Published : 26 Mar 2022 08:13 AM
Last Updated : 26 Mar 2022 08:13 AM

கல்லூரிக்குள் ஒரு பசுமை உலா

விளாம் பழம்

சி. ஜோசப் பிரபாகர்

இளங்கலை மாணவர்கள் மூன்று ஆண்டுகளும், முதுகலை மாண வர்கள் இரண்டு ஆண்டுகளும் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்கள் படித்த கல்லூரியில் குறிப்பிட்ட கட்டிடத்தைப் பற்றியோ அரங்கைப் பற்றியோ கேட்டால், சட்டென்று அடையாளம் கூறி விடுவார்கள். ஆனால், அதே கல்லூரியில் விளா மரங்கள் எங்கிருக்கின்றன,சரக்கொன்றை மரங்கள் எந்த மாதத்தில் பூக்கும் என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு அப்படி ஒரு மரம் இருப்பதோ, எங்கிருக்கிறது என்பதோ தெரியாது. இப்படித் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் பாடத்திட்டம், தேர்வுகள் சார்ந்து மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கை அம்சங்களில் போதிய கவனம் திருப்பப்படுவதில்லை என்பதுதான்.

ஒவ்வொரு கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள் மேற்கண்ட மரங்களின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள், நேரத்தைக் கழித்திருப்பார்கள், மழைக்கு ஒதுங்கி இருந்திருப்பார்கள், மலர்களின் நறுமணத்தை முகர்ந்திருப்பார்கள். ஆனால், அந்த மரத்தைக் குறித்த அடிப்படைப் பிரக்ஞை அவர்களிடம் இருப்பதில்லை.

சூழலியலைத் தெரிந்துகொள்ளவும் நேசிக்க வேண்டுமென்றும் ஒருவர் நினைத்தால், முதலில் தன்னைச் சுற்றி உள்ள மரம், செடிகொடிகளைக் கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். அது எந்தக் காலத்தில் பூக்கிறது, எப்போது காய்க்கிறது, எப்போது கனி தருகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இது விலங்கியல், தாவரவியல் மாணவர்களுக்கானதுதானே என்கிற குறுகிய நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. மரங்கள் இல்லையென்றால் மனிதர்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது. பூவுலகின் இன்றியமையாத அங்கம் மரங்கள்.

சரக்கொன்றை மரம்

இயற்கை அழகு

மரங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று இயல் மரம். இன்னொன்று அயல் மரம். இயல் மரங்கள் நமது மண்ணில் இயல்பாக நீண்ட காலமாக வாழ்ந்துவரும் மரபார்ந்த மரங்கள். நமது இலக்கியங்கள், கல்வெட்டுகளில், நினைவுகளில் இம்மரங்களைப் பற்றிய குறிப்பு இருக்கும். பிற்காலத்தில் வணிகர்கள், அந்நியர் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளி நாடுகளிலிருந்து வந்து சேர்ந்தவை அயல் மரங்கள். சென்னை லயோலா கல்லூரியில் இயல் மரங்கள், அயல் மரங்கள் என இரண்டுமே இருக்கின்றன. ஒரு மாணவனாக, ஆசிரியராக அந்தக் கல்லூரியை நேசிப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒரு முதன்மைக் காரணம் கல்லூரியின் இயற்கை அழகு.

விளா மரம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிவருகிறது. தற்போது இம்மரங்களைக் கிராமங்களில் பார்ப்பதுகூட அபூர்வமாகிவிட்டது. இம்மரங்கள் மிக மெதுவாக வளரக்கூடியவை. கல்லூரியில் கணினித் துறையின் பின் பகுதியில் நான்கு விளா மரங்கள் இருக்கின்றன. இந்த விளா மரங்களின் வயது குறைந்தது 40 வருடங்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விளாம்பழங்கள் கிடைக்கும். இது உறுதியாகவும் உருண்டை வடிவத்திலும் இருக்கும். அதிக விட்டமின் சத்துள்ள பழம்.

