Published : 21 Apr 2025 11:44 AM
Last Updated : 21 Apr 2025 11:44 AM

தங்கம் விலை மேலும் உயருமா?

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது.  இன்னும் உயரக்கூடும் என்று சிலரும்,  இல்லை 38 சதவீதம் வரை விலை இறங்கும் என்று அமெரிக்காவில் பங்குச் சந்தை நிபுணர் ஒருவர் சொல்லியதை வைத்து மற்ற சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் தங்கம் பற்றிய ஏதாவது ஒரு செய்தி தொடர்ந்து வர, சாதாரண மக்களும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இன்னும் விலை உயரக்கூடும் என்பதால் உடனே வாங்கி விட வேண்டுமா? அல்லது பெரிதாக இறங்கக் கூடும் என்பதால், வாங்காமல் காத்திருக்க வேண்டுமா? என முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

சாதாரணமாக வருமானம் எதையும் தராமல் விலை உயர்வு மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிற தங்கம்,  சமீபத்தில் மிக அதிக அளவில் விலை உயர்ந்திருப்பதற்கான காரணங்கள் ஒன்றல்ல. பல. இந்தியா, சீனா போன்ற தேசங்களில் தங்க ஆபரணங்களுக்கு பெருமதிப்பு இருக்கிறது. அதனால்  அனைத்து தரப்பு மக்களும் சிறிதள வேனும் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொடர்ந்து வாங்குகிறார்கள். ஆபரணமாக மட்டும் தங்கம் பயன்படுவதில்லை. 

அதை, பணத்தை பாதுகாப்பாக வைக்கும் வழி என்று சிலரும் தொடர்ந்து விலை உயர்வதால் லாபம் சம்பாதிப்பதற்கான வழி என்று முதலீட்டாளர்களும் கருதுகின்றனர். அத்துடன் உலக நாடுகள் தங்கத்தை அந்நியச் செலவாணி கையிருப்பாக பார்க்கிறார்கள்.

இதனால் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள். சேமிக்கும் பணத்தை முதலீடு செய்ய, பாண்டுகள், வங்கி டெபாசிட்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட், பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் கிரிப்டோ கரன்சி என பல இருந்தாலும்,அதிகம் பாதுகாப்பானதாகப் பார்க்கப்படுவது தங்கம்.

குறிப்பாக ஆபத்தான காலத்திலும் மதிப்பு குறையாதது மட்டுமின்றி மற்றவற்றின் மதிப்பு குறையும் நேரங்களில் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். அதனால் தங்கத்தை மிகவும் பாதுகாப்பானதாக (சேப் ஹெவன்) ஆகப் பார்க்கிறார்கள். சீனாவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, ரியல் எஸ்டேட் விலைகள் குறைகின்றன, பங்குச்சந்தை உயரவே இல்லை என்பது போன்ற காரணங்களினால் பெரும்பாலான மக்கள் தங்களுடைய முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பினார்கள்.  சிறிய அளவுகளில் தொடர்ந்து தங்கத்தை வாங்குகிற பழக்கம் அங்கே வந்துவிட்டது.

அதனால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துவிட்டதாக சொல்லப்பட்டது. சமீப ஆண்டுகளில் தங்கத்தின்  விலை உயர்வை தொடக்கி வைத்தது, ரஷ்யா, உக்ரைன் இடையிலானபோர். அதைத் தொடர வைத்தது, பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையிலான போர்.  அவற்றைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் செய்த அதிரடி பொருளாதார மாற்ற  முடிவுகள்.

அமெரிக்க பத்திரங்கள் விலை இறக்கம்: உலக அளவில் அரசியல் பொருளாதார நிலைமை சரியாக இல்லை; தேசங்களுக்குள் வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை; அதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் சுணக்கங்களை நோக்கி நகரும் ஆபத்து ஆகியவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாகி உள்ளன.  இவையெல்லாம் தவிர,  தங்கத்தின் தொடர் விலை ஏற்றத்துக்கு மற்றொரு முக்கிய காரணமாக தற்போது இணைந்திருப்பது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிடும் பத்திரங்ககளின் விலை இறக்கம்.

தங்கத்துக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால்,  வட்டி தருகிற காரணத்தினால்  தங்கத்தை விட சற்று கூடுதல் மதிப்பு கொண்டதாக அமெரிக்க பெடரல் ரிசர்வின் பத்திரங்கள் விளங்குகின்றன. உலக அளவில்  நிச்சயமற்ற தன்மை நிலவும் காலகட்டங்களில் உலக நாடுகள் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் மற்றொரு புகலிடமாக பத்திரங்கள் இருக்கும்.

ஆனால், பரஸ்பர வரி விவகாரத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு, பெரும் சிக்கல்களை உருவாக்கும் அமெரிக்காவுக்கு எதிர்வினையாற்ற, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தங்களிடம் இருக்கிற அமெரிக்க பத்திரங்களை  விற்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால் மற்றொரு சேப் ஹெவனாக விளங்கும் அமெரிக்க பத்திரங்களின் கவர்ச்சி குறைய, முதலீட்டாளர்களின் ஒரே புகலிடமாக தங்கம் மாறுகிற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடரலாம் அல்லது மாறலாம். சர்வதேச சந்தைகளில் தங்கம் என்றால் அது 999.9% சுத்தமான 24 காரட் தங்கம்தான்.

இங்கிலாந்தில் இருக்கிற ‘லண்டன் மெட்டல் எக்ஸ் சேஞ்ச்' மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ‘காமிக்ஸ்'  ஆகிய சந்தைகளில் நடைபெறும் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை முடிவாகிறது.  அங்கே அவுன்ஸ் அளவில் வர்த்தகமாகிறது.  விலைமதிப்பு வைக்கப்படுவது அமெரிக்க டாலரில்.

இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அதற்கு டாலரில் பணம் கொடுக்க வேண்டும். அதன் காரணமாக தினசரி மாறுபடும் அமெரிக்க டாலர் மதிப்பின் ஏற்ற இறக்கமும் தங்கத்தின் விலையில் தாக்கம் கொடுக்கிறது.  டாலர் மதிப்பு அதிகரித்தால் அதனாலும் இந்தியாவில் தங்கம் விலை கூடுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது பேசிக் கஸ்டம் டூட்டி மற்றும் சர் சார்ஜ் என்ற வகைகளில் 6+1.25% வரி போடப்படுகிறது. இது சதவீதக் கணக்கில் இருப்பதால், ஏறும் விலையை மேலும் கூட்டும்.

எனவே தங்கம் விலை குறைய வேண்டு மென்றால் அதற்கு மேலே சொன்ன மூன்றும் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றாவது குறைய வேண்டும். குறிப்பாக அடிப்படை விலை குறைய வேண்டும்.சர்வதேச சந்தைகளில் வர்த்தகமாகும் 24 காரட் தங்கம்  விலை குறிப்பிடப்படும் அளவு அதாவது யூனிட், அவுன்ஸ் கணக்கில். விலை மதிப்பு சொல்லப்படுவது அமெரிக்க டாலரில். கட்டுரை எழுதப்படுகிற நேரம்  ஒரு அவுன்ஸ் சொக்கத் தங்கத்தின் விலை 3323 டாலர். அவுன்ஸ் என்பது 28  கிராம்.  ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 118.67 டாலர் (ரூபாய் மதிப்பில் 10,135).

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றனவே அதனால் தங்கம் விலை உயரத்தானே செய்யும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை மோசம் அடையும் போதெல்லாம் தங்கத்தின் விலை உயரும் என்பது சில பல ஆண்டுகளாக சந்தையில் இயங்குபவர்களுக்கு தெரியும். அவர்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் விலை  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 

இறங்க வாய்ப்பு: தங்கமே ஆனாலும் சந்தையில் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஒரு அளவுக்கு மேல் உயர்ந்தால்,  சற்று இறங்கித்தான் மீண்டும் உயர முடியும்.   இதுபோல 2020-ம் ஆண்டு மிக அதிகம் உயர்ந்த தங்கத்தின் விலை பின்பு இறங்கியது என்பதை சுட்டிக்காட்டும் ‘டெக்னிக்கல் அனாலிசிஸ் வல்லுநர்கள், இப்போதும் அதுபோன்ற ஒரு நிலை வரும் என்கிறார்கள்.

2020-ல் கரோனா வைரஸ் தாக்கத்தால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்ததால், தங்கம் கிராமுக்கு சுமார் ரூ.1,000 (20%) உயர்ந்தது. அதன் பிறகு கிராமுக்கு சுமார் ரூ.1,000 குறைந்தது. பின்னர் 2022-ல் மீண்டும் உயர்ந்தது (அட்டவணையில் பார்க்கலாம்) 24 காரட் தங்கம்  அதிகபட்சமாக அவுன்ஸ் 3280 டாலர் வரை போகக்கூடும். 

அந்த விலையில் அல்லது அதற்கு முன்பாக நிச்சயமாக அது 3000  முதல் 2800 டாலர் வரை விலை இறங்க வாய்ப்பு உள்ளது என்று கணித்திருந்தார்கள். ஆனால் அதையும் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே, மிக அதிகம் வாங்கப்பட்டுவிட்டது (ஓவர் பாட் ஜோன்) என்ற நிலையை எட்டி உள்ளது. எனவே, உடனடியாகவோ அல்லது சற்று உயர்ந்தோ இறங்கலாம்.

ஒருவேளை லாப நோக்கோடு குறைந்த பணத்தில் அதிக அளவு தங்கத்தை வாங்க ஒப்பந்தம் (டிரைவேட்டிவ்ஸ்) போட்டு இருப்பவர்கள், அதிலிருந்து வேகமாக வெளியேறி கிடைத்த லாபத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அப்படி நடந்தால், அந்த நேரத்தில் தங்கத்தின் விலை வேகமாகக் குறையக்கூடும்.

எனவே, உடனடித் தேவைகளுக்கு தங்கம் வாங்கலாம்.  குறுகிய காலத்தில்  விலை ஏற்றம் பார்க்கலாம் என்கிற வர்த்தக நோக்கத்தோடு வாங்குவதை தவிர்க்கலாம்.  விலை கணிசமாக இறங்கினால் வாங்கலாம். அல்லது பரஸ்பர நிதியில் எஸ்ஐபி முறையில் சிறிய அளவுகளில் தொடர்ந்து வாங்கலாம். காரணம் நீண்டகாலம் எனப் பார்க்கையில் இடையில் இறங்கினாலும், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரவே செய்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்

- writersomavalliappan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x