Published : 04 Feb 2019 12:25 PM
Last Updated : 04 Feb 2019 12:25 PM

வெள்ளை நிறமே... வெள்ளை நிறமே...

``கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’’, என்ற பாடல் வேண்டுமானால் படு ஹிட்டாகி இருக்கலாம். ஆனால், இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகளிலும் கூட பிரபலமாக அனைவராலும் விரும்பப்படும் நிறம் ஒன்று உண்டென்றால் அது வெள்ளைதான். கார் வாங்குவோர் பெரும்பாலும் தேர்வு செய்வது வெள்ளை நிறக் கார்களைத்தான் என்கிறது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பிஏஎஸ்எப் கலர் ரிப்போர்ட் எனும் அமைப்பு எந்த வண்ணம் அதிகம் விற்பனையானது என்று துறைவாரியாக கணக்கெடுக்கும். அதில் ஆட்டோமொபைல் துறையில் அதிகம் விற்பனையானது வெள்ளைதானாம்.

வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை 41 சதவீதமாக முதலிடத்தில் உள்ளது. கார் வாங்க வேண்டும் என்ற உடனேயே பலரது தேர்வும் வெள்ளை நிறக் காராகத்தான் உள்ளதாம்.

இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கருப்பு. ஆனாலும் கருப்பு நிற காரை விரும்புவோர் சதவீதம் வெறும் 16 மட்டுமே. பொதுவாக கருப்பு நிறத்தை தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தேர்வு செய்வதில்லையாம். இளைஞர்கள் மற்றும் கருப்பு நிறத்தின் மீது ஈர்ப்புள்ளவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்கின்றனர்.

இவ்விரண்டு நிறத்துக்கும் அடுத்தபடியாக சாம்பல் நிறம் எனப்படும் கிரே நிற கார்களை தேர்வு செய்வோர் எண்ணிக்கை 13 சதவீத அளவுக்கு உள்ளது. இம்மூன்று நிறங்களும் வேண்டாம் என்றாலும் பளபளப்பை விரும்புவோரது தேர்வு சில்வர் நிறமாக உள்ளது. வெள்ளி நிறத்தை தேர்வு செய்வோர் விகிதம் 9 ஆக உள்ளது.

நீலம் (8%), சிவப்பு (7%), பிரவுன் (2%), தங்க நிறம் (1%), ஆரஞ்சு (1%), பச்சை (11%), வயலெட் (1%) என ஒற்றை இலக்க அளவிலேயே பிற நிற கார்களை தேர்வு செய்வோர் விகிதம் உள்ளது.

வெள்ளை, கருப்பு, சாம்பல், சில்வர் ஆகிய நிறங்கள்தான் உலகம் முழுவதும் 80 சதவீத மக்களால் விரும்பப்படுகிறது. இதில் அதிகம் விரும்பப்படுவது வெள்ளை நிறமே. வட அமெரிக்காவில் நான்கு கார்களில் ஒன்று வெள்ளையாகவும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் ஒன்று வெள்ளை நிறமாகவும் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தமட்டில் இந்த எண்ணிக்கை இரண்டு கார்களுக்கு ஒன்றாக வெள்ளை நிறத்தின் ஆதிக்கம் உள்ளது.

சர்வதேச அளவில் சாம்பல் நிறம் பெரிதும் விரும்பப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இதிலும் பெரும் மாறுதல் ஏற்பட்டது. பலரும் நீல நிறத்துக்கு மாறியதால் சாம்பல் நிறத்தை தேர்வு செய்வோர் விகிதம் கணிசமாகக் குறைந்தது. இதேபோல சிவப்பு நிறத்தை தேர்வு செய்வோரின் விகிதமும் கணிசமாகக் குறைந்து வருவதாக கார் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில்

இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் விற்பனையான கார்களின் எண்ணிக்கை 33,94,756 ஆகும். இதில் வெள்ளை நிற கார்களை தேர்வு செய்தவர்களின் விகிதம் 43 சதவீதமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சில்வர், கிரே ஆகிய நிறங்களில் கார்களை வாங்கியவர்கள் விகிதம் (தலா 15%) உள்ளது. சிவப்பு நிறத்தைத் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை 9% ஆகவும் நீல வண்ணத்தை தேர்வு செய்தோர் 7% ஆகவும் உள்ளனர். கருப்பு நிறத்தை தேர்வு செய்தோர் விகிதம் 3% மட்டுமே.

சிறிய கார்களை வாங்குவோர் பெரும்பாலும் முத்து போன்ற வெண்மை நிறக் கார்களையே தேர்ந்தெடுத்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற வெய்யில் சுட்டெரிக்கும் பகுதியில் விரைவில் சூடேறாது என்பதற்காக பலரும் வெண்மை நிறத்தையே தேர்வு செய்கின்றனர். மேலும் வெள்ளை நிறத்துக்கு தனி மரியாதை, அந்தஸ்து கிடைக்கும் என்ற அபிப்ராயமும் முக்கியக் காரணமாகும்.