நாவல் பழங்களை விரும்பாதவர்கள் குறைவு. விஸ்காம் துறைக்கு அருகில் சென்னை மிஷன் கட்டிடத்தின் வடக்குப் பக்கத்தில் ஒரேயொரு மரம் இருக்கிறது. நாவல் மரம் குறித்து தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தாவரவியல் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் நாவலம் தீவு என்கிற பெயரே இருந்திருக்கிறது.

அடுத்து முக்கியமானது இலுப்பை மரம். மிக உறுதியான இந்த மரம், பெரிதாக வளரக்கூடியது. ஒரு காலத்தில் ஏரிக் கரையோரங்களிலும், கோவில்களைச் சுற்றியும் நிறைய இலுப்பை மரங்கள் இருந்தன. இலுப்பை எண்ணெய்யை வைத்துத்தான் கோவில்களில் விளக்கு ஏற்றப்பட்டது. இலுப்பை மரத்தின் பூ, காய், கனி உள்ளிட்ட அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஏரி, குளங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதால் இந்த மரமும் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது. வேதியியல் துறையின் பின் பகுதி வழியாக கேன்டீனுக்குச் செல்லும் பாதையில் நான்கைந்து இலுப்பை மரங்களைப் பார்க்கலாம்.

மயக்கும் மலர்கள்

கிராமங்களில் பிறந்து, வளர்ந்த அனைவராலும் மஞ்சள் நிறப் பூவரசம்பூவை மறக்க முடியாது. பூவின் அரசன் பூவரசு. இதன் அழகு சட்டென்று ஈர்க்கக்கூடியது. பூவரசம் இலையைச் சுருட்டி பீப்பிபோல குழந்தைகள் ஊதி விளையாடுவார்கள். பூவரசங்காயில் தென்னங்குச்சியைக் குத்தி, அதில் பூவரசம்பூவையும் சேர்த்துக் கட்டி தேர்போல செய்து விளையாடிய அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். பூவரச மரம் மிக உறுதியானது. வீட்டின் நிலைக்கதவு, கட்டில் எனப் பல வகைகளில் பயன்படக்கூடியது. இயற்பியல் துறை ஆசிரியர்கள் அறைக்கு அருகில் படிக்கட்டுக்கு வடக்குப் பக்கத்திலும், தண்ணீர்த் தொட்டி அருகேயும் இந்த மரங்கள் உண்டு.

சரக்கொன்றை மரம் பூக்கும் காலத்தில் பார்த்தால், அம்மரத்தைக் காதலிக்க ஆரம்பித்து விடுவோம். ஏப்ரல், மே மாதங்களில் இம்மரம் பூக்கும். அடர் மஞ்சள் நிறத்தில் சரம்சரமாய் பூத்துக் குலுங்கும். அதன் காரணமாகவே அப்பெயரைப் பெற்றது. பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி யாக இருக்கும். இதன் அழகில் அனைவரும் மயங்கிப்போவார்கள். குறுந்தொகை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு எனப் பண்டைய இலக்கியங்களில் இம்மரத்தின் அழகு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சரக்கொன்றை மரத்தின் இலையைப் பொன் வண்டு விரும்பிச் சாப்பிடும். முருங்கைக் காய் போன்று இருக்கும் கறுத்த காய்களில் உள்ள சிறுசிறு விதைகள் நாணயங்களைப் போலிருக்கும். ஜூபிலி கட்டிடத்தில் இயற்பியல் துறைக்குத் தெற்கு பக்கத்தில் மூன்று சரக்கொன்றை மரங்கள் இருக்கின்றன. அதே போல் மாணவர்கள் வாகனம் நிறுத்துமிடத்தின் வடக்குப் பக்க சுற்றுச்சுவரை ஒட்டி ஐந்தாறு சரக்கொன்றை மரங்கள் இருக்கின்றன.

வரலாற்றுத் துறைக்குப் பக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய மரத்தடியில் இருக்கும் சிமென்ட் இருக்கையில் மாணவர்கள் பலரும் அமர்ந்திருக்கலாம். அதுதான் மகிழ மரம். இது மிக அடர்த்தியான நிழலைத் தரக்கூடிய மரம். உச்சி வெயில் நேரத்தில்கூடச் சூரிய ஒளி உள்ளே விழாது. அந்த அளவுக்கு இந்த மரத்தின் இலைகள் அடர்த்தியாக இருக்கும். வெயில் காலங்களில் பூக்கும் இந்த மரத்தின் பூக்கள் மிகச் சிறியதாக இருக்கும். அதைச் சற்றே முகர்ந்து பார்த்தால் கண நேரம் சொர்க்கத்துக்குப் போய் வரலாம். அதன் நறுமணம் அப்படி மயக்கும். இதன் பூக்கள் வாசனைத்திரவியம், ஊதுவத்தி செய்வதற்குப் பயன்படுகின்றன.

பூவரச மரம்

இயல் மரங்கள் முதல் அரிய மரங்கள் வரை

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நுணா பழத்தைப் பறித்துவருவார்கள். தற்போது அந்த மரம் அருகிவிட்டது. சங்க கால மகளிர் நுணா பூவைக் குவித்து வைத்து விளையாடுவார்கள் என்று இலக்கியம் கூறுகிறது. சித்த மருத்துவத்தில் நுணா மரப்பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. கல்லூரி ஆலயத்தின் எதிரேயும் என்விரோ கிளப் எதிரிலும் நுணா மரங்கள் இருக்கின்றன.

கணினித் துறைக்கு எதிரேயும் வேதியியல் துறைக்கு எதிரேயும் ஒதிய மரங்கள் உள்ளன. இவை மிக வேகமாக வளரக் கூடியவை. இவற்றின் கிளையை ஒடித்து வேறொரு இடத்தில் நட்டால்கூட வளர்ந்துவிடும். திருமண நிகழ்வின்போது இம்மரம் சடங்குக்காகப் பெண் வீட்டில் நடப்படுகிறது. பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டுக்குச் செல்லும்போது, விரைவாகப் புதிய சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த ஒதிய மரத்தின் கிளை பெண் வீட்டில் நடப்படுகிறது. ஒதிய மரப் பட்டைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

கல்லூரியிலிருந்து ஆண்கள் விடுதிக்குச் செல்லும் பாதையில் பிரம்மாண்டமான தூங்குமூஞ்சி மரங்கள் இருக்கின்றன. இது ஒரு அயல் மரம். கல்லூரியில் பச்சைக் கிளிகளின் இருப்பிடம் இந்தத் தூங்குமூஞ்சி மரங்கள்தான். பேராசிரியர்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் வித்தியாசமான பெயரில் ஒரு மரம் இருக்கிறது. அதன் பெயர் ‘இருள் மரம்’. மாணவர் வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரே ஒரு பனை மரம் இருக்கிறது. இப்படி இயல் மரங்கள் தொடங்கி அரிய மரங்கள் வரை இந்த வளாகத்தில் உள்ளன.

கல்லூரியில் இருக்கும் சில மரங்களுக்குத் தமிழ், ஆங்கிலப் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதை முறைப்படுத்தி, அனைத்து மரங்களுக்கும் பெயர் எழுதி வைக்கப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு மரத்தைப் பற்றிய குறைந்தபட்ச விவரங்களையும் எழுதிவைக்க வேண்டும். காட்சி ஊடகத் துறை மாணவர்கள், என்விரோ கிளப் மாணவர்கள் இம்மரங்களைப் பற்றி காணொலித் தொகுப்பு ஒன்றை உருவாக்கலாம். மரங்கள் சார்ந்த விவரங்களையும் காணொலியையும் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். அப்போதுதான் இம்மரங்கள் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பரவலாகவும் கவனம் பெறும்.

கட்டுரையாளர், இயற்பியல் உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: josephprabagar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x