Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள மலைக் கிராமங் களில், வீடுகள் தோறும் ஒரு புதுமை அரங்கேறிவருகிறது. மண் அடுப்புகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவின் அளவைக் குறைக்கும் வகையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட அடுப்புகளை இப்பகுதி மக்கள் தாங்களே கட்டிப் பயன்படுத்திவருகின்றனர்.
சர்வதேச அளவில் புவி நேரம் (Earth Hour) என்கிற பிரசாரம் மார்ச் 27 அன்று மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி தமிழக - கர்நாடக எல்லையில் சூழலியல் மாற்றத்துக்கான நம்பிக்கையை விதைக்கும் இந்த மக்களின் முயற்சி நடைபெற்றுவருகிறது.
விறகே எரிபொருள்
சத்தியமங்கலம் பகுதியில் 44 சிற்றூர்கள், குக்கிராமங்களை உள்ள டக்கிய கடம்பூர் மலைப்பகுதியில் இருளர், குறும்பர், ஊராளி, சோளகர், லிங்காயத்து எனப் பல வகை பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்குக் காட்டையே நம்பியுள்ளனர். சமைப்பதற்குக் காட்டில் கிடைக்கும் விறகுகளையே எரிபொருளாகப் பயன்படுத்திவருகின்றனர்.
நாளொன்றுக்கு 3,467 வீடுகளில், கிட்டத்தட்ட 34 டன் விறகு பயன்படுத்தப் படுகிறது என 2017ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. விறகு சேகரிப்பது காட்டைப் பெரிதாகத் தொந்தரவு செய்யாது என்றாலும், காட்டில் மனிதத் தலையீட்டைப் பெருமளவு குறைப்பது குறித்துத் தற்போது சிந்திக்கப்பட்டுவருகிறது.
அறிவியல்பூர்வ மண் அடுப்புகள்
மண் அடுப்புகள் அதிகப் புகையை வெளியேற்றுவதோடு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களையும், சுவாசக் கோளாறுகளையும் மக்களிடையே அதிகரிக்கின்றன. சத்தியமங்கலத்தின் மலைக்கிராமங்களில், பல பெண்கள் சுவாச பிரச்சினைகளால் அவதிப்படுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, உலக இயற்கை நிதியம் (WWF India), TIDE (Technology Informatics Design Endeavour) தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, அறிவியல்பூர்வ மண் அடுப்புகளை இம்மக்களிடையே அறிமுகப் படுத்தியுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில், இப்புதுவகை அடுப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்த அடுப்புகள், விறகின் எரியும் ஆற்றலை அதிகரிப்பதுடன், விறகின் பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்கின்றன. இதன்மூலம் ஓராண்டிற்கு 1,080 டன் வரை விறகின் பயன்பாடு குறையும்.
"இவ்வகை அடுப்புகளில் புகை போக்கி பொருத்தப்படுவதால், சமையல் அறைக்கு வெளியே புகை சென்றுவிடுகிறது. இதனால், வீட்டினுள் புகைமூட்டம் ஏற்படுவதில்லை. இதனால் கண் எரிச்சல், இருமல் தவிர்க்கப் படுகிறது," என்கிறார், நீர்குண்டிபுதூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கிரியம்மாள்.
மாசற்ற எரிசக்தியை நோக்கிய நகர்வு
இந்த அடுப்புகளை இலவசமாகக் கட்டித்தருவதோடு, இதைக் கட்டுவதற்கான பயிற்சியையும் உலக இயற்கை நிதியம் வழங்கிவருகிறது. “இதுவரை 43 பேருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 16 பேருக்குத் தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளது. எளிய முறையில் செங்கல் மணல் கொண்டே இந்த அடுப்பைக் கட்டிவிடலாம். காடு, காட்டுயிர்கள், அருகில் வாழும் மனிதர் களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் இலக்கு,” என்கிறார் உலக இயற்கை நிதிய அலுவலர் எஸ். அஜய்.
படிப்படியாக மண் அடுப்புகளைத் தவிர்த்து, மாசற்ற எரிசக்தியை நோக்கி நகர்வதே இத்திட்டத்தின் நீண்டகால இலக்கு என்கிறார் களப் பணியாளர் பரமன். கரியமில வாயு வெளியேற்ற த்தைக் குறைப்பது, காட்டை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பது என சூழலியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விளையும் சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் இந்த முயற்சி பாராட்டப்படுகிறது.
கட்டுரையாளர், உலக இயற்கை நிதியத் தொடர்பு அலுவலர்
தொடர்புக்கு: shrikumar@wwfindia.net
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT