Last Updated : 03 Aug, 2025 04:42 PM

 

Published : 03 Aug 2025 04:42 PM
Last Updated : 03 Aug 2025 04:42 PM

ஆசியாவின் டிஜிட்டல் பொருளாதார நுழைவு வாயில் இந்தியா - சிங்கப்பூர் கட்டமைப்பு: மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பேட்டி

சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் வரும் 9-ம் தேதி கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை நடத்​துகின்​றன. இசை, நாடகம், ஆவணப் ​படம், அரசி​யல், கலை, கலாச்​சா​ரம், சமையல், குழு விவாதம், கருத்​தரங்​கம் என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இத்​திரு​விழா அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் கடந்த 1-ம் தேதி கோலாகல​மாக தொடங்​கியது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இந்தியா கனெக்ட்: சிங்கப்பூர் எடிஷன்’ என்கிற தலைப்பில் தூதரக உறவு, வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த விவாதம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா, சிங்கப்பூர் இடையிலான உறவு குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளரும் 1989-ம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் பங்கேற்கிறார். இந்தப் பின்னணியில் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

டிஜிட்டல் ஒத்துழைப்பில் இந்தியா-சிங்கப்பூர் இடையே அமைந்த அடித்தளத்தை விவரிக்க முடியுமா?

கடந்த 20024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semi-conductor) உற்பத்தி தொடர்பாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் அரசுகளுக்கு இடையே இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்படி குறைக்கடத்தி உற்பத்தியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் டிஜிலாக்கர், மின்னணு முறையிலான கையொப்பத்தை பரஸ்பரம் அங்கீகரிப்பது, தரவு நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை கையாளுவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பில் ஒத்துழைப்பு மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி வடிவமைப்பு போன்ற டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது எனவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

யுபிஐ செயலி வழி பணப் பரிவர்த்தனைகளின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளில் உள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது? பணப் பரிவர்த்தனைகளுக்கு அப்பால் இந்த செயலியின் விரிவான செயல்பாடுகள் என்ன?

இந்தியாவின் யுபிஐ பணப் பரிவர்த்தனை செயலி கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கி மற்றும் லிக்விட் பே நிறுவனங்களுடன் 6 இந்திய வங்கிகள் இணைந்து இந்த செயலியின் சோதனை முயற்சியை மேற்கொண்டன.

இதனையடுத்து, ஜூலை 16-ம் தேதி வரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு நிதிசார் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக 13-க்கும் மேற்பட்ட இந்திய வங்கிகள் சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கியுடன் இணைந்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பீம், ஃபோன்பே, கூகுள்பே போன்ற செயலிகளும் இதில் இணைந்துள்ளன.

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான நம்பிக்கையில் சைபர் பாதுகாப்பு முக்கிய அம்சமாக உள்ளது. கணினி அவசரகால பாதுகாப்பு குழு மற்றும் சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு முகமை இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கிய நடைமுறைகள் என்ன?

இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சைபர் பாதுகாப்பு முகமை ஆகிய அமைப்புகள் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இணைந்து செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் சைபர் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் குறித்த தகவல்கள், இணையவழி மோசடிகள், தவறான செயல்பாடுகள், நிதி மோசடிகள் போன்ற அச்சுறுத்தலுக்கு எதிரான கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளன.

குறைக்கடத்தி விநியோக சங்கிலியில் சிங்கப்பூர் நிறுவனங்களின் ஆராய்ச்சி & மேம்பாடு, தொகுத்தல், பரிசோதனை குறியீடு மற்றும் சிப்பம் போன்ற துறைகளில் அந்நாட்டு நிறுவனங்களின் நிபுணத்துவம் மற்றும் முதலீடு எவ்வாறு அமையும்?

இந்தியா-சிங்கப்பூர் நாடுகள் இடையே குறைக்கடத்தி அமைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி திறன் மேம்பாடு, நவீன பேக்கேஜிங் துறையில் ஆராய்ச்சி பணிகளை இணைந்து மேற்கொள்வது என்றும் ஒருங்கிணைந்த குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற அம்சங்களுக்கு உயர் முன்னுரிமை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமான சென்னையை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான மத்திய அமைச்சகத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன?

இந்தியாவை உலக அளவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் புவிசார் அடிப்படையில் வரையறுக்கப்படாமல் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயனடையும் வகையில் உள்ளன. இதற்கென மத்திய அரசு, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை பெரிய அளவிலான மின்னணு சாதன உற்பத்தி துறைக்கும் விரிவுபடுத்தி உள்ளது.

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் டிஜிட்டல் வழித்தட கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு நடவடிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?

இந்தியா - சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே கடலுக்கு அடியில் டிஜிட்டல் வழித்தடத்துக்காக கேபிள் வசதியை ஏற்படுத்துவதில் சென்னை முக்கிய பகுதியாக உருவெடுத்து வருகிறது. யுபிஐ செயலி மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்தவெளி வலையமைப்பு போன்ற நிகழ்நேர செயலிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தரவு தொடர்புகளுக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய தரவு வலையமைப்புடன் ஒருங்கிணைந்து 6000-க்கும் அதிகமான செயலிகள் உருவாக்கத்துக்கும், மின்னணு வர்த்தகம், நிர்வாகம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான தரவு பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.

சிங்கப்பூரில் உள்ள சூழல் அமைப்புக்கான தகவல் தொடர்பு நிறுவனங்களுடன் சென்னையைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. இவை, பல்வேறு சாத்தியங்களை ஒருங்கிணைத்து அதிவிரைவான தகவல் தொடர்புகளுக்கான அரசின் திட்டங்களுடன் கூட்டுப்பணி செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளுக்கு இந்தியா-சிங்கப்பூர் இடையேயான கட்டமைப்பு மேம்பாடுகள் நுழைவாயிலாக அமைந்துள்ளது.

சுகாதாரம், விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களில் இந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் முன்னுரிமை வழங்குகிறதா?

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நிதிசார் தொழில்நுட்பம் வலுவான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சுகாதாரம், விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு இணையம் சார்ந்த தொழில்நுட்பம், பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்குவதில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியா - சிங்கப்பூர் இடையே எதிர்காலத்துக்கான டிஜிட்டல் நடவடிக்கைகள் என்னென்ன?

2040-ம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையேயான டிஜிட்டல் ஒத்துழைப்பை உலக அளவில் முன்மாதிரி அமைப்பாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், மற்றும் 6ஜி அலைக்கற்றை சேவை ஆகியவற்றின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் சுகாதாரம், விவசாயம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்ற விவகாரங்களில் தீர்வு காணப்படுகிறது. இவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இந்தியா முன்னணி நாடாக நிலைநிறுத்தப்பட உள்ளது. சைபர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த தரவுகளுக்கான கட்டமைப்புகள் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் வழித்தடம் உறுதி செய்யப்படும். பரஸ்பரம் நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையே தகவல் தொடர்புகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால், பிற அம்சங்களில் இந்தியாவின் செயலிகள் சிங்கப்பூர் டிஜிட்டல் சூழலலை ஒருங்கிணைக்கும் திறனைக் கொண்டுள்ளதா?

இந்திய செயலிகள் டிஜிட்டல் எதிர்காலத்துக்கான தீர்வுகளை வழங்குகிறது. இவை, சிங்கப்பூரின் டிஜிட்டல் சூழல் அமைப்பு மற்றும் உலகளாவிய டிஜிட்டல் நடைமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படும் வகையில் கட்டமைப்புகளை கொண்டுள்ளன. எல்லை தாண்டிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுக்க முடியும்.

இந்தியா - சிங்கப்பூர் நாடுகளிடையே புத்தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான சூழல் அமைப்பு சிறந்த முறையில் உள்ளது. புத்தொழில் நிறுவனங்களை நெறிப்படுத்தவும் மூதலீடு, வழிகாட்டுதல் நெறிமுறைகள், சந்தை வாய்ப்புகளை எளிதாக்குவதற்கான மத்திய அரசின் அணுகுமுறை என்ன?

இந்தியா-சிங்கப்பூர் இடையே எதிர்காலத்தில் புத்தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இரு நாடுகளுக்கும் இடையே புத்தொழில் நிறுவனங்களை நெறிப்படுத்துவதற்கான நடைமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. புத்தொழில் நிறுவனங்களுக்கான மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதன் மூலம், எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் வலுவான அடித்தளத்தை அமைக்க உதவிடும்.

நிதிசார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்புடன் சுகாதாரம், விவசாயம், கல்வி போன்ற துறைகள் தவிர, வேறு எந்த தொழில்நுட்பத் துறைகளுக்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள்?

நிதிசார் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புத்தொழில் நிறுவனங்களுக்கான மையங்கள் மூலம் இதனை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிக்கலான தேசிய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணையம் சார்ந்த பொருட்கள் பிளாக்செயின் மற்றும் ஜெனோமிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வாயிலாக சுகாதாரம், விவசாயம், கல்வி போன்ற துறைகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில், சிங்கப்பூருடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

செயற்கை நுண்ணறிவு துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதற்கும், அதன் பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசின் வியூகம் என்ன? இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுடன் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்?

மத்திய அமைச்சரவை 2024-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி இந்திய செயற்கை தொழில்நுட்ப இயக்கத்துக்கு (இந்தியா ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இயக்கம், நாட்டின் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும், உள்நாட்டு திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏழு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் கீழ், 200-க்கும் மேற்பட்ட பி.டெக்., எம்.டெக். மற்றும் பிஎச்டி மாணவர்களுக்கு இந்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப படிப்புக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான படிப்புகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் 570 தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தை ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்வதில் சிங்கப்பூரின் ஒத்துழைப்பு என்ன?

சிங்கப்பூரின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தை சர்வதேச அளவில் பயன்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோல், யூபிஐ, ஆதார் போன்றவை இந்திய டிஜிட்டல் தளங்களுக்கான தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதற்கு ஏதுவாக பயிலரங்குகள், ஹேக்கத்தான் நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு பொது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உலக அளவிலான பயன்பாட்டுக்கான நம்பகத்தன்மையை சிங்கப்பூர் அதிகரிக்கச் செய்கிறது.

வெப்3 மற்றும் மெட்டாவர்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

வெப்3 தொழில்நுட்பத்தில் பிளாக்செயின் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விஸ்வாஷிய பிளாக்செயின் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களுக்கான மையத்தை சிங்கப்பூர் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா?

குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் பல்வேறு அம்சங்களில் பணியாற்ற மத்திய அரசு தேசிய குவாண்டம் கம்ப்யூட்டிங் இயக்கத்தை அமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிங்கப்பூர் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை சிங்கப்பூரில் உள்ள சட்டத்துடன் ஒப்பிட முடியுமா?

இந்தியா - சிங்கப்பூர் நாடுகளில் நடைமுறையில் உள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், பரஸ்பரம் தங்களது நாடுகளின் தனிநபர்கள் சார்ந்த தரவுகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. கருப்புப்பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கு தகவல் பரிமாற்றங்களை அனுமதிக்கிறது. அதேவேளையில் சிங்கப்பூர் ஏற்றுமதியாளர்கள் பரிமாற்ற வரம்புக்கு உட்பட்டு அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வகை செய்கிறது. குழந்தைகள் குறித்த தரவுகளைச் செயலாக்குவதற்கு முன் அவற்றை சரிபார்ப்பதற்கான பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருடன் டிஜிட்டல் சேவைகள், தரவு சார்ந்த புதுமை மற்றும் எல்லை தாண்டிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது?

சிங்கப்பூருடன் ஒரு விரிவான டிஜிட்டல் வர்த்தக கட்டமைப்பை உருவாக்குவதற்கு பாரம்பரிய மின்னணு வர்த்தகத்துக்கான முழுமையான அணுகுமுறை அவசியமாகிறது. டிஜிலாக்கர், சிங்பாஸ் போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் சான்றிதழ்களின் பரஸ்பர அங்கீகாரம், டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலை நெறிப்படுத்துவதுடன், தடையற்ற எல்லை தாண்டிய தகவல் தொடர்புகளுக்கு உதவிடும்.

இந்தியாவின் டிஜிட்டல் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிங்கப்பூரின் நிபுணத்துவம் எவ்வாறு பங்களிக்க முடியும்?

நாட்டின் கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் சக்ஷர்தா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஆறு கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நாடு முழுவதும் 6.39 கோடிக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் உள்ளடக்கத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை அதன் தொழில்துறை தேவைகளை சார்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் பிளாக்செயின் போன்ற துறைகளில் எதிர்கால தேவைகளுக்கு பணியாளர்களை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் என்ன?

டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகின் மையமாக இந்தியா உருவெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் பிளாக்செயின் போன்ற துறைகளில் எதிர்கால வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதற்கான திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்கும் வகையில் டிஜிட்டல் திறன் மேம்பாடு, கல்வி ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்துறை சீரமைப்பு போன்ற பன்முக உத்திசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாடு தழுவிய இந்த முயற்சி 22 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கற்கும் முயற்சியில் உள்ளனர். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பெரும்பாலான மக்களுக்கு தொழில் துறை சார்ந்த டிஜிட்டல் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறன்களை முறையான கல்வியுடன் ஒருங்கிணைத்து, கல்வி, தொழில் துறைக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கானத் தளமாக சிங்கப்பூரைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் முன்னெடுப்புகள் என்ன?

சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மையமாக உள்ளது. இதன் காரணமாக தொழில்நுட்ப விரிவாக்கப் பணிகளுக்காக சிங்கப்பூரை மையமாக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் இருதரப்பு வழிமுறைகளை நிறுவனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா - சிங்கப்பூர் நாடுகள் இடையே டிஜிட்டல் துறைக்கான பரிந்துரைகள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கூற முடியுமா?

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான மன்றம் டிஜிட்டல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மன்றத்தின் முக்கிய பரிந்துரைகள் தகவல் பரிமாற்றத்துக்கான புத்தொழில் நிறுவனங்களின் மூலம் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன், எதிர்காலத்துக்கு தேவையான தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகின்றன.

செமிவெர்ஸ் முன்முயற்சியின் கீழ் ஆராய்ச்சி, குறைக்கடத்தி உற்பத்தி இயக்கம், இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் குறைக்கடத்தி உற்பத்திக்கான தொகுப்பை விரிவுபடுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் அடிப்படையிலான டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

உலகளவில் புகழ்பெற்ற நிபுணத்துவம் கொண்ட சிங்கப்பூரில் பொலிவுறு நகரங்கள் மேம்பாடு உள்ளிட்ட பிற துறைகளில், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் டிஜிட்டல் கூட்டாண்மையை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

நவீன நகர்ப்புற மேம்பாட்டில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி இந்தியாவில் நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் 100 -க்கும் மேற்பட்ட நகரங்களில் பெரிய அளவிலான மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. மேம்பட்ட தொழில்நுட்பங்களை நகர்ப்புற வடிவமைப்புடன் ஒருங்கிணைப்பது மிக முக்கியமானது. இதற்கென கூட்டு உருவாக்கம், உள்ளூர்மயமாக்கல் மற்றும் அளவுருக்கள் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்ட இந்த கூட்டாண்மை இரு நாடுகளுக்கும் பயனளிப்பதுடன், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நகரங்களுக்கு முன்மாதிரியாக அமையும்.

சர்வதேச அளவில் டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்தவெளி வலையமைப்புக்கான, வாய்ப்புகளில், சிங்கப்பூர் முதல் கூட்டாண்மைக்கான நாடாக இருக்க முடியுமா?

டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்தவெளி வலையமைப்பை உள்ளடக்கிய டிஜிட்டல் வர்த்தக சூழல் அமைப்பை செயல்படுத்துவதன் மூலம் மின்னணு வர்த்தகத்தில் முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது. அதன் தொகுக்கப்படாத கட்டமைப்பு, வாங்குவோர்-விற்பனையாளர் தளங்களில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ’சைபர் சுரக்‌ஷித் பாரத்’ திட்டம் உள்ளது. இது, அரசு, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்ட தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த ஐடி அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் இந்தியாவின் கணினி அவசரகால மீட்புக் குழுவால் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகும்.

விரைவான வளர்ச்சி கண்டுவரும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் மத்திய அரசின் பங்களிப்பு குறித்து தங்களது கருத்து என்ன?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அடிப்படை மாற்றத்துக்கான கொள்கைகளை உருவாக்குவதில் அரசின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டங்கள், உரிமங்கள் மற்றும் இணக்க நடைமுறைகளுக்கான கட்டமைப்புகள் ஆகியவை தொழில்நுட்பங்களின் பயன்பாடு, கட்டுப்பாடு, மேற்பார்வை உள்ளிட்ட அம்சங்களில் போதிய கவனம் செலுத்த வகை செய்கிறது. விரைவான வளர்ச்சி கண்டுவரும் புதுமை சார்ந்த டிஜிட்டல் பொருளாதாரத்தில் இவைமட்டுமின்றி சூழல் அமைப்புகளை எளிதாக்குவதற்கும், அதன் செயலாக்கத்துக்கும் உதவுகிறது. இதன் மூலம் ஆதார், யூபிஐ மற்றும் டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதாகும்.

இறுதியாக, இந்தியா - சிங்கப்பூர் இடையே 2040-ம் ஆண்டில், முழுமையான டிஜிட்டல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

2040-ம் ஆண்டில், இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் கூட்டாண்மை, உலகளாவிய முன்மாதிரியாக இருக்கும். இரு நாடுகளின் டிஜிட்டல் தளங்களுக்கு இடையேயான தடையற்ற செயல்பாடுகள், யூபிஐ-பேநவ் இணைப்புகள் மற்றும் இதர டிஜிட்டல் ஒத்துழைப்புகள் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சேவைகளை செயல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் 6ஜி மொபைல் சேவை போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் இரு நாடுகளையும் முன்னோடி நாடுகளாக நிலைநிறுத்தும். சுகாதாரம், விவசாயம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்கும். இணக்கமான தரவு மற்றும் சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் வழித்தடத்தை உறுதி செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x