த சூப்பர் காரின் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சக்தி மிக்க இன்ஜின் உள்ளது. இதன் விலை ரூ. 3.73 கோடியாகும். இந்நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ஹரிகேன் மாடல் காரின் விலை ரூ.3.71 கோடியாகும்.
2017-ம் ஆண்டு ஹரிகேன் மாடல் அறிமுகமானது. 5.2 லிட்டர் இன்ஜின், 640 ஹெச்பி திறன் (முந்தைய மாடலை விட 30 ஹெச்பி அதிகம்), 600 நியூட்டன் மீட்டர் டார்க் விசை ஆகியன இதன் சிறப்பம்சம். 100 கி.மீ. வேகத்தை 2.9 விநாடிகளில் எட்டிவிட முடியும். 200 கி.மீ. வேகத்தை 9 விநாடிகளில் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 323 கி.மீ. ஆகும். அதாவது சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்தில் இந்தக் காரில் சென்றுவிட முடியும்.
புதிய மாடலில் முன்புற பம்பரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது., ரியர் டிப்யூசர், ட்வின் எக்ஸாஸ்ட் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இத்தாலிய நிறுவனமான லம்போகினி உருவாக்கியுள்ள இந்த மாடலில் புதிய சேசிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இது இந்தக் காரின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும். இந்த காரில் 8.9 அங்குல தொடு திரை உள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, குரல் வழி செயல்படும் தன்மை, இரட்டை கேமிரா டெலிமெட்ரி சிஸ்டம் ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.
இந்த கார் ஃபெராரி 488 ஜிடிபி மற்றும் ஆடி ஆர்8 வி10 பிளஸ் ஆகிய மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT