Published : 20 Oct 2025 07:35 AM
Last Updated : 20 Oct 2025 07:35 AM
ரூ.60 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: இந்து காலண்டர் மாதமான கார்த்திகையின் 13-வது நாளில் அனுஷ்டிக்கப்படும் தந்தேரஸ் திருநாள், 5 நாள் தீபாவளி விழாவின் தொடக்கமாக கருதப்படுகிறது. இது தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் செழிப்பை குறிக்கும் மங்களகரமான பொருட்கள் வாங்க மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது.
அதேநேரம், தங்கமும் வெள்ளியும் கடந்த ஓராண்டில் 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. ஆனாலும், இந்த ஆண்டு தந்தேரஸ் பண்டிகைக்கு மங்களகரமான பொருட்கள் விற்பனை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) தெரிவித்துள்ளது. இதில் தங்கம் விற்பனை மட்டும் ரூ.60 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்றும் இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லி மக்கள் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை அள்ளி உள்ளனர்.
ஹைதராபாத்தில் கோழிப்பண்ணை கண்காட்சி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சர்வதேச கண்காட்சி மையத்தில் வரும் நவம்பர் 26 முதல் 28-ம் தேதி வரை கோழிப்பண்ணை இந்தியா கண்காட்சி (பவுல்ட்ரி எக்ஸ்போ 2025) நடைபெற உள்ளது. இந்திய கோழிப்பண்ணை உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 50 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. இதில் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான நவீன தொழில்நுட்ப தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், புதிய நோய்கள், தீவனம் மற்றும் உர மேலாண்மை, ஆட்டோமேஷன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இத்துறை சார்ந்த லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பங்குச்சந்தை கடுமையாக சரிய வாய்ப்பு: இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணரும் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான கீதா கோபிநாத் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில், "அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகளில் அமெரிக்கர்கள் கடன் வாங்கி அதிக அளவில் முதலீடு செய்திருக்கின்றனர். அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடு செய்துள்ளனர்.
இதற்கு நடுவே, வர்த்தக வரி யுத்தம் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. எனவே, அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சரிவு ஏற்பட்டால் அது 2000-வது ஆண்டில் ஏற்பட்ட டாட்-காம் சரிவை விட மோசமாக இருக்கும். இதனால் அமெரிக்கர்களுக்கு 20 லட்சம் கோடி டாலர் நஷ்டம் ஏற்படும். இது உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி டாலர் நஷ்டம் ஏற்படும்” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT