Published : 03 Dec 2018 11:24 AM
Last Updated : 03 Dec 2018 11:24 AM

ரேஸ் காராக மாறிய ஃபோக்ஸ்வேகன் வென்டோ

சாதாரணமாக ஃபோக்ஸ்வேகனின் வென்டோ மாடல் கார் குடும்பத்துக்கு ஏற்றது என்ற அளவில்தான் பரிச்சயம். இதே இன்ஜின் கொண்ட கார் பந்தய களத்தில் சீறிப் பாய்ந்து கோப்பையை வெல்லும் என்று நினைத்துப் பார்க்க முடிகிறதா.

இந்திய சுற்றுலா கார் சாம்பியன் போட்டிக்காக முற்றிலுமாக மாற்றப்பட்டதுதான் ஃபோக்ஸ்வேகன் வென்டோ டிசி4 ஏ. இதில் டிசி என்பது டர்போ கிளாஸ் வகையைக் குறிப்பதாகும். பந்தய களத்துக்கென இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கார் உருண்டாலும் அடிபடாமல் காக்க ரோல்கேஜ் உள்ளிட்ட ரேஸ் கார்களுக்குரிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது 210 ஹெச்பி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜினில் செயல்படும் காராகும்.

இதன் முன்புறம் முகப்பு விளக்குகள் கருப்பு பட்டையால் மறைக்கப்பட்டுவிட்டன. சக்கரங்களில் ரேஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற பந்தய கார்கள் உருவாக்கம் என்பது இந்தியாவில் அதிக செலவு ஆகும் விஷயம் என்கிறார் ஃபோக்ஸ்வேகன் மோட்டார் ஸ்போர்ட் பிரிவின் தலைவர் சிரிஷ் விஸா. இவ்வித வடிவமைப்பு மாற்றத்துக்கு ரூ. 25 லட்சம் வரை செலவு பிடிக்கிறது என்கிறார்.

காரின் உள்புறம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. முக்கியமானவை மட்டும் இடம்பெற்றுள்ளன. ரோல் கேஜ், தீ தடுப்பு கருவி, டிரைவருக்கு அவசியமான  சாதனங்கள் மட்டும் இடம்பெறுகின்றன. உள்புறம் அடிப்பகுதியில் விரிப்புகள், கதவு பேட் மற்றும் ஏசி வசதி கிடையாது.

இதன் மூலம் காரின் எடை டிரைவருடன் சேர்த்து 1,150 கிலோவாகக் குறைத்துவிட்டனர். இதை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஜன்னல் கண்ணாடிகளுக்குப் பதில் பிளாஸ்டிக் கண்ணாடி பயன்படுத்தினால் இது மேலும் குறையும்.

இந்த காரின் டிரைவர் இருக்கைக்குச் செல்வதே சாகசம் போன்றதுதான். ஏனெனில் இதில் பக்கவாட்டு பாதிப்பை தடுக்கும் பிரேம்கள் உள்ளன. டிரைவர் இருக்கை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் இருக்காது.

ரேஸ் கார்களில் உள்ள இருக்கை போன்று இதில் உள்ளது. இதன் முன்புற டேஷ் போர்டில் உள்ள எலெக்ட்ரானிக் கிளஸ்டர் பார்முலா -1 பந்தய காரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. அதேபோல கியர் மாற்றத்தை உணர்த்தும் எல்இடி இதில் உள்ளது. அதேபோல எளிதில் அடையாளம் காணும் வகையில் டேஷ்போர்டில் அனைத்துமே பெரிய அளவிலனதாக உள்ளன.

வென்டோ மாடல் 210 ஹெச்பி திறன் கொண்ட டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. வழக்கமான கார்களில் கியர் மாற்றுவதைப் போன்று இதிலும் கியர் மாற்ற முடியும். இது வெளிப்படுத்தும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் அளவு இதன் வேகம் அதிகரிக்க உதவும்.

எவ்வளவு வேகத்தில் சென்றாலும் துல்லியமாக பிரேக் பிடிக்க உதவுகிறது முன் சக்கரத்தில் உள்ள 334 மி.மீ. டிஸ்க் மற்றும் பின்சக்கரத்தில் உள்ள சிறிய டிஸ்க் பிரேக். ஸ்டீரிங் வீலுக்கு எலெக்ட்ரானிக் உதவி வசதி இல்லை. இருந்தாலும் 180 டிகிரி அளவுக்கு இதை வளைத்து ஓட்ட முடியும்.

அமியோ மாடலை விட இது 5 ஹெச்பி கூடுதல் திறன் கொண்டுள்ளது.  இதனால் இது பந்தய களத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தை மிகவும் எளிதாக தொட்டுள்ளது. பிடிமானத்துக்கு எம்ஆர்எப் நிறுவனம் தயாரித்துள்ள விசேஷ டயர்கள் உதவியாக உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிசி4ஏ வென்டோ மாடலின் விலையை ரூ. 24 லட்சம் என நிர்ணயித்துள்ளது. இதில் ஏபிஎஸ், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 6 கியர் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்றால் ரூ. 40 லட்சம் செலவு செய்ய வேண்டும். இந்த கார் பந்தய களத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இது ரேஸ் பிரியர்களுக்கு மட்டுமானது. ஆனால் சாலைகளில் பயன்படும் வென்டோ மாடல் சிறிய மாற்றங்களுடன் சாகச பயணத்துக்கும், சீறிப் பாயவும் பயன்படுத்தப்படுகிறது என்றால் வியப்பு மேலிடாமல் இருக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x