Published : 25 Dec 2021 11:34 AM
Last Updated : 25 Dec 2021 11:34 AM

பருவநிலை மாற்றத்துக்கான தீர்வு யாரிடம் உள்ளது?

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினை களின் தொடக்கப் புள்ளியும் அவற்றுக் கான தீர்வின் தொடக்கப் புள்ளியும் தனிமனிதர்களிடமிருந்தே தொடங்குகின்றன. அந்தத் தொடக்கப் புள்ளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் அவற்றுக்கான தீர்வை எளிதாக நடைமுறைப்படுத்தும் விதமாகவும் ‘ஆரோவில் கன்சல்டிங் குரூப்’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கார்பன் கன்வெர்டர் (https://carbonconverter.io) எனும் இணையதளம் செயல்பட்டுவருகிறது.

காடு வளர்ப்பு

நம்முடைய போக்குவரத்துத் தேர்வுகள், உலகுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு இருசக்கர வாகனத்தில் நாம் மேற்கொள்ளும் பயணத்துக்கும் புவிவெப்பமாதலுக்கும் தொடர்பு உண்டு. பெட்ரோல், டீசல் போன்றவற்றால் இயங்கும் மோட்டார் வாகனங்கள் நம் வாழ்க்கை யின் தவிர்க்க முடியாத அங்கங்களாக மாறிவிட்ட சூழலில், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. இந்த நிலையில், காடு வளர்க்கும் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் மோட்டார் வாகனப் பயணத்தினால் நேரும் கார்பன் உமிழ்வை ஈடுகட்டுகிறது ஓர் இணையதளச் செயல்பாடு.

உமிழப்படும் வாயுக்களின் அளவு

இருக்குமிடம், போக்குவரத்துத் தேர்வு, பருவநிலை ஆகியவற்றைப் பொறுத்துப் பசுங்குடில் வாயு உமிழ்வைத் துல்லியமாகக் கணக்கிடும் கணக்கீட்டுக் கருவி இந்த இணையதளத்தில் இருக்கிறது. பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த இணையதளத்தின் சிறப்பம்சம். புறப்படும் இடம், சேரும் இடம், போக்குவரத்துத் தேர்வு (விமானம், கார், பேருந்து, ரயில் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகள்) போன்றவற்றை அந்தக் கணக்கீட்டுக் கருவியில் நீங்கள் உள்ளீடு செய்தால் போதும். உங்கள் பயணத்தில் உமிழப்பட்ட பசுங்குடில் வாயுக்களின் அளவையும், அதன் பாதிப்பை ஈடுசெய்ய நீங்கள் நட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையையும் அது நொடியில் தெரிவித்து விடும். உங்கள் பயணத்தில் உங்களுடன் நண்பரோ குடும்பத்தினரோ வந்திருந்தார்கள் என்றால், அந்த மரங்களின் எண்ணிக்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

ஆரோவில் காட்டுக்குழு

இந்த இணையதளம் ஆரோவில் காட்டுக்குழு காடு வளர்ப்புத் திட்டத்துடன் (Auroville Forest Group reforestation program) இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, மரங்களை நாடியோ அதற்கான இடத்தைத் தேடியோ நாம் அலைய வேண்டியதில்லை. அந்த இணையதளத்தின் மூலமாகவே, ஆரோவில் காட்டுக் குழுவைத் தொடர்புகொண்டு, நமக்குப் பிடித்த மரத்தை, பாதிப்பைச் சமன்செய்யத் தேவைப்படும் எண்ணிக்கையில், ஆரோவில்லில் நடும் வசதியை இந்த இணையதளம் வழங்குகிறது. நமக்காக நடப்பட்ட மரத்தின் வளர்ச்சி குறித்த தகவல்கள் ஆண்டுக்கொரு முறை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த இணையதளம் நம்முடைய பயணத்தால் உலகுக்கு நேரும் பாதிப்புகளுக்கு நம்மைப் பொறுப்பேற்க வைக்கிறது. மரங்களை நடுவதன் மூலம், அந்தப் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. முக்கியமாக, ஒரு நேர்மறை தாக்கம் நம்மிடமிருந்து தொடங்குவதற்கு இந்த இணையதளம் உதவுகிறது. போக்குவரத்து உமிழ்வை ஈடுசெய்ய நீங்கள் நடும் ஒவ்வொரு மரமும், உயிர்க்கோளத்தில் வாழும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவும். நம் வாழ்க்கைக்கு இதைவிட வேறு எந்தச் செயல் அர்த்தம் சேர்க்கப்போகிறது?

போக்குவரத்து உமிழ்வைக் குறைக்க எளிய வழிகள்

# அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்லலாம்.
# முடிந்த அளவு சைக்கிளைப் பயன்படுத்துங்கள்.
# பொதுப் போக்குவரத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
# வாகனத்தில் தனியாகச் செல்வதைத் தவிர்த்து, நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்டு செல்லுங்கள் (pooling).
# உங்கள் வாகனங்களை தவறாமல் சர்வீஸ் செய்யுங்கள்.
# அவசியத் தேவைக்கு மின் வாகனங்களைத் தேர்வு செய்யுங்கள்.
# விமானம் என்றால், குறைவான நிறுத்தங்கள் கொண்ட வழியைத் தேர்ந்தெடுங்கள்.
# இணையவழி விற்பனை தளத்தில் வாங்கும்போது, குறைந்தபட்ச பேக்கேஜிங் மூலம் உங்கள் பொருட்களை ஒரே ஷிப்மெண்டில் டெலிவரி செய்யுமாறு கேளுங்கள்.
# உள்ளூரில் தயாராகும் பொருட்களை வாங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x