Published : 26 Nov 2018 11:43 AM
Last Updated : 26 Nov 2018 11:43 AM

உங்கள் உணவு பாதுகாப்பானதா?

அங்காடிகளில் வாங்கும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள தர நிர்ணயங்கள், காலாவதி தேதி ஆகியவை உண்மை தானா? "இயற்கையானது” அல்லது “ஆர்கானிக்” எனச் சொல்லப்படுபவை எந்த அளவுக்கு உண்மையானவை? உணவு விடுதிகள், சமையல்காரர்கள், பிற உணவு விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி உணவுப் பொருள்களைத் தயார் செய்கிறார்களா? என்ற கேள்விகள் சமீப காலங்களில் மிக முக்கியமானதாக மாறியுள்ளன.

தற்போது ஏற்படும் பெரும்பாலான உடல் நலக் குறைவு பிரச்சினைகளுக்கு நாம் உண்ணும் உணவுதான் காரணமாக உள்ளது. எனவே உணவுப் பாதுகாப்பில் சமரசம் செய்தது போதும். நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களைப் பற்றியும், அவற்றின் தரத்தைப் பற்றியும் பெரும்பாலும் நம்மால் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஒருவேளை நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானது இல்லையெனில் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006ல் அனைத்துவிதமான உணவு சார்ந்த சட்ட விதிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் உணவுப் பொருள்களில் பயன்படுத்த வேண்டிய உப பொருள்களின் அளவையும் தரத்தையும் நிர்ணயிக்கிறது.

உதாரணமாக, உணவுப் பொருள்களில் கூடுதல் சேர்க்கைகள், பிராசஸிங் பொருள்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லி, கால்நடை மருந்துகள் அல்லது ஆண்டிபயாட்டிக் போன்றவற்றை சேர்க்கக் கூடாது. அப்படி சேர்க்கப்பட வேண்டுமென்றால் அதற்கென குறிப்பிட்ட விதிமுறைகள் அனுமதிக்கப்பட்ட பொருள்களில் மட்டுமே சேர்க்கலாம்.   

மேலும் கதிரியக்கம் செய்யப்பட்ட உணவு, ஆர்கானிக் உணவு, ஆரோக்கியத்தைக் கூட்டும் உணவுப் பொருள்களை இந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி மட்டுமே உற்பத்தி, பிராசஸ் மற்றும் விற்பனை செய்ய அனுமதி உண்டு. மேலும் பேக்கேஜிங், லேபிளிங் ஆகியவற்றிலும் விதிமுறைகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் விளம்பரங்கள், வாக்குறுதிகள் போன்றவற்றிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பொருள்கள் விவகாரத்தில் எழும் புகார்களை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி மத்திய, மாநில மற்றும் உள்ளூர் நிலை அதிகாரிகள் விசாரணை செய்து தீர்வு வழங்குகின்றனர்.

இந்தச் சட்டம் நுகர்வோருக்கு மூன்று முக்கிய தீர்வுகளை வழங்குகிறது. ஒன்று தரமில்லாத உணவுப் பொருளுக்குப் பொறுப்பு உற்பத்தியாளர் மட்டுமல்ல, அதை விநியோகம் செய்தவரும், விற்பனை செய்தவரும் பொறுப்பானவர்களே. எனவே, உங்களிடம் காலாவதியான ஒரு பொருள் விற்கப்பட்டாலோ, அல்லது சரியாக கையாளப்படாமல் தரமில்லாமல் இருந்தாலோ நீங்கள் நேரடியாக விற்பனை செய்தவர் மேல் புகார் செய்யலாம். அது ஏற்கெனவே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள் என்று அவர் தப்பிக்க முடியாது.  

இரண்டு, வாடிக்கையாளர்கள் எந்த வொரு உணவுப் பொருளையும் உணவுப் பரிசோதகர் மூலம் பரிசோதிக்க இந்தச் சட்டம் அனுமதியளிக்கிறது. உணவுப் பொருளில் சட்ட விதிமுறைகளை மீறி கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தால் அதை உற்பத்தி செய்தவர் மீது புகார் செய்யலாம். சென்னையிலுள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பரிசோதனைகள் செய்யலாம்.

மூன்று, பெருமளவிலான நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தச் சட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் தரமில்லாத உணவுப் பொருளைத் திரும்பப் பெறலாம். சட்ட விதிமுறைகளின்படி ஒரு உணவுப் பொருள் தயாரிக்கப்படவில்லை எனில், உற்பத்தியாளர் அதைத் திரும்பப்பெறுவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்.

உதாரணம்: 2015 ஜூன் மாதம், நெஸ்லே தனது 27,420 டன் மேகி நூடுல்ஸ் பாக் கெட்டுகளை, உற்பத்தி நிலையங்கள், விநியோகமையங்கள், மொத்த வியாபாரிகள், சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அனைவரிடமிருந்தும் திரும்பப் பெற்றது.

உணவு தர நிர்ணய விதிமுறைகளை மீறுபவர்களுக்கும், விளம்பர விதி முறைகளை மீறுபவர்களுக்கும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை தயாரித்தாலோ, விற்றாலோ, இறக்குமதி செய்தாலோ அவர்களுக்கு அபராதத்தோடு, நுகர்வோருக்கு ஏற்பட்ட பாதிப்பின் அடிப்படையில் சிறைதண்டனையும் கொடுக்கப்படும். தரமில்லாத உணவுப் பொருளால் நுகர்வோர் இறக்க நேர்ந்தாலோ ஏதேனும் பாதிப்புக்குள்ளானாலோ இழப்பீடு வழங்க வேண்டும்.

இறக்க நேர்ந்தால் ரூ. 5 லட்சமும், பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு ரூ. 3 லட்சம் வரையும், பிற பாதிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும், பாதிப்பு ஏற்பட்ட ஆறு மாதத்துக்குள் இழப்பீடு வழங்க வேண்டும். புகார் தெரிவிக்க மாவட்ட அல்லது மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை அணுகலாம்.

அதிகாரிகளின் விவரங்களை இந்த இணைய பக்கத்தில் பார்க்கலாம்.

https://www.fssai.gov.in/home/compliance/Food-Commissioners.html

மேலும் நுகர்வோர்கள் https://foodlicensing.fssai.gov.in/cmsweb/HOME.aspx

என்ற இணையதளத்தில் நேரடியாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம்.

- vardhini.c@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x