Published : 24 Dec 2018 11:36 AM
Last Updated : 24 Dec 2018 11:36 AM
ஒரு கதவு அடைபட்டால், மறு கதவு திறக்கும்,’’ என்று கூறுவார்கள். ஆனால் ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மறு பிரச்சினை உருவாகும் என்பதை ஏன் யாரும் உணரவில்லை என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி அறிவித்ததோடு அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டது.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது சரியா, தவறா என்பதல்ல பிரச்சினை. தேர்தல் கால தீர்வாக இருப்பதைவிட இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.
இதற்கு ஒருபடி மேலே போய் ராகுல் காந்தியோ, அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்யும் வரை மோடியை தூங்க விடமாட்டேன் என்று சூளுரைத்துள்ளார். விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் மாநில அரசுகளின் நிதி நிலை என்னவாகும் என்பதை பார்க்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களின் நிதி நிலை பற்றாக்குறை அவற்றின் ஜிடிபி-யில் 3 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அளவையெல்லாம் கடந்து அபாய நிலைக்கு சென்று கொண்டிருப்பதை அரசியல்வாதிகள் உணர்வார்களா?
2017-18-ம் ஆண்டு வரையான காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் ரூ. 2.10 லட்சம் கோடியாகும். இதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தள்ளுபடி செய்த ரூ. 36 ஆயிரம் கோடி கடன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தள்ளுபடி செய்த ரூ. 34,500 கோடி கடனும் அடங்கும்.
மாநில அரசுகளின் கடன் சுமை அவற்றின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மதிப்பீடு செய்யும்போது நான்கு மாநிலங்கள் தவிர ஏனைய மாநிலங்களின் கடன் பொறுப்பு 20 சதவீதத்துக்கு அதிகமாகவே உள்ளது. மாநில வாரியாக அவற்றுக்குள்ள கடன் பொறுப்புகளில் பஞ்சாப் ரூ. 2,11,580 கோடி (41.5%) தொகையுடன் முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ரூ. 3,13,460 கோடி (33.6%), கேரளா ரூ. 24,094 கோடி (32.4%), பிகார் ரூ.16,198 கோடி (29.5%), மேற்கு வங்கம் ரூ 3,93,700 கோடி (28.3%), ஆந்திரா ரூ. 2,52,020 கோடி (27.3%), ஹரியானா ரூ. 1,86,970 கோடி (27.6%), ஜார்க்கண்ட் ரூ. 83,100 கோடி (27.3%), மத்தியப் பிரதேசம் ரூ. 2,07,160 கோடி (25.5%), உத்தரப் பிரதேசம் ரூ. 3,85,220 கோடி (26.2%), கோவா ரூ. 19,280 கோடி (22.5%), தமிழ்நாடு ரூ. 3,66,010 கோடி (23.2%), தெலங்கானா ரூ. 1,82,330 கோடி (22.2%), ஒடிஷா ரூ. 1,00,180 கோடி (21.9%), குஜராத் ரூ. 2,88,910 கோடி (19.7%), கர்நாடகா ரூ. 2,64,600 கோடி (17.5%), மகாராஷ்டிரா ரூ. 4,96,660 கோடி (17.5%), சத்தீஸ்கர் ரூ. 62,990 கோடி (17.4%) என்ற நிலுவைச் சுமையுடன் உள்ளன.
கடன் தள்ளுபடி சலுகையால் மாநிலத்தின் நிதிச் சுமை அதிகரிக்கிறது. மேலும் கடன் தள்ளுபடியைப் பொருத்தவரை வங்கிகளுக்கு முதலில் ஒரு குறிப்பிட்ட தொகையையும் பிறகு ஐந்து ஆண்டு இடைவெளியில் மீதி தொகையையும் அளிப்பதாக உடன்பாடு எட்டப்படும். இதனால் வங்கிகளின் நிதி நிலையும் சரியும். இதனால் அடுத்து விவசாயக் கடன் அளிப்பதில் வங்கிகளிடம் போதிய நிதி ஆதாரம் இல்லாத சூழல் ஏற்படும்.
அரசியல் ஆதாயத்துக்காக தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் எந்த திட்டமும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளாவது உணர்த்துவார்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT