Published : 26 Nov 2018 11:43 AM
Last Updated : 26 Nov 2018 11:43 AM

சோலார் மின் உற்பத்தியில் ஒளிந்திருக்கும் சவால்

சர்வதேச அளவில் பருவநிலை மாற்றம் என்பது மிகத் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தொடர்ந்து இயற்கை நமக்குக் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்யும் முயற்சிகளில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன. அதில் மிக முக்கிய முயற்சி என்றால் அது சூரியசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார். ஆற்றல் உற்பத்திக்கான தேவை அதிகமாக உள்ளது.

ஆனால், தற்போது புதுப்பிக்க முடியாத வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இல்லையென்பதோடு, வளங்கள் பற்றாக்குறையை ஏற்படுத்திவிட்டது. எனவே புதுப்பிக்கத்தக்க மாற்று ஆற்றலை நோக்கி கவனத்தைத் திருப்பும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கைக்கு ஏற்ற சரியான மாற்று சக்தியாகப் பார்க்கப்படுவது சோலார் மின் உற்பத்தி முறை. 

சர்வதேச ஆற்றல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் சோலார் போட்டோவோல்டிக் உற்பத்தி திறன் 2030ல் 1600 ஜிகாவாட்களாக உயரும் என்று கூறியுள்ளது. இந்தியா 2022ல் 100 ஜிகாவாட் இலக்கை அடைய முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இந்த 100 ஜிகாவாட் திறனில் ஐந்தில் ஒரு பங்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது. 2030ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை, அரசுகளின் கொள்கைகளாலும், விலைக் குறைப்பு முயற்சிகளாலும் நிச்சயம் அடைய முடியும். ஆனால் அதேசமயம் இது முழுக்க முழுக்க பிரச்சினையில்லாத ஒரு முறையா என்றால் இல்லை. இந்த சோலார் மின் தயாரிப்பு முறையிலும் பிரச்சினைகள் உள்ளது. ஆனால், அதை முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கொண்டால் எளிதில் சமாளிக்க முடியும்.

சோலார் மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் போட்டோவோல்டிக் பேனல்கள் அவற்றின் வாழ்நாள் முடிவுக்குப் பிறகு பெரும் குப்பைகளாக மாறிக்கொண்டிருக்கிறது. அவற்றை கையாள்வது குறித்து நாம் யோசிக்காவிட்டால் இன்று எலெக்ட்ரானிக் குப்பைகள் பெரும் சவாலாக மாறியுள்ளதுபோல இதுவும் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

கணினி, மொபைல் போன்களின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று மாபெரும் எலெக்ட்ரானிக் குப்பை குவிந்துள்ளது. இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளாகக் குவிந்துள்ள எலெக்ட்ரானிக் குப்பைகளின் அளவு கொஞ்சநஞ்சமல்ல. ஐநாவின் சுற்றுச்சூழல் குழு அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யும் முயற்சிகளில் மிக சமீபத்தில்தான் அரசு இறங்கியிருக்கிறது.

கழிவு மேலாண்மையும், மறுசுழற்சி நடைமுறைகளும் மேம்படுவதற்கு கால அவகாசம் அதிகமாகவே தேவைப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு இப்போதே தீர்வு காண வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. போட்டோவோல்டிக் பேனல்களின் வாழ்நாள் காலம் 25 முதல் 30 வருடங்கள் என்றாலும், சரியான முறையில் நிறுவப்படாதது, உற்பத்தியில் ஏற்படும் குறைகள், சரியான பரிமாரிப்பு இல்லாதது, பழுதடைதல், சேதமடைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவை முன்கூட்டியே பயனற்றுப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.   

காலாவதியாகும் போட்டோவோல்டிக் பேனலிலிருந்து மறுசுழற்சியின் மூலம் நம்மால் 90 சதவீத கிளாஸையும், 95 சதவீத செமிகண்டக்டர்களையும் மீட்டெடுக்க முடியும். இதுபோக அலுமினியம், சிலிக்கான், காப்பர், பாலிமர், பிற மெட்டல்களைப் பிரித்

தெடுக்க முடியும். எனவே மறுசுழற்சி கழிவு சேர்வதை மட்டுமே தடுப்பதில்லை, கூடவே வளங்களையும் மீட்டுக் கொடுக்கிறது. இது பொருளாதாரப் பார்வையில் பார்க்கும்போது பெரும் செலவுகளைக் குறைக்கும். சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்பின் கணிப்புப்படி போட்டோவோல்டிக் பேனல்

களை மறுசுழற்சி செய்யும் துறை 2050ல் 15 பில்லியன் டாலராக வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளது.   மறுசுழற்சி மூலம் கிடைக்கும் பொருள்களிலிருந்து 2030ல் 60 மில்லியன் புதிய பேனல்களையும், 2050ல் 2 பில்லியன் புதிய பேனல்களையும் உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் நிர்வாக அமைப்பு போட்டோவோல்டிக் பேனல்களை மறுசுழற்சி செய்யவும், அதன் மூலம் கிடைத்த பொருள்களைக் கொண்டு புதிய பேனல்களைத் தயார் செய்யவும் சோலார் பேனல் உற்பத்தியாளர்களுக்கு கட்டளைப் பிறப்பித்திருக்கிறது. ஆனால் இந்தியா 2016ல் கொண்டுவந்த எலெக்ட்ரானிக் கழிவுகள் விதிமுறைகளில் சோலார் போட்டோவோல்டிக் பேனல்களைச் சேர்க்கவில்லை.

எனவே இதனை முறைப்படுத்தாத துறையினர் பாதுகாப்பற்ற நிலையில் மறுசுழற்சி செய்துவருகின்றன. இதனால் மறுசுழற்சியின் திறனளவு மிகக் குறைவாகவே இருக்கிறது.

மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்தியா, சோலார் பேனல் மறுசுழற்சியை அதிகாரப்பூர்வமாக முறைப்படுத்துவதோடு, சர்வதேச அளவில் சிறப்பாக உள்ள மறு சுழற்சி முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x