Published : 11 Dec 2021 03:08 AM
Last Updated : 11 Dec 2021 03:08 AM
ஒவ்வொரு உயிரினமும் இவ்வுலகில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள தகவமைப்பைக் கொண்டிருப்பது இயற்கைதான். அதன் மூலம் உணவு தேடிக்கொள்ளவும் பிறிதொன்றுக்கு இரையாகாமல் காப்பாற்றிக்கொள்ளவும் முயல்கிறது. தகவமைப்புகளே அவ்வுயிரினம் உலகில் நிலைபெற்றிருக்கக் காரணமாக இருக்கின்றன. பறவைகளை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில் அப்படிச் சிறப்பான தகவமைப்பைப் பெற்ற இரண்டு வலசைப் பறவைகளைச் சாதாரண உள்ளூர் காகம் லாகவமாக எதிர்கொண்ட ஒரு நிகழ்வு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.
ஒரு காலை நேரத்தில் பறவைகளைப் பார்ப்பதற்காக கிளியூர் குளத்துக்குச் சென்றோம். கிளியூர்க்குளம் திருச்சியி லிருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கல்லணைக் கால்வாயும் வெண்ணாறும் அதன் வடக்குப் பக்கம் ஓடுகின்றன. காலை வெயில் மிகப் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டி ருந்தது. எட்டுமணி இருக்கும். குளத்தில் நீர் நிறைந்திருந்தது. கிளுவைகள், புள்ளிமூக்கு வாத்துகள், நீலச்சிறகுகள், ஊசிவால் வாத்துகள், சீழ்க்கைச் சிறகிகள் போன்ற ஆயிரக்கணக்கான வலசை நீர்ப்பறவைகள் ஒளிபடர்ந்த நீர்ப்பரப்பில் இறக்கைகளுக்குள் தலையைப் புதைத்தவாறு சிறு துயிலில் ஆழ்ந்திருந்தன. கரையோரங்களிலும், குளத்தின் சில பகுதிகளிலும் இருந்த நாட்டுக் கருவேலமரங்களில் நத்தைகொத்தி நாரைகளும், அரிவாள்மூக்கன்களும் நிறைந்திருந்தன. ஆலாக்கள் பறந்தவாறே இருக்க, முக்குளிப்பான்களும் நீளவால் இலைக்கோழிகளும் சுறுசுறுப்பாக இரை தேடிக்கொண்டிருந்தன.
அப்போது எனது கவனத்தைக் கவரும் வகையில் பருந்தொன்று குளத்திலிருந்த செடிகளின் மேல் தன் கால்களில் எதையோ பற்றியவாறு வந்து அமர்ந்ததைக் கண்டேன். அது சேற்றுப்பூனைப் பருந்து (Western Marsh Harrier). இப்பருந்து இந்தியத் துணைக்கண்டத்துக்குக் குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகளில் ஒன்று. பூனைப் பருந்துகளிலேயே பெரிதென அறியப்படுகிற இந்தப் பறவைகள் மத்திய, வடக்கு ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வலசைவருகின்றன.
இவை சிறிய பறவைகள், சிறிய விலங்குகள், மீன், தவளை போன்றவற்றை உண்கின்றன. வலசையின்போது இந்தப் பருந்துகள் நீர்நிலைகளை ஒட்டிய காட்டுப் பகுதியில் தங்கிச் செல்கின்றன. இன்று ஒரு கரைப் பறவை அதன் உணவாகிவிட்டது போலத் தெரிந்தது. பூனைப்பருந்தின் கூர்மையான வளைந்த கால் உகிர்கள் ஒரு கரைப் பறவையின் மெல்லிய, மூன்று விரல்கள் கொண்ட மஞ்சள் நிறக்கால் ஒன்றைப் பறவையின் சதையோடு பற்றிக்கொண்டிருந்தன.
கரைப்பகுதி எனும் சூழலமைப்பு
பொதுவாகச் சிறிய கரைப் பறவைகளையும், உள்ளான்களையும் இப்பகுதியில் உள்ள மற்ற குளங்களில் காணப்படுவதுபோல கிளியூர் குளத்தில் எளிதில் காண முடியாது. அவை குளத்தின் ஒருபக்கம் அடர்ந்திருக்கும் நாட்டுக் கருவேலமரத்தின் அடிப்பகுதியில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்படி இருப்பதன் காரணம் அன்று புரிந்தது. வலசை வரும் இப்பருந்துகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அடர்ந்த மரங்களின் கீழே இக்கரைப் பறவைகள் தங்கள் உணவைத் தேடுகின்றன.
ஒரு குளத்தில் நீர் நிறைந்திருப்பதோ அல்லது அதன் கரைகளில் மரங்கள் வரிசையாக இருப்பதோ மட்டும் எல்லா வகைப் பறவைகளுக்கும் போதுமானதாக இருக்காது. குளங்கள், அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அதன் கரைகள், குளத்தின் பக்கவாட்டில் இருக்கும் மரச்செறிவு, நீருக்கு வெளியிலும் மூழ்கியும் இருக்கும் செடிகள், தாமரை, அல்லி போன்ற கொடிகள் என மனிதர்கள் எளிதில் அண்ட முடியாத வகையில் கரைப்பகுதி அமைப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த ஒவ்வொரு சூழலும் முக்கியமானதாக இருக்கிறது.
அப்போது புதர்களின் மேல் உட்கார்ந்திருந்த பருந்து சட்டென எழுந்து பறக்கத் தொடங்கியது. காரணம் இப்பருந்தைத் துரத்திவந்த பெரிய புள்ளிக்கழுகுதான். பெரிய புள்ளிக்கழுகுகள் (Greater Spotted Eagle) மத்திய, வடக்கு ஐரோப்பாவில் தங்கி குஞ்சு பொரிப்பவை. குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டப் பகுதிகளுக்கு வலசை வருபவை. இந்தக் கழுகு உருவில் பருந்தைவிடப் பெரியது; ஒருநாளில் சராசரியாக 150 கி.மீ. தொலைவுக்குப் பறந்து செல்லக்கூடியது. அன்றைக்குச் சேற்றுப்பூனைப் பருந்தைத் துரத்திய கழுகு, முதிரா இளம் பறவையாக இருக்க வேண்டும். ஏனெனில் அதன் இறக்கைகளில் புள்ளிகள் காணப்பட்டன. இவை புள்ளிக்கழுகுகள் என்றழைக்கப்பட்டாலும், இவை முதிர்ச்சி அடைந்த பின் இப்புள்ளிகள் மங்கிவிடுகின்றன.
திடீர் திருப்பம்
புள்ளிக்கழுகு பருந்தை நெருக்கமாகத் துரத்தி, அதன் கால்களில் பற்றியிருந்த உணவைப் பறித்துக்கொள்ள முயன்றது. சில விநாடிகளுக்கு அந்த வான் பகுதியில் இப்பறவைகளின் மோதல் காட்சிகள் அரங்கேறின. இரண்டும் வலிமையானவை என்றபோதும், பூனைப்பருந்தைவிடக் கழுகு உருவிலும் எடையிலும் பெரியது. அதை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வல்லமை பூனைப்பருந்திடம் இருந்ததாகத் தெரியவில்லை.
அதே நேரம், மிக நுட்பமாகத் தன் போக்கை மாற்றும் வல்லமை பூனைப்பருந்துக்கு இருந்ததைக் காண முடிந்தது. தனக்கு மேலும் கீழும், நேருக்கு நேராகவும் பறந்து வந்து தாக்கிய கழுகிடமிருந்து லாகவமாக விலகித் திசைமாறி பூனைப்பருந்து பறந்தது. சேற்றுப்பூனைப் பருந்துக்குச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட உடலும் தலைப்பகுதியும் இதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.
இந்தப் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த பொழுதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மூன்றாவது தலையீடு, அந்த நிகழ்வின் போக்கை முற்றிலும் மாற்றி, நம்பமுடியாத வகையில் முடித்துவைத்தது. அந்தத் தலையீட்டை நிகழ்த்தியது ஒரு காகம். வலசைப்பறவைகள் தன் எல்லைக்குள் நுழைந்ததாலோ அல்லது அதன் கூடு அப்பகுதியிலிருந்ததாலோ இந்தப் பறவைகளின் வருகையை அந்தக் காகம் விரும்பவில்லை.
முதலில் அது பூனைப்பருந்தை எதிர்கொண்டு விரட்டிவிட்டது. அப்போது ஆசுவாசப்படுத்திக்கொள்ள புள்ளிக்கழுகு ஒரு மரத்தில் அமர்ந்தது. பருந்தை விரட்டியடித்த கையோடு, கழுகை நோக்கி வந்து அதையும் விலகிச்செல்ல வைத்தது காகம். தன்னைவிட எல்லா வகையிலும் வலிமையான பறவைகளை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்திய காகம் வியப்பை ஏற்படுத்தியது. அன்றைய பறவை நோக்குதல் வலசைப் பறவைகளுக்குள் உணவின் பொருட்டு ஏற்பட்ட மோதலையும், அதில் உள்ளூர்க் காகத்தின் தலையீட்டையும் உள்ளடக்கி ஒரு சுவாரசியத் திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: thangamani.n@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT