Published : 14 Jan 2019 12:31 PM
Last Updated : 14 Jan 2019 12:31 PM

புதுமைகளுடன் களமிறங்கும் ஹுண்டாய் கார்கள்

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் 2019 தொடக்கத்திலிருந்து வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. பல நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தும் வருகின்றன. இந்நிலையில், ஹுண்டாய் நிறுவனம் சற்று வித்தியாசம் காட்டுகிறது. ஹுண்டாய் தனது தயாரிப்புகளை, விலை உயர்வுக்கேற்ப புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவர உள்ளது. கிரெடா, ஐ20, ஸ்போர்ட்ஸ், அஸ்டா ஆகிய மாடல்களில் புதிய அம்சங்களைப் புகுத்தி களமிறக்குகிறது.

ஹுண்டாயின் எஸ்யுவி மாடல் காரான கிரெடா 2019-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட எஸ் எக்ஸ் (ஓ) எக்ஸிகியூட்டிவ் என்ற டாப் வேரியன்டாகக் களமிறங்குகிறது. ஹுண்டாய் கிரெடாவில் இந்த டாப் வேரியன்டுடன் சேர்த்து மொத்தம் ஆறு வேரியன்ட்கள் தற்போது உள்ளன.

வெளிப்புறத்தைப் பொருத்தவரை, எஸ் எக்ஸ் (ஓ) எக்ஸிகியூட்டிவ் என்ற புதிய மாடலில் பின்புறம் எல்இடி டெயில் விளக்குகள் இடம்பெறுகின்றன. மேனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ள எஸ் எக்ஸ் மாடல்களில் இரு வண்ணக் கலவை ஆப்ஷன்கள் தரப்படுகின்றன.

உட்புறத்தைப் பொருத்தவரை, குளிர்சாதன கருவிக்கு இகோ-கோட்டிங் தரப்படுகிறது. இது அனைத்து வேரியன்ட்களுக்கும் தரப்படுகிறது. டாப் வேரியன்ட்களான எஸ் எக்ஸ் (ஓ), எஸ் எக்ஸ் (ஓ) எக்ஸிகியூட்டிவ் ஆகியவற்றுக்கு ஸ்மார்ட் ‘கீ’ பேண்ட் தரப்பட உள்ளது.  எஸ் எக்ஸ் (ஓ) எக்ஸிகியூட்டிவ் காரில் கூடுதல் அம்சமாக முன்பக்க இருக்கைகளுக்கு வென்டிலேஷன் வசதி தரப்படுகிறது.

பாதுகாப்பு வசதிகள் இந்தப் புதிய கிரெடாவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது உள்ள மாடல்களைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் புதிய கிரெடாவில் உள்ளன. பின்புறத்தில் பார்க்கிங் சென்சார், சீட்-பெல்ட் ரிமைண்டர் மற்றும் வேக எச்சரிக்கை வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன. 

இன்ஜினைப் பொருத்தவரை ஏற்கெனவே உள்ள மூன்று வகை இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய கிரெடாவில் இ, இ+, எஸ் எக்ஸ், எஸ் எக்ஸ் (ஓ) மற்றும் எஸ் எக்ஸ் (ஓ) எக்சிகியூட்டிவ் ஆகிய வேரியன்ட்களில் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் எஸ், எஸ் எக்ஸ், எஸ் எக்ஸ் (ஓ) மற்றும் எஸ் எக்ஸ் (ஓ) எக்சிகியூட்டிவ் ஆகிய வேரியன்ட்களில் பயன்படுத்தப்படுகிறது. 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் இ+, எஸ் வேரியன்ட்களில் மட்டும் உள்ளது.

1.6 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட எஸ் வேரியன்ட் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இல்லை என்பது ஒரு குறை. ஆனால், 1.4 லிட்டர் டீசல் எஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது.

அடுத்தது ஹுண்டாயின் ஐ20. காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார்களில் ஐ20க்கு எப்போதும் கார் பிரியர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. எனவேதான் ஐ20 மாடலைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு தகவமைத்து சந்தையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது ஹுண்டாய் நிறுவனம்.

2019-ம் ஆண்டுக்கான ஐ20 புதிய அம்சங்களுடன், பிரீமியம் ஹேட்ச்பேக் காராக வரவிருக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் கார் பிரியர்களிடையே அதிகம் உலாவருகிறது. இதில் தற்போது பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் குளிர்சாதன கருவிக்கு ஈகோ கோட்டிங் தரப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த வேரியன்ட் ஆன மேக்னா எக்சிகியூட்டிவ், மேக்னா ப்ளஸ் என பெயர் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. 

மேக்னா எக்சிகியூட்டிவ் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருந்தது. ஆனால், மேக்னா ப்ளஸ் மாடலில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டும்தான். மேக்னா ப்ளஸ் மாடலில் கூடுதலாக ஆடியோ சிஸ்டத்தில் புளூடூத், வாய்ஸ் ரெகக்னிஷன் வசதிகள் உள்ளன. மேலும் ஆடியோ சிஸ்டத்தை கன்ட்ரோல் செய்யும் வசதிகள் ஸ்டியரிங்கிலேயே செய்துதருகின்றன.

ஹுண்டாயின் ஸ்போர்ட்ஸ், அஸ்டா ஆகிய இரண்டு மாடல்களையும் கலந்து ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் என்ற மாடலைக் கொண்டுவருகிறது. இதில் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதிலும் இருவண்ணக் கலவை எக்ஸ்டீரியர் பினிஷிங் கூடுதலாகக் கொடுக்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மாடலில் 15 அங்குல கன் மெட்டல் அலாய் சக்கரங்கள், 7.0 அங்குல தொடுதிரை பொழுதுபோக்கு அம்சம், ரிவர்ஸ் கேமரா, தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய டெலிஸ்கோபிக் ஸ்டியரிங்  ஆகியவை உள்ளன.

அஸ்டா மாடலின் டாப் வேரியன்டாக வரும் அஸ்டா (ஓ) பெட்ரோல் மாடலில் மேனுவல், ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு டிரான்ஸ்மிஷன் வசதிகளுமே உள்ளன. மேலும் ஸ்போர்ட்ஸ் ப்ளஸ் மாடலில் உள்ள அனைத்து புதிய அம்சங்களும் இதிலும் இருக்கிறது. பல புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வரவிருக்கும் ஹுண்டாயின் தயாரிப்புகளுக்கு கார் பிரியர்களிடையே வரவேற்பும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x