Published : 12 Mar 2022 11:15 AM
Last Updated : 12 Mar 2022 11:15 AM

நல்ல பாம்பு - 25: பாம்பு மனிதர்கள்!

மா. ரமேஸ்வரன்

நம் நாட்டில் காணப்படும் காட்டுயிர்கள் குறிப் பாகப் பெரிய பாலூட்டி இனங்கள், பறவைகள், இதர உயிரினங்கள் மீது ஓரளவுக்கு அக்கறை காட்டப்பட்டாலும் ஊர்வன இனங்களின் மீதான கவனம் குறைவாகவே இருக்கிறது. மக்கள் மனத்தில் காலங்காலமாக பாம்புகள் என்றாலே பயமும் அருவருப்புமே மேலோங்கி இருக்கிறது. பாம்பின் நஞ்சு, உருவம், நிறம், ஊர்ந்து போகும் தன்மை, மறைந்து வாழும் இயல்பு போன்றவை அதனை நெருங்க முடியாததாகவும் எளிதில் அறிந்துகொள்ள இயலாத உயிரினமாகவும் ஆக்கியிருக்கிறது. இந்தியாவில் பழங்குடிகள், இருளர்கள் என ஆதிகாலம் தொட்டு ஒரு பிரிவு மக்கள் பாம்புகளை அறிந்திருந்தனர்.

ஒருபுறம் பாம்புகளை மக்கள் வெறுத்தாலும் மறுபுறம் சில மனிதர்கள் பாம்புகளால் ஈர்க்கப்பட்டு அவற்றுடன் இணக்கமானார்கள். இவர்களில் ஒவ்வொருவரின் நோக்கமும் செயலும் வேறுபட்டிருக்கின்றன. மக்களின் விழிப்புணர்வு, வனப் பாதுகாப்புச் சட்டம், பாம்புக் கடிகளால் ஏற்பட்ட உடல் பாதிப்பு போன்றவை ஒன்று சேர்ந்து இன்று பாம்பாட்டி களையும் வித்தை காட்டுபவர்களையும் பார்ப்பதே அரிதாகி விட்டது. பாம்புகளை அதன் வாழ்விடங்களிலே கண்டறிந்து பிடிப்பதில் கைதேர்ந்தவர்களாக அறியப்படும் இருளர்கள் பாம்புகள் சார்ந்த தங்களின் அனுபவ அறிவை ஆராய்ச்சியாளர்களோடு பகிர்ந்திருந்தாலும், ஏனோ அவர்கள் வழிகாட்டியாக மட்டுமே நிறுத்தப்பட்டுவிட்டார்கள். பாம்புகளை மீட்பவர்கள் அண்மையில் அதிகமாகக் காணப்பட்டாலும் சிலர்தாம் அடுத்த கட்டமாகப் பாம்புகள் சார்ந்த ஆராய்சியையும் தேடுதலையும் மேற்கொண்டுவருகின்றனர்.

பேட்ரிக் ரஸ்ஸல்

1700களின் தொடக்கத்தில் பாம்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளை இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த ஆங்கிலேயர்கள் ஆரம்பித்தார்கள். இதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக இத்துறையைச் சார்ந்தவர்கள் அல்ல. பலரும் இத்துறை மீதான ஈர்ப்பால் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களே. இக்காலகட்டத்தில்தான் பல பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுப் பெயரிடப்பட்டன. இன்று நாம் பாம்புகளை எளிதாக அறிந்துகொள்வதற்கு இவர்களின் பங்கு மிக முக்கியமானது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவர்களில் பி.ஜே. டியோரஸ், எம்.வி. இராசேந்திரன், ஜே.சி. டேனியல், டி.எஸ்.என். மூர்த்தி, ரோமுலஸ் விட்டேகர், அசோக் கேப்டன், இந்திரநீல் தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதன் நீட்சியாக அவர்களுக்குப் பின் வந்தவர்களும் பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துள்ளனர்.

கடந்த 30 வருட காலத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்களின் பங்கு இத்துறையைப் பெரும் வளர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய ஊர்வன இனப் பட்டியல் தொகுப்பு, பாம்புகளின் வண்ணப் புகைப்படங்களோடு கூடிய களக் கையேடுகள், எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள் என நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. புதிய உயிரினங்களின் கண்டறிதலும் அதன் தொடர்ச்சியாக அது சார்ந்த விசாலமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும், குறிப்பாக இளம் ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்பும் வரவேற்கத்தக்கது. இத்துறை சார்ந்து படித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு நிகராக இத்துறையில் பின்புலம் அற்ற, தீவிர நாட்டமும் பாம்புகள் சார்ந்து ஆழ்ந்த அறிவையும் பெற்றுப் பலர் ஈடுபட்டுவருகின்றனர். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களின் சந்தேகங்களை இத்துறை சார்ந்து உலகளாவிய வகையில் செயல்படுபவர்களிடம் எளிதில் பகிர்ந்துகொள்வதும் அதற்கான பதிலைப் பெறுவதும் சுலபமாகிவிட்டன. மேலும், இது சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்களை எளிதில் பெற முடிகிறது. இது இந்தியப் பாம்புகள் சார்ந்த ஆராய்ச்சியின் ஒரு முக்கிய காலகட்டமாகப் பார்க்கப்படும்.

ரோமுலஸ் விட்டேகர்

நம் நாட்டில் கல்வி என்பது அறிவைப் பெறுவதைத் தாண்டி வேலைவாய்ப்பையும் அதன் மூலம் பொருளாதாரத்தை ஈட்டும் கருவியாக மட்டுமே இருக்கிறது. நம் நாட்டில் பாம்புகள் அனைத்தும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளதால் வனத்துறையின் அனுமதியின்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவது கடினம். மேலும், இது சார்ந்த கல்வியோ அதற்கான வேலைவாய்ப்போ இல்லாததும் இத்துறை பின்தங்கியிருப்பதற்கு முக்கியக் காரணம். இத்துறையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை அரசு உருவாக்க வேண்டும். பாம்புகள் சார்ந்த விரிவான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதோடு ஆராய்ச்சியாளர்களையும் அங்கீகரித்துத் தக்க உதவிகளைச் செய்ய வேண்டும்.

பாம்புகள் சார்ந்த ஆராய்ச்சிகளில் நாம் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளோம். ஒவ்வொரு பாம்பினத்தின் வாழ்க்கைமுறை, வாழ்விடம், உணவு, இனப்பெருக்கம், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என இன்னும் நாம் கண்டடைய வேண்டியவை அதிகம். இதன் மூலமாகவே நாமும் பாதுகாப்பாக இருந்துகொண்டு, பாம்புகளுக்கும் தீங்கு விளைவிக்காமல் இசைந்து வாழ முடியும்.

கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: oorvana13palli@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x