Published : 14 Jan 2019 12:31 PM
Last Updated : 14 Jan 2019 12:31 PM
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய சாலைகளுக்கேற்ப புதிய எஸ்யுவி வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு ஹெக்டர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து விமானப்படையான ராயல் ஏர்போர்ஸில் இடம்பெற்றது ஹெக்டர் விமானம்.
1930-களில் பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் பல வெற்றிகளுக்குக் காரணமாக அமைந்தது. பிரிட்டன் தொழில்நுட்பத்தை கவுரவிக்கும் வகையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் இப்பெயரை இந்திய சாலைகளில் தடம் பதிக்கும் தனது முதல் தயாரிப்புக்கு சூட்டியுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் பிரிட்டனின் எஸ்ஏஐசி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்ஏஐசி நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனம் அதிக அளவில் பிரிட்டனிலிருந்து கார்களை இறக்குமதி செய்து சீனாவில் விற்பனை செய்யும் நிறுவனமாகும்.
இந்த ஆண்டில் தனது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்யப்போவதாக ஏற்கெனவே இந்நிறுவனம் அறிவித்துவிட்டதோடு, தனது எஸ்யுவி மாடல் ஹெக்டர் காரை சோதித்து பார்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இது அறிமுகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து முழுமையான பேட்டரி காரை அறிமுகம் செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்புதிய மாடல் காரானது சீனாவில் ஏற்கெனவே அறிமுகமாக பிரபலமாக உள்ள போஜூன் 530 மாடலின் மேம்படுத்தப்பட்ட ரகமாகும். இந்திய சாலைகளுக்கு ஏற்ப இதில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் 5 பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவில் 7 பேர் பயணிக்கும் விதமாக மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இது 4,655 மி.மீ. நீளமும், 2,750 மி.மீ. சக்கர அகலமும் கொண்டது. இதில் டீசல் மாடல் 2 லிட்டர் என்ஜினைக் கொண்டதாக உள்ளது.
காம்பாக்ட் எஸ்யுவி மாடலாக இதனை நிலை நிறுத்த பல்வேறு சிறப்பம்சங்களை இதில் கூடுதலாக வழங்குகிறது எம்ஜி மோட்டார். இது 12.1 அங்குல திரை மற்றும் 10.1 அங்குல தொடுதிரை பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. ஹூண்டாய் கிரெடா, டாடா ஹாரியர், ஜீப் கம்பாஸ் போன்ற பிற நிறுவன தயாரிப்புகளுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT