Published : 05 Feb 2022 12:12 PM
Last Updated : 05 Feb 2022 12:12 PM
மேற்கு மலைத் தொடர், தொடர்ச்சியான மலைகளையும் அடர்ந்த காடுகளையும் பெற்று இந்தியாவில் பல்லுயிர்கள் பெருகி வாழும் இடமாக உள்ளது. உலகில் வேறெங் கும் காண இயலாத இந்நிலத்திற்கே உரித்தான பல வகை ஓரிட வாழ்விகளைப் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இங்கே செல்லும்பொழுதெல்லாம் எப்படியாவது தட்டைவால் பாம்புகளையும் குழிவிரியன் பாம்புகளையும் பார்த்துவிட வேண்டும் என்கிற பேராவல் எனக்குள் இருக்கும். தட்டை வால் பாம்பினம் இந்தியாவின் மேற்கு, கிழக்கு மலைத் தொடர்கள், இலங்கையைத் தவிர்த்து உலகில் வேறெங்கும் இல்லை. அதேபோல பெரும்பான்மையான குழிவிரியன் இனங்கள் அடர்காடுகளில் மட்டுமே காணப்படும்.
தட்டைவால்
ஒரு முறை நீலகிரி மலைத்தொடரில் ஊர்வன வற்றைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபொழுது, மழைச் சாரலுக்குப் பின்னே அடித்த வெயிலில் நல்வாய்ப்பாக ஓரிட வாழ்வியான பெரோடெட் தட்டைவால் பாம்பைப் (Perrotet’s Shieldtail - Plectrurus perroteti) பார்த்தேன். உருவத்தில் சிறிய பாம்பினமான இவை, பெரும்பான்மையான நேரம் மண்ணுக்கடியில் வாழ்வதோடு இரவாடி வாழ்க் கையைப் பெற்றிருப்பதால் இவற்றைப் பார்ப்பது சற்று கடினம். மேற்கு மலைத்தொடரிலும்கூட நீலகிரி, ஆனைமலை, அருகிலுள்ள சில பகுதிகள் தவிர வேறெங்கும் காணப்படுவதில்லை.
நான் பார்த்த பாம்பு ஓரடிக்கும் குறைவான நீளத்தில் உருளையான உடல் அமைப்போடு சுண்டுவிரல் தடிமனிலிருந்தது. செம்பழுப்பு நிறத்தில், மென்மையான பெரிய செதில்களுடன் பளபளப்பாக இருந்தது. இப்பாம்பிற்கே உரித்தான கூம்பிய தலையில் கரிய நிறக் கண்கள் இருந்தன. இவ்வினத்தின் தனித்த அடையாளம் தட்டையான வால். ஆனால், இதுவோ சற்று மாறுபட்டு வாலும் தலைபோல் கூம்பி, நுனி இரு கூரிய முனைகளாகப் பிரிந்து பிறை போன்றிருந்தது. வாலின் மேல் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கோடு காணப்பட்டது. இந்தியாவில் காணப்படும் பாம்பினங்களில் இவை ஏழு பேரினங்களையும் 44 சிற்றினங்களையும் கொண்டு அதிக எண்ணிக் கையில் இருக்கும் பாம்பினமாக இருக்கின்றன.
தட்டைவால் பாம்புகள் ஈரமான நிலப்பரப்பைப் பெரிதும் விரும்புகின்றன. எளிதில் மண்ணில் நுழைந்து செல்ல முடிவதாலும், இவற்றுக்கு உணவாகும் மண்புழுக்கள், பிற உயிரினங்கள் அபரிமிதமாக அங்கே கிடைப்பதுமே காரணம். இரவு நேரங்களிலும், மழை நின்று வெயில் வரும் நேரங்களிலும் இவை உலவுவதைப் பார்க்கலாம். கற்களின் அடியிலும் பூமியில் விழுந்து கிடக்கும் மக்கிய மரங்களின் அடியிலும் பார்க்க முடியும். ஓரிட வாழ்வியான இந்நஞ்சற்ற பாம்புகளைப் பற்றி நாம் அறிந்திருப்பது மிக சொற்பமே.
குழி விரியன்கள்
மற்றொரு பயணத்தில் குற்றாலத்தின் மேலே செண்பகாதேவி அருவிக்குச் செல்லும் பாதையில் உதிர்ந்து கிடந்த காய்ந்த இலைச் சருகுகளின் மேலே சிறு அசைவை உணர்ந்தேன். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. உற்றுநோக்கியபொழுது நஞ்சுடைய திமில்மூக்குக் குழிவிரியன் (Hump-nosed pit viper - Hypnale hypnale) பாம்பைப் பார்த்தேன். சருகுகளின் நிறத்தில் உருமறைவுடன் அசையாமல் இருந்தது. பின் என்னைக் கண்ட அது, உடலைச் சுருட்டித் தலையைச் சற்று உயர்த்தி எச்சரித்தது. குழிவிரியன் பாம்பினங்கள் பெரும்பாலும் மரவாழ் பாம்பாக இருந்தாலும் இவ்வினம் தரைவாழ்வி. ஓரடி நீளத்தில் இரு விரல் தடிமனில் இருந்தது. முக்கோண வடிவத் தலையில் செங்குத்தான கண் பாவையுடன், மூக்குப் பகுதி வழக்கத்தைவிட உயர்ந்து திமில்போல் ஓங்கியிருந்தது. தலையின் பக்கவாட்டில் நாசித்துவாரத்தில் ஆரம்பிக்கும் வெள்ளை நிறக் கோடு கழுத்து வரை நீண்டிருந்தது.
கண்களுக்கும் நாசித்துவாரத்துக்கும் இடையே ஒரு குழிவான வெப்ப உணர் உறுப்பை (heat sensing pit) குழிவிரியன்கள் பெற்றிருக்கின்றன. சுற்றியிருப்பதை உணர்வ தோடு இரையைப் பிடிப்பதற்கும் இந்த உறுப்பு பெரிதும் உதவும். அந்நிலப்பரப்பில் காணப்படும் சிறு பறவை, ஊர்வன, இருவாழ்விகள், பாலூட்டிகள் போன்றவை இதன் உணவு.
சிலவகைக் குழிவிரியன்களைத் தவிர, மீதமுள்ள அனைத்தும் அடர்ந்த காடுகளில் காணப்படுவதால் மனிதர்கள் எதிர்கொள்ளும் கடியின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதன் நஞ்சு ரத்தத்தைத் தாக்கும் தன்மையைப் பெற்றிருந்தாலும், மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வீரியமுடையது அல்ல. திசுக்களில் பாதிப்பை (Cytotoxic) ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இதன் கடி அதிக வலியை ஏற்படுத்துவதோடு, கடிவாயில் வீக்கம், பிற உடல் உபாதைகளையும் உண்டுபண்ணுகிறது. காடுகளில் தோட்டப் பயிர் சார்ந்து வேலை செய்பவர்கள், பழங்குடிகள், அந்நிலத்தைச் சார்ந்திருப்பவர்கள் இதன் கடிக்கு ஆளாகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் இப்பாம்பின் உருமறைத் தோற்றமே. ஆனால், இப்பண்புதான் இப்பாம்பைக் காக்கவும் செய்கிறது. இந்தியாவில் குழி விரியன் பாம்புகளால் கடிபட்டு மனிதர்கள் இறந்ததாக இதுவரை பதிவில்லை.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: oorvanapalli@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT