Published : 27 Oct 2025 07:18 AM
Last Updated : 27 Oct 2025 07:18 AM

சவுதியில் கபாலா முறை ரத்தால் 26 லட்சம் இந்தியருக்கு நிம்மதி

எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியாவில் பிழைப்புக் காக ஊர், உறவை விட்டு அங்கு தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 1.32 கோடிக்கும் அதிகம். அதிலும், இந்தியாவிலிருந்து 26 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவரும் கபாலா என்ற விதிமுறையை பின்பற்றுவது கட்டாயம். கபாலா என்பது வெளிநாடுகளில் இருந்து சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் உரிமையாளரை குறிக்கிறது. இவர்தான் ஸ்பான்சர்ஷிப் ஆக கருதப்படுவார்.

சவுதிக்கு வேலைக்கு வரும் பணியாளருக்கு இவர்தான் முழுப் பொறுப்பு. அதனால், பணியாளர்களின் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இவர் கையில்தான் இருக்கும். அவசர காலத்தில் ஏதேனும் உதவி தேவை என்றால் கூட இவரது அனுமதியின்றி எதையும் செய்ய முடியாது. இது ஒரு நவீன அடிமைத்தன வடிவமாக விவரிக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை முதலாளி வாங்கி வைத்துக்கொள்கிறார். இதனால், விருப்பமில்லாத வேலையை செய்ய கட்டாயப்படுத்துவதுடன், அதிக நேரம் வேலை வாங்குவது, விடுமுறை அளிக்காமல் வேலை செய்ய துன்புறுத்துவது, உரிய சம்பளம், தரமான உணவு மற்றும் சுகாதாரமான தங்குமிடம் கொடுக்காமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் அலைக் கழிக்கப்படுகின்றனர். இது, அவர்களை உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் பாதித்தது.

இதை எதிர்த்து தொழிலாளர்கள் சட்டரீதியில் தீர்வு காண வேண்டும் என்றாலும் அதற்கும் இந்த கஃபீல்களின் அனுமதி தேவை. எனவே, குடும்ப கஷ்டத்துக்காக வேறு வழியின்றி கொத்தடிமை போல வேலை செய்யும் நிலை தொடர்ந்து வந்தது. இந்த நிலையில்தான், உலக தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அழுத்தத்தின் காரணமாக சவுதி அரேபியா, தொழிலாளர் சட்டங்களில் தற்போது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

மேலும், பொருளாதாரத்தை நவீனமயமாக்குதல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் என்ற சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் 2030 தொலைநோக்கு திட்டத்துக்கு இத்தகைய சீர்திருத்தம் அவசியமான ஒன்றாகவும் மாறிவிட்டது. வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்பை அவர்களது முதலாளிகளுடன் இணைக்கும் 50 ஆண்டு கால பழமையான கபாலா (ஸ்பான்சர்ஷிப்) முறையை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக 2025 ஜூன் மாதத்தில் சவுதி அரேபியா அறிவித்தது.

புதிய தொழிலாளர் சீர்திருத்த அறிவிப்பின் கீழ், சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இனி தங்கள் ஒப்பந்தத்தை முடித்த பிறகோ அல்லது உரிய அறிவிப்பை வழங்கிய பிறகோ முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் வேலைகளை மாற்றிக் கொள்ளலாம்.

தங்களது ஸ்பான்சரின் வெளியேறும் அல்லது மறு நுழைவு அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு தொழிலாளர்கள் பயணம் செய்யலாம். இந்த கபாலா முறை ஒழிப்பால் தொழிலாளர் மீதான முதலாளியின் சுரண்டல் குறையும் என்பதுடன் நிறுவனங்களுக்கிடையே பணிமாறுதல் எளிதாகும். அதிக போட்டி ஊதியம் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இந்த புதிய மாற்றம் வழிவகுக்கும்.

இருப்பினும், இந்த சீர்திருத்தங்களின் மூலம் தொழிலாளர்கள் உண்மையிலேயே பயனடைவதை உறுதி செய்ய அதன் அமலாக்கமும், டிஜிட்டல் சிஸ்டமும் வெளிப் படையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x