42 சதவீதம் பேர் வெள்ளை நிறத்தையும், 17 சதவீதம் பேர் சாம்பல் நிறத்தையும், 16 சதவீதம் பேர் சில்வர் நிறத்தையும் தேர்வு செய்தனர். புதிதாக கார் வாங்குவோரில் 12 சதவீதம் பேர் சிவப்பு நிறத்தை தேர்வு செய்துள்ளனர்.

எஸ்யுவி கார்களில்

இதேபோல எஸ்யுவி கார்களிலும் பெரும்பாலானோரின் தேர்வு வெண்மை நிறமாகவே உள்ளது. எஸ்யுவி கார்களை வாங்கியவர்களில் 41 சதவீதம் பேர் வெள்ளை நிறத்தையே தேர்வு செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சாம்பல் நிறம் 15%, சில்வர் 14%, சிவப்பு 12%, நீலம் 7% அளவுக்கு கார்களை வாங்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில்

ஐரோப்பிய நாடுகளில் மக்களின் மனோபாவம் மாறிவருகிறது. முன்பெல்லாம் கருப்பு நிறத்தை விரும்பிய மக்கள் இப்போது சாம்பல் நிறத்துக்கு மாறி வருகின்றனர். இதனால் இங்கு கருப்பு நிற கார்களின் விற்பனை சரிந்தும், சாம்பல் நிற கார்களின் விற்பனை அதிகரித்தும் உள்ளது.

நீல வண்ணத்தில் மட்டும் 140 விதமான வெவ்வேறு ஷேடுகளில் கார்களுக்கு வண்ணம் பூசியுள்ளனர். இதனால் நீல வண்ணத்தில் தங்களுக்குப் பிடித்த ஷேடுகளை தேர்வு செய்வோர் விகிதமும் இங்கு அதிகரித்துள்ளது.

மெட்டாலிக் கோட்டிங் தேர்வு செய்வோர் விகிதமும்  ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்

இந்தியாவைப் போலவே ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வெள்ளை நிறக் கார்களுக்கான தேர்வு அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் சிவப்பு கார்களுக்கு மவுசு அதிகமாகவே உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக நீல நிறத்தை தேர்வு செய்வோர் அதிகரித்து வருகின்றனர். மேலும் பிரவுன் நிறமும் இங்குள்ள மக்களுக்கு விருப்பமான நிறமாகவே உள்ளது.

வாழ்க்கைமுறைக்கேற்ப தங்களது வாகனம் இருக்க வேண்டும் என்பதில் இப்பகுதி மக்கள் தெளிவாக உள்ளனர். இதனாலேயே இங்கு மெட்டாலிக் மற்றும் கருப்பு வண்ண கார்களை விரும்புவோர் விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. சிறிய ரகக் கார்களை வாங்குவோர்கூட மெட்டாலிக் கிரே கார்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். சீனாவில் கலர் கார்கள் அதிகம். மக்கள் வண்ணமயமான கார்களை விரும்புகின்றனர். சிவப்பு, நீலம், பிரவுன், தங்க நிற கார்கள் இங்கு அதிகம்.

வட அமெரிக்காவில்

கார்களைப் பொருத்தமட்டில் வட அமெரிக்க சந்தை மிகவும் முக்கியமானது.  இங்குள்ள மக்களின் பிரதான தேர்வு வெள்ளை, இதற்கடுத்து சிவப்பு. நீல நிறத்தை விரும்புவோர் விகிதம் சற்று குறைவு. கிராஸ் ஓவர் யுடிலிடி வெஹிகிள்ஸ் மாடல் கார்கள் இப்பிராந்தியத்தில் பிரபலம். இவை பெரும்பாலும் கருப்பு, கிரே ஆகிய நிறங்களில் வந்து மக்களின் இதயத்தைக் கொள்ளையடித்தன. அதேபோல சிவப்பு, நீலத்தின் மீதான மோகமும் இவர்களை விட்டு அகலவில்லை.

ஆண்டுதோறும் இத்தகைய ஆய்வை நடத்துவதற்கு காரணம் இல்லாமலில்லை. மக்களின் மனோபாவத்துக்கு ஏற்ற புதிய வண்ணங்களை உருவாக்குவதற்கு உதவுவதற்காக இது நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் புதிய வண்ணக் கலவைகள் உருவாக்கப்படும். சர்வதேச அளவில் ஏற்படும் நிற மாற்றங்களின் தாக்கம் அடுத்தடுத்து பிற பிராந்தியங்களுக்கும் பரவுகிறது. ஏறக்குறைய 65 புதிய வண்ணக்கலவைகளை ஆட்டோமொபைல் துறைக்காக உருவாக்கியுள்ளனர்.

கார் வாங்குவது இப்போதெல்லாம் நிறைவேறாத கனவல்ல. அதை சுலபத் தவணை திட்டங்கள் சுலபமாக்கிவிட்டன. நீங்கள் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையான கார்களை தேர்வு செய்கிறீர்களா என்பதிலிருந்துதான் அதை புரிய வைக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x