Published : 26 Mar 2016 11:39 AM
Last Updated : 26 Mar 2016 11:39 AM
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளி புலி தாக்கி இறந்ததும், பின்னர் அதிரடி படையினரால் அந்தப் புலி சுட்டு கொல்லப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களைத் தாக்கும் புலிகள், சிறுத்தைகளைச் சுட்டுக்கொல்வது நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இயற்கை வரலாற்று வல்லுநரும் புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரருமான ஜிம் கார்பெட்டின் பதிவுகள் இது குறித்து நமக்கு மாறுபட்ட புரிதலைத் தருகின்றன.
1920-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை பல ஆட்கொல்லிப் புலிகளையும் சிறுத்தைகளையும் இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தில் அவர் கொன்றுள்ளார். அவ்வாறு கொல்லப்பட்ட புலிகளையும் சிறுத்தைகளையும் அவர் ஆராய்ந்ததில், பெரும்பாலானவை மனிதர்களால் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டு, இயற்கையான வேட்டைத்திறனை இழந்தவை என்பதை அவர் உணர்ந்தார். அவர் எழுதியுள்ள பல புத்தகங்களில் இந்தக் கருத்தைப் பல முறை வலியுறுத்தியுள்ளார். காட்டில் இயல்பான சூழலில் வாழும் புலிகளை 'ஜென்டில்மேன்' என்றே கார்பெட் குறிப்பிடுகிறார். புலிகள் வாழும் காட்டில் தினமும் கால்நடையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் எண்ணற்ற வன ஊழியர்களும், ஆதிவாசிகளும்கூடப் புலிகளை ‘ஜென்டில்மேன்’ என்றே சொல்கிறார்கள்.
ஜென்டில்மேன்கள் மாறுவது ஏன்?
கார்பெட் மட்டுமல்லாமல், வேறு பல காட்டுயிர் வேட்டைக்காரர்களும், புகழ்பெற்ற காட்டுயிர் விஞ்ஞானிகளும் புலிகள் மற்றும் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கத் தொடங்குவதற்கு, மனிதர்களால் ஏற்படும் உடல் ஊனம் ஒரு முக்கியக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். வனத்தில் கள்ளவேட்டைக்காரர்களின் துப்பாக்கி குண்டுகள் துளைத்தும், சுருக்குக் கம்பிகளில் சிக்கியும் பல புலிகளும் சிறுத்தைகளும் ஆண்டுதோறும் பலியாகின்றன.
சில உயிரினங்கள் காயங்களோடு சில நாட்களுக்கு உயிர் வாழ்ந்து, பிறகு துடிதுடித்து இறந்துபோகின்றன. இப்படிக் காயங்களோடு உயிர் வாழும் புலி, சிறுத்தைகளால் தங்களுடைய இயற்கையான இரைகளான காட்டெருது, கடமான், காட்டுப்பன்றி போன்றவற்றைப் பிடிப்பது சாத்தியமில்லை. இரை விலங்குகள் வேகமாக ஓடக்கூடியவை. கூரிய கொம்பு, குளம்பு, தந்தங்களையும் கொண்டவை.
அவற்றைப் பிடித்து உண்ணப் புலி போன்ற இரைகொல்லிகளுக்குச் சிறந்த உடல்திறன் தேவை. உருவில் பெரிய புலிகளால் எலிகளையோ தவளைகளையோ இரையாகக்கொண்டு உயிர்வாழ முடியாது. இந்த நிலையில்தான், மனிதர்களின் மேல் பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தாலும்கூட, பசிக் கொடுமையால் புலிகளும் சிறுத்தைகளும் மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றன.
காயமடைந்த புலி
கூடலூரில் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட புலியின் கால்களில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களிலும் கால் பகுதி சிதைந்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பின்னணியில் புலியின் காலில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். சுடப்பட்ட புலி ஆட்கொல்லியாக உருவெடுக்கச் சுருக்கில் கால் சிக்கிச் சிதைந்தது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
காடுகளிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், சுருக்குக் கம்பிகளில் சிக்கிக் காட்டுயிர்கள் மடிவதும் காயப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. மிகச் சமீபத்தில்கூடச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஒரு சிறுத்தை சுருக்கில் சிக்கி இறந்தது. இதேபோலக் கேரளத்தின் வயநாடு காட்டிலும் சில ஆண்டுகளுக்கு முன் புலி ஒன்று சுருக்கில் சிக்கித் துடிதுடித்து இறந்தது. இதுபோல் தினம் தினம், நாடு முழுவதும் பல உயிரினங்கள் இலாகவமாக மறைத்து வைக்கப்படும் சுருக்குக் கம்பிகளில் சிக்கிச் சாகின்றன.
டாஸ்மாக் சிற்றுண்டி
துப்பாக்கி மூலம் வேட்டையாடுவதைவிட மிகவும் கொடுமையானது சுருக்கு வைத்து உயிரினங்களைப் பிடிப்பது. சுருக்கு வைக்கத் தேவையானதெல்லாம், மோட்டார் சைக்கிள் பிரேக் கம்பியோ அல்லது டெலிபோன் கம்பியோதான். காட்டுயிர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் தடங்களைத் தேர்வு செய்து, அங்கே கம்பியை மறைத்து வைத்துவிடுகிறார்கள் வேட்டைக்காரர்கள். இதில் தினந்தோறும் எண்ணற்ற உயிரினங்களும், பறவைகளும் கண்ணுக்குத் தெரியாத சுருக்குக் கம்பிகளில் சிக்கிக் கொடூரமாக மாண்டு போகின்றன.
பல நேரம் சுருக்கில் சிக்கிய உயிரினங்களைச் சுருக்கு வைத்தவர்கள் எடுப்பதில்லை. சுருக்குக் கம்பியில் சிக்கிய காட்டுயிர்களோ, கம்பியிலிருந்து விடுபட முடியாமல் காயத்தாலும், பயத்தாலும், பட்டினியாலும், தாகத்தாலும் இன்னலடைந்து மடிகின்றன. சுருக்குகளில் சிக்கிச் சாகும் உடும்பு, காட்டுப்பன்றி, காடை, காட்டுக்கோழி, காட்டு முயல், மான்கள் போன்றவற்றைச் சத்தமின்றி டாஸ்மாக் பார்களுக்கும், ஓட்டல்களுக்கும் விற்றுவிடுகிறார்கள். சுருக்கு வைத்துச் சிறு உயிரினங்களைத் தொடர்ந்து பிடித்துவருவதால், இரை உயிரினங்கள் அரிதாகி அதன் காரணமாகவும் சிறுத்தைகளும் புலிகளும் மனிதர்களைத் தாக்கத் தொடங்கும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
யானைகளும் தப்பவில்லை
சிறு உயிரினங்களைப் பிடிக்கத் திட்டமிட்டுச் சிலர் சுருக்கை வைத்தாலும், பெரிய உயிரினங்களான புலி, சிறுத்தை, செந்நாய்கள், கரடிகளும்கூட அவ்வப்போதுச் சிக்கி மாண்டு போகின்றன அல்லது காயமடைகின்றன. சில நேரம் யானைகளின் தும்பிக்கைகூடச் சுருக்குகளில் சிக்கிச் சிதைந்து போகின்றன. சில காயமடைந்த ஊனுண்ணிகள், மனிதர்களைத் தாக்குபவையாக உருவெடுத்துக் காட்டையொட்டி வாழும் மக்களை அச்சுறுத்தத் தொடங்குகின்றன. உயிரினங்களைப் பிடிக்க வைக்கப்படும் சுருக்குகளால் மனிதர்களைத் தாக்கும் புலிகளும் சிறுத்தைகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படிச் சிலர் செய்யும் தவறுக்காகப் பல கிராமங்களில் இயல்பு வாழ்க்கை முடங்குகிறது.
வயிற்றுப்பிழப்புக்காக சிலர் சுருக்கு வைக்கிறார்கள் என்று ஒரு தரப்பினர் வாதிட்டாலும், வணிக நோக்குடன் அதிகக் காட்டுயிர்கள் சாகடிக்கப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கேளிக்கை விடுதிகளில் சமைத்துக் கொடுக்கவும், மதுக்கடை பார்களில் பரிமாறவும், ஏற்றுமதிக்காகவும், மருந்துகளில் பயன்படுத்தவும் காட்டையொட்டி வாழும் சிலர் பணத்தாசையால் உந்தப்பட்டு வர்த்தகரீதியாகப் பல உயிரினங்களைச் சுருக்கு வைத்து வேட்டையாடுகின்றனர்.
யாருக்குத் தண்டனை தேவை?
1972-ம் வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின்படி காட்டுயிர்களை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் வழங்கவேண்டிய பாதுகாப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. புலி, யானை, சிறுத்தை போன்ற பெரிய பாலூட்டிகளை வகை 1-ன் கீழ் மிக முக்கிய உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வகைப்பாடு ஒன்றின் கீழ் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான உயிரினங்களை வேட்டையாடுவதும், வேட்டையாட முயல்வதும்கூட வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 51 கீழ் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனையுடன் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ள தண்டனை வழங்கலாம். சமீபத்திய கூடலூர் சம்பவம் போன்றவற்றில் மனிதனைக் கொன்றது புலியாகவோ சிறுத்தையாகவோ இருந்தாலும், அவற்றை ஆட்கொல்லிகளாக மாற்றியதற்குச் சுருக்கு வைத்தவர்களும் முக்கியக் குற்றவாளிகள் என்பதுதான் யதார்த்தம்.
சுருக்குக் கம்பி வைத்து வேட்டையாடுவதைத் தடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. துப்பாக்கி கொண்டு வேட்டையாடும்போது எழும் சத்தம் கேட்டு, பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுக்கக்கூடும். உயிரினங்களும் எச்சரிக்கை அடைந்துவிடும். ஆனால், சுருக்கு வைப்பது எந்தச் சத்தமும் இல்லாமல் நடக்கிறது. காட்டைக் காட்டிலும் காட்டின் உட்புறம் உள்ள பகுதிகளில்தான் சுருக்குகள் அதிகம் வைக்கப்படுகின்றன.
ஒரு காட்டுப் பகுதியிலிருந்து மற்றொரு காட்டுப் பகுதிக்கு இடம்பெயரும் போதும், வறட்சிக் காலத்தில் நீர் தேடிக் காட்டுக்கு வெளியே வரும்போதுதான் உயிரினங்கள் சுருக்குகளில் அதிகம் சிக்குகின்றன. காட்டுக்குள் சுருக்கு வைப்பதைக் கட்டுப்படுத்தக் கால்நடையாகச் செல்லும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினால்போதும். ஆனால், காட்டுக்கு வெளியே சுருக்கு வைப்பதைக் களைய, அவ்வப்போதுச் சிக்கும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
புலியோ சிறுத்தையோ எதிர்பாராத வகையில் மனிதர்களைத் தாக்கும்போது, அவற்றைக் கொன்றுவிட்டால் அல்லது அப்புறப்படுத்தினால் பிரச்சினை முடிந்தது என்று இருக்க முடியாது. அவற்றை அப்புறப்படுத்திய அதே முனைப்பில் சுருக்கு வைப்பவர்களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டியது அவசியம். 'பன்றிக்குத்தான் வைத்தார்கள்', 'முயலுக்குத்தான் வைத்தார்கள்' என்றெல்லாம் அலட்சியப்படுத்தாமல், சுருக்கு வைப்பதைக் கடும் வனக்குற்றமாகக் கருத வேண்டும். சுருக்கு வைப்பது மனித உயிரிழப்புக்கும் மறைமுகமாகக் காரணமாக இருப்பதால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை தரப்பட வேண்டும். சுருக்குக் கம்பிகள் வைக்கும் சமூக விரோதிகள் கடுமையாகத் தண்டிக்கப்படாவிட்டால், இரண்டு வகைகளிலும் உயிர் சேதம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
- கட்டுரையாளர், காட்டுயிர் உயிரியலாளர்
தொடர்புக்கு: westernghats.nln@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT