Published : 08 Sep 2025 06:56 AM
Last Updated : 08 Sep 2025 06:56 AM

ரஷ்ய கச்சா எண்ணெய்யால் என்ன லாபம்?

உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா தனது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு இராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடமிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன.

அதே நேரம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கவில்லை. இதையடுத்து, தனது கச்சா எண்ணெய்யை இந்தியா மற்றும் சீனாவுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 137 டாலரை தொட்ட நிலையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ஒரு பேரல் 60 டாலருக்கு ரஷ்யா விற்பனை செய்தது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் ரஷ்ய எண்ணெய்யின் இறக்கு மதி பல மடங்கு அதிகரித்தது. தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 35% ஆகும். 2020-ல் இது1.5% ஆக இருந்தது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தரவுகளின்படி கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக தினசரி 2.08 மில்லியன் பேரல்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 44% ஆகும். சலுகை விலையில் எண்ணெய் வாங்கியதால் இறக்கு மதி செலவில் 2022-24 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 33 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி உள்ளதாக எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதாகக் கூறி, இந்தியாவுக்கு 25% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். எண்ணெய் இறக்குமதியை நிறுத்தாவிட்டால் அபராத வரி என்ற பெயரில் மேலும் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். சீனாவும் இந்தியாவும்தான் அதிக அளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துத்தான் ரஷ்யா உக்ரைனில் போரை தொடர்ந்து நடத்துகிறது என்பதே ட்ரம்பின் வாதம்.

ஆனால் இந்தியா, ட்ரம்பின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாததால் 50% வரியை அமல்படுத்தி உள்ளது அமெரிக்கா. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது. ஜவுளி வர்த்தகத்தில் போட்டி நாடுகளான வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றின் ஏற்றுமதிகளுக்கு 20% வரி மட்டுமே விதிக்கப்படும் நிலையில், 50% வரியால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்.

அதேநேரம் அமெரிக்காவுக்கு பயந்து ரஷ்யாவிடம் இறக்குமதியை நிறுத்தினால் இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் எண்ணெய் இறக்குமதிக்காக 9 பில்லியன் டாலரும் அடுத்த வருடத்தில் 12 பில்லியன் டாலரும் கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது.

பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயரும் உலகின் கச்சா எண்ணெய் தேவையில் 10% சதவீதத்தை பூர்த்தி செய்யும் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருந்தால், சர்வதேச சந்தையில் தற்போது 65 டாலராக இருக்கும் ஒரு பேரலின் விலை 200 டாலர் வரை சென்றிருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளையும் இது பாதிக்கும். ஒபக் நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும் கூட குறுகிய காலத்தில் ரஷ்யாவின் இறக்குமதியை தவிர்ப்பதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது.

இந்தியாவைப் பொருத்தவரை கனரக டிரக்குகள் புகைவண்டிகள், விவசாய கருவிகள் ஆகியவற்றை இயக்குவதற்கு தேவைப்படும் டீசலை தயாரிப்பதற்கு ரஷ்யாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெய் மிகவும் ஏற்றதாக உள்ளது. இதைத் தவிர்த்தால் வேறு சந்தைகளில் வாங்க வேண்டி இருக்கும். போட்டி காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து நமக்கு கூடுதல் செலவாகலாம்.

தொலைதூரத்திலிருந்து கொண்டு வருவதால் கப்பல் சரக்கு கட்டணம் உயரும். ரஷ்யாவின் எண்ணெய்க்கு மாற்றாக வேறு எண்ணெய்யை பயன்படுத்தினாலும் தரம் வாய்ந்த டீசலை உருவாக்க முடியாது என்றும் கூறப்படுகிறது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டுமானால் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளுடனான எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்.

தற்போது வாங்கி வரும் கச்சா எண்ணெய் அளவை மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதால் கூடுதல் கச்சா எண்ணெய் கேட்கும்போது எந்த சிக்கலும் வராது.

40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டாலும் ரஷ்யாவின் சலுகை விலை சாதகமாக இருப்பதால் அதனை எளிதில் இழந்து விட இந்தியா முன்வராது. கச்சா எண்ணெய் மலிவாக கிடைத்த போதிலும் அதன் பலன் நுகர்வோரை சென்றடையவில்லை என்பதுதான் உண்மை.

மத்திய அரசின் கலால் வரி உயர்வு மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி ஆகியவற்றின் காரணமாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகிய அபாயங்களை கருத்தில் கொண்டு சர்வதேச சந்தையில் எண்ணெய் சப்ளை தடைபடாத வண்ணம் படிப்படியாக கச்சா எண்ணெய் இறக்குமதி மேலாண்மை நிர்வாகத்தை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

- ajhajamohideen17@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x