Published : 31 Dec 2018 11:40 AM
Last Updated : 31 Dec 2018 11:40 AM
பாக்ஸிங் டே – கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இது மிகவும் பிரபலம். கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளாயிருந்தாலும் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது பாக்ஸிங் டே அன்றுதான் (டிசம்பர் 26). அன்றைய தினம் மட்டும் மைதானமே நிரம்பி வழிந்தது.
பாக்ஸிங் டே என்கிறார்களே, இதற்கும் குத்துச் சண்டைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என ஆராய்ந்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. நம்மூரில் ஆரோக்கிய சாமி என்று பெயர் இருக்கும். ஆனால் சதா சர்வகாலமும் இருமிக் கொண்டே வாழ சீவனின்றி நோஞ்சானாக இருப்பார். அதைப்போலத்தான் பாக்ஸிங் டே-வுக்கும் குத்துச் சண்டைக்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பது புலனானது.
பெரும் செல்வந்தர்கள் தங்களிடம் பணி புரிபவர்களுக்கு கிறிஸ்துமஸ் தின பரிசாக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் அடங்கிய பெட்டியை வழங்குவர். அவ்விதம் பெட்டிகளில் வைத்து வழங்கப்படுவதே ‘பாக்ஸிங் டே’ என்றானதாக தெரிகிறது.
ஆண்டு முழுவதும் தன்னிடம் பணிபுரிந்த பணியாளர்களுக்கான வெகுமதியாகவும் இது வழங்கப்படுகிறது. இது தவிர, வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள பொருள்களை பெட்டியில் வைத்து வாசலில் வைத்துவிடுவராம். இதை ஏழை எளியவர்கள் எடுத்து பயன்படுத்த வசதியாக சில இடங்களில் பின்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏழை மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டனில் கடற்படை மாலுமிகள் பயணம் புறப்படும் முன்பு சிறு தொகையை சேமித்துவைப்பார்களாம். தாங்கள் பத்திரமாக கரை திரும்பிய பிறகு அதை தேவாலய பாதிரியாரிடம் அளிப்பராம். அவரோ அதை ஏழைகளுக்கு விநியோகிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பழக்கம் எப்போது ஆரம்பமானது என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும், இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தொடங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு, தங்களுடைய எஜமானர்களுக்காக உழைத்த பணியாளர்களுக்கு விடுமுறையுடன் பரிசுப் பொருளும் வழங்கும் மரபு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரோமானியர்கள் காலத்திலேயே ஏழை மக்களுக்கு உதவ, பெட்டிகளில் பணம் வசூலித்து வழங்கும் முறை இருந்ததாக தெரிகிறது. இந்த நடைமுறையானது வெற்றிகரமாக இருந்ததால் விக்டோரியர்கள் காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. இதனாலேயே காமன்வெல்த் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, கென்யாவில் இன்றளவும் இது நடைமுறையில் உள்ளது.
இன்றைய நவீன உலகிலும் தொடரும் இந்த ‘பாக்சிங் டே’ வழக்கத்தில், தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தை, மக்கள் ஷாப்பிங் செய்து கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் பொருள்களுக்கு எப்போது இல்லாத அளவில் உச்சகட்ட தள்ளுபடியை வழங்குகின்றன. இதனால் இது பாக்ஸிங் டே விற்பனை என்று அழைக்கப்படுகிறது.
குத்துச் சண்டைக்கு தொடர்பில்லை. ஆனால், நிறுவனங்கள் அமோக தள்ளுபடிகளை அள்ளித்தந்து வியாபாரத்தை கும்மாங் குத்தாக ஜமாய்க்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT