Last Updated : 25 Apr, 2022 01:29 PM

 

Published : 25 Apr 2022 01:29 PM
Last Updated : 25 Apr 2022 01:29 PM

தேசியக் கொடியின் கண்ணியத்தைக் காக்க நம்மை அழைக்கும் SaveIndianNationalFlag ஹேஷ்டேக்

#SaveIndianNationalFlag

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுதந்திர தினம் அன்று தேசியக் கொடியை கைகளில் ஏந்தியோ, மார்பினில் குத்தியோ தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்துவது வாடிக்கை. நம்முடைய 75ஆம் சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நம்முடைய தேசியக்கொடியின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. தேசியக் கொடியின் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களைக் களமிறக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. இதுவரை காதியில் மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நம்முடைய தேசியக் கொடியின் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கு #SaveIndianNationalFlag ஹேஷ்டேக் நமக்கு டிவிட்டரில் அழைப்பு விடுக்கிறது. இன்று மாலை நான்கு மணிக்கு அந்த ஹேஷ்டேக்கில் இணைவதன் மூலம் நாமும் கொடி காக்கும் முயற்சியில் பங்கேற்கலாம்.

ஒரே இடத்தில் மட்டும் தயாரிக்கப்படும் தேசியக்கொடி

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தேசியக் கொடி காதியில்தான் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மரபாக, சட்டமாக இருந்துவருகிறது. தேசியக் கொடியை உருவாக்கத் தேவையான கதர்த் துணிகள் கர்நாடக மாநிலத்தில் உள்ள‘பாகல் கோட்’என்கிற இடத்தில் நெய்யப்படுகின்றன! அதன் பிறகு அவை வண்ணம் ஏற்றப்படுகின்றன.அவ்வாறு வண்ணம் ஏற்றப்பட்ட துணிகள் இந்தியத் தர நிர்ணய சங்கத்திற்குத் தரப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அங்கே சான்றிதழ் பெறப்படுகின்றன. பின்னர் அவை ஹூப்ளியில் உள்ள காதி கிராமோத்யோக் சங்கத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. அவை இந்தியத் தர நிர்ணயக் கழகத்தால் வரையறுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவில் வெட்டப்பட்டுத் தைக்கப்படுகின்றன. பின்னர் தேசியக் கொடியின் மையத்தில் அசோகச் சக்கரம் தனியாகப் பொறிக்கப்படுகிறது! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்கள் பயன்படுத்தும் தேசியக் கொடியை இந்த ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது! ஆம், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள‘காதி கிராமோத்யோக் சங்கம்’மட்டுமே இந்தியா முழுமைக்கும் தேவையான தேசியக் கொடிகளை உற்பத்தி செய்து தருகிறது.

காதியின் நலனைப் புறந்தள்ளுகிறதா ஒன்றிய அரசு?

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களின்போது தனியார் நிறுவனம் ஒன்று ஹூப்ளியில் உள்ள காதி பவனிடம் நாடு முழுவதும் விநியோகிக்க ஞெகிழியால் தயாரிக்கப்பட்ட மூன்று லட்சம் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்து தருமாறு விண்ணப்பித்தது. ஆனால், கதர், கதர்பட்டு, அல்லது கம்பளி இழைகள் செறிவூட்டப்பட்ட கதர்த்துணி ஆகியவற்றைக்கொண்டு மட்டுமே தேசியக் கொடிகளைத் தயாரிக்க வேண்டும் என்பது சட்டம். ஞெகிழி, பாலித்தீன், நைலான், பாலியஸ்டர், ரெக்ஸின் போன்ற செயற்கை இழைகளைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கக் கூடாது என்பதால், அப்போது அதன் தலைவராய் பணிபுரிந்த பி.எஸ்.பாட்டீல் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இந்தச் சூழலில், ஒன்றிய அரசு சமீபத்தில் இயந்திரத்தால் செய்யப்பட்ட பாலியஸ்டர் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்யவும் இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது.

இதற்கிடையில், ஒன்றிய அரசு தன்னுடைய பல்வேறு கிளைகளின் மூலம் செயற்கை இழை உள்ளிட்ட மில் துணியால் செய்யப்பட்ட கொடிகளுக்கான ஆர்டர்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிவருகிறது. காதிபவன்களுக்கு ஆர்டர் வழங்கப்படவில்லை. கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் காதி கைவினைஞர்கள் அதிலிருந்து மீண்டெழ முயலும் சூழலில், ஒன்றிய அரசின் இத்தகைய புறக்கணிப்பு, இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக இன்றும் எஞ்சி நிற்கும் காதி கைவினைஞர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் மட்டுமல்ல; மிகவும் ஆபத்தான போக்கும்கூட.

காதியே நம்முடைய நாட்டின் அடையாளம்

காதியையும், காதி கொடியையும் புறக்கணிப்பது என்பது, நம்முடைய நாட்டின் புனிதம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றைப் புறக்கணிப்பதற்கு ஈடானது, முக்கியமாக, காந்தியையும், காந்தியின் கொள்கைகளையும் புறக்கணிக்கும் செயல் அது. ஒன்றிய அரசு இதனை உணர்ந்து, தேசியக் கொடி தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். காதி கொடிகளின் பயன்பாட்டை அது உறுதிசெய்ய வேண்டும். இன்று மாலை நான்கு மணிக்கு #SaveIndianNationalFlag ஹேஷ்டேக்கில் இணைவதன் மூலம் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியில் நாமும் பங்கேற்கலாம்; தேசியக் கொடியின் கண்ணியத்தைக் காக்கலாம்; காதி தொழிலாளர்களின் வாழ்வில் விளக்கேற்றலாம்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x