Published : 15 Oct 2016 12:51 PM
Last Updated : 15 Oct 2016 12:51 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச் சாலை விரிவாக்கம் என்ற தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரூ. 680 கோடி செலவில் பெரிய அளவில் நடைமுறைப்படுத்தும் பணி சமீபகாலம்வரை நடைபெற்றுவந்தது. பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல். இந்த இடத்தில் மனிதனுக்காகச் சாலையா அல்லது சாலைக்காக மனிதனா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பு 1680 சதுரக் கிலோமீட்டர். அதில் 600 சதுரக் கிலோ மீட்டர் மலைப்பகுதி என்பதால், எஞ்சியுள்ள பகுதியில் வளமான நிலப்பகுதி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 180 அடி முதல் 200 அடி அகலம் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பது இயற்கையைப் பெருமளவு அழிக்கிறது. சாலை விரிவாக்கப் பணியால் பாசனக் குளங்கள் மூடப்படுவதால், விவசாயமும் விவசாயிகளும் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் சுற்றுச்சூழலைச் சீரழித்து, லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, நூற்றுக்கணக்கான பாசனக் குளங்களை அழித்து நான்கு அல்லது ஆறு வழிச்சாலை அமைக்கப்பட வேண்டுமா? இப்படிக் குமரி மாவட்ட நீர்வளங்களை மண் இட்டு நிரப்புவதன் மூலமும், மரங்களை வெட்டுவதன் மூலமும் எதிர்காலத்தில் இந்த மாவட்டம் நீர்வளமற்ற பாலைவனமாக மாறும் சாத்தியம் அதிகமாகியிருக்கிறது.
சங்கிலிப் பிணைப்பு அழிப்பு
இந்தப் பின்னணியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்திலும் மதுரை தேசியப் பசுமை தீர்ப்பாயத்திலும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையும் பூமி பாதுகாப்பு சங்கமும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் திட்டம் முடியும் தறுவாயில் உள்ளதாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், 100 ஆண்டு பழமையான மூன்று லட்சம் வளர்ந்த மரங்கள் (தென்னை, பனை, புளி, தேக்கு) வெட்டப்பட்டுவருகின்றன. 120-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும், 1500 ஹெக்டேருக்கு மேலான வயல்வெளியும், 1,420 வாய்க்கால்களும், நூற்றுக்கணக்கான காட்டு ஓடைகளும் அழிந்துவிடும் சாத்தியம் இருக்கிறது.
புவியியல் ரீதியாகக் குமரி மாவட்டம் கிழக்கில் இருந்து மேற்காகச் சரிந்து காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் இருந்து புவியீர்ப்பு விசை காரணமாக வரும் பாசனத் தண்ணீர், ஒரு குளத்தை நிரப்பிய பின் அடுத்த குளத்தை நிரப்பும் வகையில் சங்கிலித் தொடர் போல் 2,400 குளங்கள் மூலம் 16,000 ஹெக்டேர் வயல்வெளிக்கும், 12,000 ஹெக்டேர் தென்னந் தோப்புகளுக்கும், 6,000 ஹெக்டேர் வாழைத் தோட்டங்களுக்கும், ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகளுக்கும் - குடிநீர் கிணறுகளுக்கும், 60 கோயில் குளங்களுக்கும் நீர் தந்துவருகிறது. சாலை விரிவாக்கப் பணியால் இந்தச் சங்கிலி பின்னல் சிதைந்து அழியும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இரண்டு லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால் குமரி மாவட்டப் பசுமை பரப்பு அழிந்து, எதிர்காலத்தில் மாவட்டத்தின் நீர் ஆதாரங்கள் வறண்டு போக அதிகச் சாத்தியம் இருக்கிறது. இந்தப் பாசனக் குளங்களைப் புறம்போக்கு நிலம் என்று அரசு கருதுவதுதான், அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம்.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு
அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை 47, 47 பி விரிவாக்கத்துக்கு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதற்கு முன், இந்தப் பணிக்காக மரங்களை வெட்ட மாட்டோம், குளங்களை அழிக்க மாட்டோம் என்று திட்ட அதிகாரி உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை 47, 47 பி நான்கு வழிச்சாலையின் பாதையில் உள்ள குளங்களை மூடக்கூடாது, மரத்தை வெட்டக் கூடாது என்றும் சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயம் (தெற்கு) நீதிபதி கடந்த மாதம் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த ஆணையில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்றை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்ததுடன், இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 17-ம் தேதி பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
ஆனால், அதற்குப் பிறகும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்ததாரர்கள் மரங்களை வெட்டி சட்டத்தை மீறினர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. சமூகச் செயல்பாட்டாளர் எம்.ஜி.தேவசகாயம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியைத் தொடர்வது நீதிமன்ற அவமதிப்பு என்று முறையிட்ட பிறகு, பசுமைத் தீர்ப்பாய ஆணையைப் பின்பற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
முறையற்ற மரம் வெட்டுதல்
கண்மூடித்தனமான இயற்கை அழிப்பு ஒருபுறம் என்றால், மற்றொரு சட்டமீறலும் நடந்துவருகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டப் பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் உண்டு. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.ஹெச்.ஏ.ஐ) ஒப்பந்ததாரர் லார்சன் அண்ட் டூப்ரோ விதிமுறைகளைப் பின்பற்றாமல், கன்னியாகுமரி மாவட்ட அரசு நிலங்களில் இருந்து 1.5 லட்சம் மரங்களை வெட்டி விற்றிருக்கிறது.
அரசு மரங்களை வெட்ட முறைப்படி அனுமதி பெற வேண்டும். மரங்களின் தரம், எண்ணிக்கை, விலை நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்போது, ஒப்பந்த மதிப்பின் ஒரு பகுதியை அரசு கருவூலத்தில் ஒப்பந்ததாரர்கள் செலுத்த வேண்டும்.
வெட்டப்பட்ட மரங்களுக்கு அரசு சிறு தொகையை நஷ்டஈடாகக் கொடுத்திருந்தாலும், மர விற்பனையில் கிடைத்த விலை அரசையே சேர வேண்டும். இந்தத் தொகை பொதுக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. இதற்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறை பதில் அளிக்க வேண்டும்.
இயற்கை பாரம்பரியம் சிதைவு
கேரளா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 47-ல் இருந்த மரங்களை வெட்டுவதற்கு அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி ஊடகத்திலும், ஒப்பந்தப்புள்ளி எடுப்பதற்குத் தகுதியுள்ள நிறுவனத்துக்கு எழுத்து பூர்வமாகவும் ஒப்பந்தப்புள்ளியை அனுப்பியுள்ளார். அந்த ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படுவதற்கு முன்பாகவே, மரங்கள் வெட்டப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இந்த மரம் வெட்டும் விவகாரத்தில் நடைபெற்ற சட்டமீறல்கள் ஆராயப்பட வேண்டும்.
இப்படிப் பொருளாதார நஷ்டம் பெருமளவு இருக்கும் அதேநேரம், இந்தப் புதிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி கன்னியாகுமரி மாவட்டத்தின் நிலஅமைப்பியலை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பணி காரணமாக மாவட்ட இயற்கைப் பாரம்பரியத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
கட்டுரையாளர் - குமரி மாவட்டச் சூழலியல் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: richardlalmohan2012@yahoo.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT