Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

பசுமை சிந்தனைகள் 12: சூழலியல் அகதிகளின் கையறுநிலை

நாராயணி சுப்ரமணியன்

சூழலியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பல வாழ்வாதாரங்கள் உண்டு. காடுகளில் வசிப்பவர்கள், மேய்ச்சல் புல்வெளிகளைச் சேர்ந்த தொல்குடிகள், மீனவர்கள் போன்ற பலரும் அந்தந்த இடங்களின் சுற்றுச்சூழலை நம்பியே வாழ்கிறார்கள்.

சூழலியல் சீர்குலையும்போது இவர் களின் வாழ்வாதாரம் சீர்கெடுகிறது. இதைத் தவிர, எளிதில் வறண்டு போகக்கூடிய நிலப்பரப்புகள், கடற்கரையோரம், தீவுகள் ஆகியவை சூழலியல் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சூழலியல் சீர்கேட்டால் வாழ்வாதாரம் குன்றும்போதோ வசிப்பிடத்தைச் சூழலியல் பேரிடர்கள் தொடர்ந்து தாக்கும்போதோ அங்கிருக்கும் மக்கள், அந்த நிலத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மூன்று வகை மக்கள்

நுகர்வு அடிப்படையில் இந்திய மக்களை மூன்றாக வகைப்படுத்தலாம் என்கிறது மாதவ் காட்கில் - ராமச்சந்திர குஹா எழுதிய ‘சூழலியலும் சமநோக்கும்’ (Ecology and Equity) என்கிற நூல். சூழலியல்சார் மக்கள் (Ecosystem people), அனைத்துண்ணிகள் (Omnivores), சூழலியல்சார் அகதிகள் (Ecological Refugees) ஆகிய மூன்று வகையினர் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சுற்றுச் சூழல் வளமாக இருந்தால் மட்டுமே, வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் என்கிற நிலையில் இருப்பவர்கள் சூழலியல்சார் மக்கள். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் மீனவர்கள், தொல்குடியினர் இந்த வகைக்குள் அடங்குவார்கள்.

எங்கே இருந்தாலும் வேலையைப் பெற்றுக்கொண்டு உணவு, உடை, உறைவிடத்தைத் தடையின்றிப் பெறுபவர்கள் அனைத்துண்ணிகள். ஒரு சூழலியல் சீர்கெடுவதால் அனைத்துண்ணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் மீன் கிடைக்கவில்லை என்றால் வேறு இடத்திலிருந்து கூடுதல் விலை கொடுத்து மீன்களைத் தருவித்துக்கொள்வார்கள்.

ஆனால், சுற்றுச்சூழல் சீர்கெடும்போது சூழலியல்சார் மக்களுக்கான எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. ஆகவே, அவர்கள் அந்த நிலத்தை விட்டு வெளியேறும் சூழலியல் அகதிகளாக மாறுகிறார்கள். வாழ்வாதாரம் சீரழிந்துகொண்டே வருவதால் எதிர்காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிழைக்க முடியாது என்பதால் அந்த நிலத்தைவிட்டு நகர்பவர்கள், அழிந்துகொண்டிருக்கும் சூழலியலால் வெளியே துரத்தப்படுபவர்கள், சூழலியல் பேரிடர்களால் திடீரென்று புலம்பெயர்பவர்கள் என்று இவர்களில் மூன்று வகை உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை சூழலியல்சார் இடப்பெயர்வு என்பது பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கியதாக இருக்கிறது. அதிகமாகப் புயல்களைச் சந்தித்துவரும் ஒடிசா கடற்கரைப் பகுதி, கடல்நீர் உட்புகுதலால் பாதிக்கப்படும் சுந்தரவனத் தீவுகள், வறட்சியால் அடிக்கடி தாக்கப்படும் மத்திய இந்திய நிலப்பரப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்படும் கங்கை பாசனப் பகுதி ஆகிய இடங்களிலிருந்து புலம் பெயர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சூழலியல் அகதிகள்

வறட்சி, கடல்நீர் உட்புகுதல், தண்ணீர்ப் பஞ்சம், பாலைவனமாதல், சூழலியல் பேரிடர்கள், பருவநிலைகளில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் பயிர்கள் மடிவது, மண்ணரிப்பு, பருவநிலைப் பேரிடர்கள் போன்ற பல காரணங்களால் மனிதர்கள் இடம்பெயர்கிறார்கள். இது தற்காலிகமானதாகவோ நிரந்தர மானதாகவோ இருக்கலாம். சூழலியல் சீர்கெடும்போது அங்கிருக்கும் மக்கள் சூழலியல்சார் புலம்பெயர்ந்தோராகப் (Environmental Migrants) புறப்பட்டு, வேறோர் இடத்தில் உயிர் பிழைக்க முயல்கி றார்கள்.

அதுவும் நடக்காதபட்சத்தில் தங்களுக்குத் தெரிந்த வேலைகளை விட்டுவிட்டு ஊதியம் குறைந்த சிறு வேலைகளைச் செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். முதலில் உள்நாட்டுக் குள்ளேயே இப்படிப் புலம்பெயர்பவர்கள், எங்குமே அடிப்படை வாழ்வாதாரம் கிடைக்காவிட்டால் பிற நாடுகளுக்குப் பயணம் செல்லவும் துணிகிறார்கள். புதிய இடத்தில் விளிம்புநிலை மக்களாக மட்டுமே அவர்களால் வாழ முடிகிறது.

லெஸ்டர் பிரவுன் என்கிற அறிஞ ரால் 1976இல் ‘சூழலியல் அகதிகள்’ (Ecological refugees) என்கிற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதர்களின் இடப்பெயர்வு என்பது மிகவும் சிக்கலானது என்கிறார்கள் மானுடவியலாளர்கள். புலம்பெயர்தல் என்பது பல காரணிகளை உள்ளடக்கியது என்பதால், எந்தக் காரணம் ஒருவரை வெளியில் தள்ளுகிறது என்பதைக் கண்டறிந்து, அதை வகைப்படுத்துவது கடினம். சூழலியல் சீர்கேடு என்பது ஒரு பிரச்சினைக்குக் காரணமாகவோ பிரச்சினையின் விளை வாகவோ இருக்கலாம். பல புலம்பெயர் நிகழ்வுகளில் சூழலியல் சீர்கேட்டின் பங்கு நேரடியாக இருப்பதை சூழலியல் அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு சூழலியல் சீர்கேட்டைச் சரியான வகையில் கையாளாத அரசும் திட்டங்களும் எப்படி இந்தப் புலம்பெயர்வுக்கு மறைமுகக் காரணிகளாக இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

என்ன திட்டம் இருக்கிறது?

சர்வதேச அரங்கில் ‘புலம் பெயர்ந்தோர்’, ‘அகதிகள்’ ஆகிய சொற்கள் அரசியலுடன் சேர்த்துத்தான் விவாதிக்கப்படுகின்றன. 2050-க்குள் பருவநிலை மாற்றம் உள்படப் பல்வேறு சூழலியல் காரணிகளால் 100 கோடிப் பேர் புலம்பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சூழலியல் காரணங்களால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உள்நாட்டுக்குள் புலம்பெயர்கிறார்கள். சூழலியல் அகதிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டா யத்தில் உலக நாடுகள் இருக்கின்றன.

ஜனநாயகப் பண்புகள் குறைந்து, தேசிய இன அடையாள அரசியல் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில் பல நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளில் சுவர் எழுப்பியும் சட்டங்களை இயற்றியும் சக மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பின்னணியில், சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் புலம்பெயர்வோரின் நிலை எந்த உத்தரவாதமும் இன்றி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதுவே, எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மனிதர்களைப் பிடித்தாட்டும் பிரச்சினையாகவும், மனிதநேயம் அற்றுப்போய் பெருமளவு மனிதர்களை மோசமாக நடத்தும் கீழ்மைகளுக்கான அடையாளமாகவும் மாறக்கூடும்.

கட்டுரையாளர், கடல் உயிரின ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x