Published : 27 Aug 2018 12:39 PM
Last Updated : 27 Aug 2018 12:39 PM
மனநோய் சிகிச்சைகளுக்கு காப்பீடு திட்டங்களை வழங்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) காப்பீடு நிறுவனங்களை கேட்டுள்ளது. மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முறையான மனநல சிகிச்சை அளிக்கும் பொறுப்பு குறைவாகவே உள்ள நிலையில் ஐஆர்டிஏஐ முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கவேண்டியது என்பதில் மாற்று கருத்தில்லை.
தற்போது இந்தியாவில் அளிக்கப்பட்டுவரும் காப்பீட்டுத் திட்டங்களில் மனநல சிகிச்சைகளுக்கு என்று தனியாக வழங்கப்படவில்லை. தீராத நோய்கள், திடீர் இடர்பாடுகளுக்கு காப்பீடு அளிக்கப்பட்டுள்ளதுபோல, மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் மருத்துவக் காப்பீடு அளிப்பது சிறந்த பயன்களை அளிக்கக்கூடியது.
ஐஆர்டிஏஐ வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மன நல மருத்துவச் சட்டத்தின்படி மன நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது என்கிறது.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களாகியும், அதில் குறிப்பிட்டுள்ள விதிகளைக் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இதனால்தான் ஐஆர்டிஏஐ சார்பில் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிற நோய்களுக்கு எவ்வாறு காப்பீடு அளிக்கப்படுகிறதோ, அதே முறையை இதற்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐஆர்டிஏஐ குறிப்பிட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் மனநல சிகிச்சைகளும் வந்தால், கண்டிப்பாகச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், மனநலப் பிரச்சினைகளுக்கும் காப்பீடு இருப்பதால், பொதுவான உடல்நலப் பரிசோதனையின்போது மனநலனுக்கும் சேர்த்துப் பரிசோதிக்க வழி ஏற்படும். இதன்மூலம் மனநலப் பிரச்சினை இருப்பது தெரியாதவர்களும் அதைத் தெரிந்துகொண்டு சிகிச்சைக்காக வருவார்கள். எனவே, இதன் மூலம் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு உருவாகவும் வழிவகுக்கும்.
ஆனால் மனச் சோர்வு, மனப் பதற்றம் போன்றவை எதன் காரணமாக உருவாகின்றன. என்பதற்கு எந்த விதமான தீர்மானமான காரணங்களும் இல்லை. மதுப்பழக்கம், புகைப் பழக்கம் போன்றவையும் மன அழுத்தங்களுக்கு காரணமாக உள்ளன. ஏற்கெனவே உடல்நலம் சார்ந்த காப்பீடு திட்டங்களில் இதுபோன்ற போதை வஸ்துகளால் உருவாகும் நோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மன நலன் சார்ந்த பிரச்சினைகளை வரையறுக்க முடியாமல் நிறுவனங்கள் குழப்பத்துக்கு உள்ளாகும்.
இதனால் எந்தெந்த பிரச்சினைகளை இந்தக் காப்பீட்டில் கொண்டுவருவது என்பதற்கு முழுமையான வழிகாட்டலை ஐஆர்டிஏஐ அளிக்க வேண்டும். இதனால்தான் காப்பீடு நிறுவனங்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.
சில நேரங்களில் மன நல சிகிச்சைக்கு நீண்டநாள் அல்லது ஆயுள் முழுவதும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும். அல்லது வீட்டிலேயே சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இதுபோன்ற நேரங்களில் என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்கும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த காப்பீடு யோசனை தாமதமாக வந்தாலும் மிகவும் அவசியமான ஒன்று. அதே நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை அளிக்கவும், பாரமரிக்கவும் போதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும். மனநல மருத்துவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுவதும், அவர்களின் தேவையை அதிகரிக்கவும் வேண்டும். இந்த அடிப்படை கட்டமைப்புகள் மேம்பட்டால் மனநல காப்பீடும் போதிய வரவேற்று பெறும். காலத்துக்கு ஏற்ற இந்த மாற்றம் மக்களிடையே கவனம் பெறட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT