Last Updated : 05 Feb, 2022 12:21 PM

 

Published : 05 Feb 2022 12:21 PM
Last Updated : 05 Feb 2022 12:21 PM

ஒளிப்படங்கள் ஏற்றும் புத்தொளி

கீதா மணியின் குழந்தைப் பருவம் சேலம் அருகே மேட்டூரில், காவிரி நதிக் கரையோரத்தில் பறவைகளும் இயற்கையும் சூழக் கழிந்தது. பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் அங்கேயே தொடர்ந்ததால், இயற்கையும் பறவைகளும் அவருடைய வாழ்க்கையின் அங்கங்கள் ஆகிவிட்டன.

கல்லூரிப் படிப்புக்குப் பின்னர், கோவையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். அதன் பிறகு பறவைகள், சுற்றுச்சுழல் மீதான அவருடைய அக்கறைக்கு ஆக்கப்பூர்வமான ஒரு வடிவம் கிடைத்தது. பறவை நோக்குபவராக சுற்றித் திரிந்தவருக்கு, பறவைகளை நோக்குவதும், அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. விரைவிலேயே காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராக மாறி, பறவைகளை ஒளிப்படங்களாகப் பதிவுசெய்யத் தொடங்கினார்.

இந்தப் பின்னணியில் கீதாவின் நோக்கம் பணத்தை ஈட்டுவதாகவோ அங்கீகாரத்தை நாடுவதாகவோ இல்லை. இயற்கையின் மீதான பிடிப்பையும், பறவைகள் குறித்த தேடலையும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையையும் இன்றைய தலைமுறையினருக்குக் கடத்த நினைத்தார். தான் எடுத்த அரிய ஒளிப்படங்களை, சொந்த செலவில் அச்சிட்டுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் காட்சிப்படுத்தி, பறவைகளின் உலகை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி னார். அதற்குக் கிடைத்த வரவேற்பும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களும் அவரை மேலும் உந்தித் தள்ளின.

கீதா மணி

தான் காட்சிப்படுத்திய பறவைகளின் ஒளிப்படங்களைத் தொகுத்து, மேசை காலண்டராக அச்சிட்டு, இயற்கையின் மீது ஆர்வம்கொண்ட பலருக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கிவருகிறார். பல்வேறு சுற்றுச்சூழல் தினங்களும், படங்களுக்கான விளக்கங்களும் எளிமையாகப் புரியும்விதமாக காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளன. படங்களின் கீழே, உயிரினங்கள் குறித்து அவர் அளித்திருக்கும் தகவல்கள், பறவைகளின் உலகத்துக்கே இட்டுச் சென்றுவிடுகின்றன.

தொடர்புக்கு: geethmanii@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x