Published : 19 Feb 2022 11:14 AM
Last Updated : 19 Feb 2022 11:14 AM
பூமியில் மனித இனம் தோன்றுவதற்குப் பல கோடி வருடங்களுக்கு முன்பிருந்தே பாம்பினங்கள் வாழ்ந்து வருகின்றன. பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு அதற்கேற்ற வாறு வெற்றி கரமாகத் தகவமைத்து இன்று எங்கும் காணப்படக்கூடிய உயிரினமாக அவை பரிணமித்திருக்கின்றன. இதனால் மனிதர்களும் பாம்புகளும் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகிறது. பொதுவாகப் பாம்புகள் மனித வாழிடங்களுக்குள் நுழையும்பொழுது பாம்புகளால் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் பாம்புகளுக்கோ தொந்தரவு ஏற்படும் தறுவாயிலேயே பாம்புகள் மீட்கப்படுகின்றன.
முன்பெல்லாம் வீடுகளில் பாம்பு நுழைந்து விட்டால் அல்லது அவற்றின் இருப்பை உணர்ந்தால் அவற்றை லாகவமாகப் பிடிக்கும் இருளர் இன மக்களையோ அல்லது பாம்பாட்டி களையோ அழைப்பார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. பெரும்பாலும் வனத்துறையினர், அல்லது அவர்களுடன் தன்னார்வலர்கள் பங்கெடுக்கிறார்கள். பேரிடர் காலங்களில் பாம்புகளை மீட்பதில் தீயணைப்புத் துறையும் காவல் துறையும் பெரும் பங்காற்றுகின்றன.
அனைவரும் பாம்புகளைக் கையாள்வது சாத்தியமே. ஆனால் மீட்புக் கருவிகளையும் அணுகுமுறைகளையும் மட்டுமே தெரிந்து வைத்திருப்பது கைகொடுக்காது. பாம்புகளை மீட்கும் இடத்தின் புறச்சூழல், பாம்பின் இயல்பு, அங்கு வசிக்கும் மக்களின் மனநிலை போன்ற வற்றை அறிவது மிக அவசியம். இவற்றுடன் தைரியம், குழப்பம் இல்லாமல் இருத்தல், பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறந்தது.
பாம்புகளை மீட்கும்பொழுது அவற்றைக் காப்பாற்ற வந்துள்ளோம் என்பது பாம்புகளுக்குத் தெரியாது. மீட்பவரிடம் எதிர்வினையாற்றுவதோடு கடிக்கவும் முற்படும். இந்நேரத்தில் மீட்பவர் மனதில் ஏற்படும் ஆரோக்கியமான பயமே இருவருக்கும் இடையேயான எல்லையைத் தீர்மானிக்கிறது. பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது. பாம்புகளை மீட்பவர்களை மக்கள் ரட்சகராகப் பார்க்கலாம். ஆனால், அவர்களின் கண்கள் பாம்பின் மீதுதான் இருக்க வேண்டும். இல்லையெனில் பேராபத்து.
சமீப காலத்தில் பாம்புகள் சார்ந்த விழிப்புணர்வும் சமூக வலைத்தளங்களின் தாக்கமும் பல இளைஞர்களை இத்துறையை நோக்கி ஈர்த்திருக்கிறது. பாம்புகளைக் கையாள்வதை வீரதீர சாகசமாக நினைக்கிறார்கள். அடிப்படைப் பயிற்சியற்று பாம்பைத் தன்வசப்படுத்துவதாக நினைத்து வெறுங் கைகளால் பிடிப்பது, பாம்புகளுக்கு முத்தம் கொடுப்பது போன்ற தவறான மனநிலையுடன் எல்லை மீறுகிறார்கள்.
விழிப்புணர்வு என்ற பெயரில் பாம்பை வெகுநேரம் கையில் வைத்தபடியே வேடிக்கை காட்டுகிறார்கள். தொடர்ந்து அதைத் தொந்தரவு செய்து கோபத்தை உண்டாக்கும் பொழுதுதான் பாம்பு கடிக்கிறது. இதனால் பலர் உடல் உறுப்புகளை இழந்ததும், சில நேரம் இறந்தே போவதும் பெரும் சோகம். இச்செயல் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை, கூடவே பாம்புகளுக்கும் பொதுமக்களுக்கும்கூட ஆபத்தாக முடியலாம். விழிப்புணர்வு என்ற பெயரில் இது போன்ற செயல்பாடுகளைப் படமெடுத்து வலைத்தளத்தில் பதிவிடுவதும் தவறு.
பாம்புகள் பரவலாக வாழ்ந்துவருவதால் அவற்றை மீட்பதில் வன ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுவது சாத்தியமற்றது. இதை கருத்தில் கொண்டு ஆர்வலர்களைக் கண்டடைந்து சில மாநிலங்கள் முறையான பயிற்சி அளித்து, தேவையான கருவிகள், வழிகாட்டுதலை வழங்கி யிருக்கின்றன. பாம்புகள் பற்றிய பட்டறிவுடன் கையாள்வதற்குத் தைரியமூட்டும் களஅறிவும் சேரும்பொழுது முழு பாதுகாப்பு கிடைக்கும்.
தங்களின் உயிரைப் பொருட்படுத்தாது நஞ்சுடைய பாம்புகளை மீட்பவர்கள் ஒரு வேளை பாம்புக்கடியை எதிர்கொண்டால் அதற்கான மருத்துவச் சிகிச்சை, இறக்க நேர்ந்தால் இழப்பீடு அல்லது காப்பீடு போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரிதாகக் காணப்படக்கூடிய ராஜநாகங்கள் (கருநாகம்), இப்பொழுது எளிதில் தென்படக் கூடியவையாகிவிட்டன. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் உருவமும் நஞ்சின் தன்மையும் அச்சமடைய வைத்தாலும் இவை மிகச் சாதுவானவை. இவற்றை மீட்பது எளிது. ஆனால் பாம்பு மீட்கும் பலர் இந்தப் பாம்பைக் குறித்துத் தேவையற்று மிகைப்படுத்துகிறார்கள். பாம்பின் தலையை ஒருவர் பிடிக்க, பல பேர் அதைத் தாங்கியபடியே செய்திக்காக போஸ் கொடுப்பதை இன்றைக்கும் நாளிதழில் பார்க்க முடிகிறது. இச்செயல் அவர்களுக்கும் பாம்புக்கும் பெரிய ஆபத்தை உண்டுபண்ணலாம். ராஜநாகங்கள் கடித்தால் அதற்கான நஞ்சுமுறிவு மருந்தில்லை என்பதை உணர வேண்டும்.
பாம்புகளைப் பத்திரமாக மீட்பது மட்டுமே பாதுகாத்ததாக ஆகிவிடாது. மீட்கப்பட்ட பாம்புகள் மீண்டும் மனித வாழ்விடங் களுக்குள் நுழையாதவாறு உகந்த இடத்தில் விடுவிக்கப்பட வேண்டும். இதுபோல விடப்பட்ட பாம்புகள் எந்த அளவிற்குப் பிழைத்து வாழ்கின்றன என்பதற்கான ஆராய்ச்சியும் அவசியம்.
பாம்புகள் அருகிலிருந்தாலும் நம் கண்களில் தென்படாது விலகியே இருக்கின்றன. மேலும் பாதுகாப்பு கருதியே கடிக்கின்றன. நமக்குத் தேவையானவற்றைக் கற்றுத் தெளிவதுபோல பாம்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ எனப் பழமொழி பேசிக்கொண்டு பார்க்கும் பாம்புகளையெல்லாம் மீட்க முயல்வதும் அவற்றைக் கொல்வதற்குச் சமமே.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT