Published : 31 Dec 2018 11:38 AM
Last Updated : 31 Dec 2018 11:38 AM

2018-ல் சாலையில் கோலோச்சிய வாகனங்கள்

இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிகச் சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் பெரிதாக புதிய வாகனங்களின் அறிமுகங்கள் இல்லாததுபோலவே இருந்தது. ஆனால், போகப் போக வாகன அறிமுகங்கள் பட்டையைக் கிளப்பின. 2018-ம் ஆண்டின் அட்டகாசமான அறிமுகங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

 

ரோல்ஸ் ராய்ஸின் முதல் எஸ்யுவி `கல்லினன்’: சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்கும் பிரீமியம் பிராண்டான பிரிட்டனின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது 114 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக எஸ்யுவி ரக மாடலை களமிறக்கியது. இதற்கு `கல்லினன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கல்லினன் என்றால் மிகப் பெரிய வைரம் என்று அர்த்தம். உண்மையில் அரிதான வைரம் போன்ற இந்தக் காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 கோடி ஆகும்.

மாருதி ‘நியூ’ எர்டிகா: கார் சந்தையின் ஜாம்பவனான மாருதி சுசூகி, தனது வெற்றிகரமான தயாரிப்பான எர்டிகாவில் இருந்த சில குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தப்பட்ட ‘நியூ’ எர்டிகாவைக் கொண்டுவந்தது. அதுவும் பத்து விதமான வகைகளில் அட்டகாசமான டிசைனில் வந்துள்ளது. முக்கியமாக பெட்ரோல் மாடல்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இவற்றின் ஆரம்ப விலை ரூ. 7.44 லட்சம். அதிகபட்ச விலை ரூ. 10.9 லட்சம்.

ஹோண்டா சிஆர்வி: ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் புதிய பிரீமியம் எஸ்யுவி காரான சிஆர் –வி 7 பேர் சவுகரியமாகப் பயணிக்கக் கூடியது. டிரைவர் இருக்கை 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ. 28.15 லட்சத்தில் தொடங்கி ரூ. 32.75 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 9 கியர்கள் உள்ளன.

datsunjpg100 

டட்சன் கோ ப்ளஸ்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் கோ ப்ளஸ் அட்டகாசமான வடிவமைப்பில் ஸ்டைலான, துடிப்பான, இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இதன் பேஸ் வேரியன்ட் ஆரம்ப விலை ரூ. 3.83 லட்சம். இந்த விலையில் 5+2 இருக்கை வசதியுடன், மல்ட்டி யுடிலிட்டி காராகவும் காம்பேக்ட் பேமிலி காராகவும் இருப்பது இதன் சிறப்பு.

மஹிந்திராவின் `மராஸ்ஸோ’ : கார் விரும்பிகளின் மனம் கவர்ந்த கார் மஹிந்திரா மராஸ்ஸோ. காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் வகையில் ‘ஏரோடைனமிக்’ முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8 பேர் வரை பயணிக்க முடியும். இதுவரை எந்த வகை வாகனத்திலும் இல்லாத வகையில், எல்லா திசையில் இருந்தும் குளிர்ந்த காற்று வீசும்படி குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 9.99 லட்சம் முதல் 13.90 லட்சம்.

ராயல் என்ஃபீல்ட் 650: ராயல் என்ஃபீல்ட் தொடர்ந்து சந்தையைத் தக்கவைக்க 650 சிசி பேரலல் ட்வின் என்ஜின்பைக்குகளைக் கொண்டுவந்தது. இன்டர்செப்டர் 650, ஜிடி 650. ரெட்ரோ பைக் வகையான இன்டர்செப்டர் 650 கிளாசிக் மற்றும் தண்டர்பேர்ட் மாடல்களின் கலவை என்றே சொல்லலாம். கான்டினென்டல் ஜிடி 650 பார்க்க ஜிடி 250 போலவே இருந்தாலும், பெர்பாமென்ஸில் ரொம்பவே அட்வான்ஸ்டு. இன்டர்செப்டர் ஆரம்ப விலை ரூ. 2.89 லட்சத்துக்கும், கான்டினென்டல் ஜிடி ஆரம்ப ரூ. 3.05 லட்சத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஜாவா-வின் ‘கம்பேக்’: ராயல் என்ஃபீல்டுக்கு எந்த வகையிலும் குறையாத கெத்து உள்ள பைக் ஜாவா. ஆனால், நடுவில் சந்தையில் இருந்து காணாமல் போனது. மஹிந்திரா நிறுவனத்தின் முயற்சியால் மீண்டும் இந்த ஆண்டில் சந்தையில் களமிறங்கியிருக்கிறது. பேரலல் ட்வின்  என்ஜின் கொண்ட 3 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக். இவற்றின் விலைகள் முறையே ரூ. 1.64 லட்சம், ரூ. 1.55 லட்சம் மற்றும் ரூ. 1.89 லட்சம் ஆகும். ஜாவா பெராக் சந்தைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

பிஎம்டபிள்யு ஜி 310 ஆர்/ஜிஎஸ்: பிஎம்டபிள்யுவின் இந்த மாடல் பைக் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பிஎம்டபிள்யு நிறுவனத்திலிருந்து சற்று விலைக் குறைவான பைக்கை வாங்கும் கனவில் இந்திய பைக் பிரியர்கள் காத்திருக்கிறார்கள். இதன் விலை ரூ. 2.99 லட்சம் முதல் ரூ. 3.49 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் எனத் தெரிகிறது. 

ட்வின் டிஸ்க் பல்சர்: பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளிலேயே இளைஞர்களின் வரவேற்பில்  வெற்றிகரமாக விற்பனையாகும் ஒரே மாடல் பல்சர்தான். இதில் இந்த ஆண்டு ட்வின் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் பல்சரை அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் முன் சக்கரத்தில் மட்டுமே டிஸ்க் பிரேக் வசதி இருந்தது. 2018 மாடலில் பின் சக்கரத்திலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த நியூ பல்சர் 150-ல் முந்தைய மாடல்களில் குறையாக இருந்த சப்தம், அதிர்வு ஆகியவை சரி செய்யப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 78,016.

யமஹா YZF-ஆர்15 வி3.0: யமஹாவின் ஆர்15 பைக் கல்லூரி இளைஞர்களின் முதன்மை தேர்வாக இருக்கிறது. இதன் விலை, டிசைன், பெர்பாமென்ஸ் ஆகியவையே அதற்குக் காரணம். இந்நிலையில் யமஹா YZF-ஆர்15 தனது மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 1.27 லட்சத்திலிருந்து ஆரம்பம்.

அப்ரிலியா எஸ்ஆர் 150:  பியாஜியோ புதிய பிரீமியம் ரக ஸ்கூட்டரான அப்ரிலியா எஸ்ஆர் 150ஐ அறிமுகம் செய்தது. ஸ்கூட்டர்களில் நிறுவனங்கள் ஃபைபர் பாடி பயன்படுத்தும். ஆனால், இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் அலுமினியத்தால் ஆனவை. இரண்டு வண்ணக் கலவையில் அம்சமாக உள்ள இந்த அப்ரிலியா ஒரு ஹைடெக் ஸ்கூட்டர்என்றே சொல்லலாம். அப்ரிலியா செயலி மூலம் நேவி கேஷன், வாகனத்தின் இடத்தைக் கண்டறிவது, இன்ஜின் ஆயில் எச்சரிக்கை  விளக்கு ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ. 77,215.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x