Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் (GBBC) முதன்முதலில் 2018-ல் கல ந்துகொண்டேன். பிப்ரவரி 16 அன்று சேலம் பகுதியில் உள்ள சோரகை மலையில் பறவைகளைக் கணக்கெடுக்கச் சென்றிருந்தேன். அந்த மலைப்பகுதி முழுவதும் முள்புதர் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. பறவைகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஊதா தேன்சிட்டைப் (Purple Sunbird) போன்ற ஒரு பறவை மரத்தில் வந்து அமர்ந்தது. அது சற்று மாறுபட்டு இருந்ததால், அதை ஒளிப்படம் எடுக்க முயன்றேன். அது அதிக கூச்ச சுபாவம் கொண்ட பறவையாக அது இருந்ததால், மிகுந்த சிரமப்பட்டு சுமாரான ஒளிப்படத்தை எடுத்தேன்.
ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அப்பறவையைக் காணமுடிந்தது. வீட்டுக்கு வந்து அப்பறவையின் படத்தை நண்பர்களுக்குப் புலனத்தில் (WhatsApp) அனுப்பி வைத்தேன். அது வெண்பிடரி பட்டாணிக்குருவி (White-naped Tit) என்று சென்னையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் அரவிந்த் அமிர்தராஜ் பதிலிட்டார். தமிழ்நாட்டில் இது அரியவகை பறவை என்றும் கூறினார். நான் பார்த்தது, தமிழ்நாட்டில் இதுவரை பதிவுசெய்யப்பட்டிராத பறவை என்பதை அறிந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி உண்டானது. அடுத்த நாள் நானும் என் மகன் சுப்ரமணியசிவாவும் அதே இடத்துக்குச் சென்று மீண்டும் அப்பறவையைக் கண்டு ஒளிப்படம் எடுத்தோம்.
அதற்குப் பிறகு பலமுறை அப்பகுதிக்குச் சென்றும், அப்பறவை யைக் காண முடியவில்லை. அதற்குக் காரணம் எனக்கு அப்பறவையின் பழக்கவழக்கங்கள், வாழிடம், ஒலியெழுப்பும் முறை பற்றி எதுவும் தெரியாமல் இருந்ததே. சட்டென்று அடையாளம் கண்டுவிடக்கூடிய கழுகு, காகத்தைப் போன்ற அளவில் பெரிய பறவையல்ல அது. அளவில் சிறியது. ஊதா தேன்சிட்டு அளவிலோ, அதைவிடச் சற்று பெரிதாகவோ இருக்கும்.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் 2018-ல் அப்பறவையை மீண்டும் கண்டபொழுது அளவில்லாத மகிழ்ச்சி உண்டானது. அப்போது பறவையியலாளர்கள் சிலர், என்னைத் தொடர்புகொண்டு அப்பறவை அதே பகுதியில்தான் இருக்கும், தொடர்ந்து கண்காணியுங்கள். அப்பறவையைப் பற்றிய விவரங்கள், பதிவுகள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை. அம்மலையில் அப்பறவை அடையும் இடம் (Roosting Place) எது என்று கண்டறியுங்கள் என்று ஊக்குவித்தனர்; அன்றிலிருந்து ஓராண்டு அப்பறவையைத் தொடர்வது என்று முடிவெடுத்தேன். ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாள், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அம்மலைக்குச் சென்று தேடுவேன். 10 முறைச் சென்றால் 1 முறைப் பார்க்க முடியும்.
செப்டம்பர் 2018 தொடங்கிய எனது பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது. ஓராண்டில் அந்த மலையில் 100 முறைக்கு மேலேறி இறங்கி யிருப்பேன். ஆனால், 16 முறை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறை ஏறும்போதும் இந்த முறை அப்பறவையைப் பார்த்து விடலாம், அது அடையும் இடத்தைக் கண்டறிந்துவிடலாம் என்று சென்றால், பெரும்பாலான நாள்களில் பெருத்த ஏமாற்றமே கிடைக்கும்.
அப்போதெல்லாம் சோர்வாகவும் தளர்ச்சியாகவும் இருக்கும். ஆனால், அப்பறவையை மீண்டும் கண்டு ஒளிப்படம் எடுத்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், கடைசிவரை அது அடையும் இடத்தை (Roosting place) என்னால் கண்டறியவே முடியவில்லை. ஒருவர் மட்டுமே அதைப் பின்தொடர்ந்து கண்டறிவது இயலாத செயல் என்பதை உணர்ந்தேன்.
நெருங்கிய பிறகும்…
ஒருநாள் மாலை அப்பகுதிப் பறவைகளைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது பட்டாணிக்குருவியின் குரலொலி கேட்டது. இன்று அதைப் பின்தொடர்ந்தால் அது அடையும் இடத்தைக் கண்டறிந்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் பின்தொடர்ந்தேன். சில நிமிடம் மட்டுமே என் பார்வை எல்லைக்குள் இருந்தது. திடீரென பறந்து சென்றது. பின்தொடர்ந்து சென்றும் சட்டெனக் காணவில்லை.
அப்பகுதியைச் சுற்றிப் பார்த்தும் அருகில் உள்ள மரங்களை ஆராய்ந்தும் அது அடையுமிடத்தைக் காண முடிய வில்லை. இரண்டாண்டுத் தேடலின் முடிவு வந்துவிட்டது என நினைத்தபோது வெற்றியின் விளிம்பில் நின்றுகொண்டு தோல்வியைச் சந்திப்பதைப் போல் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அதனுடைய இருப்பிடத்தை நெருங்கிவிட்டோம் விரைவில் கண்டறிந்துவிடலாம் என்கிற நம்பிக்கை விதை உள்ளுக்குள் துளிர்த்தது.
தொடர்ந்து மாலை நேரத்தில் வந்து, அது அடைய வரும் இடத்தில் காத்திருந்தேன். தவறாமல் ஒரு ஜோடிப் பறவை வரும், அவற்றைப் பின்தொடர்ந்து செல்வேன். ஆனால், அடையும் இடத்தைக் கண்டறிய முடியாமல் எப்படியோ என்னை ஏமாற்றி விடும். இப்படியாக 5 முறை பின்தொடர்ந்தும் பயனில்லை.
கண்டேன் கண்டேன்
இன்னும் பொறுமை, நிதானம், கூர்மையான பார்வை தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். என் பயணம் தொடர்ந்தது, அந்த நாளும் வந்தது. மார்ச் 2020 அன்று மாலை அப்பறவையைப் பார்த்தேன். அதே ஒரு ஜோடிப் பறவை. தொலைவிலிருந்தே அவற்றைக் கண்காணித்துப் பின்தொடர்ந்தேன். ஒவ்வொரு மரமாகத் தாவித்தாவிச் சென்றது. கடைசியாக ஒரு பட்டுப்போன மரத்தின் கிளையில் அமர்ந்தது. சுற்றுமுற்றும் பார்த்தது, திடீரென அங்கிருந்த மரப்பட்டை இடைவெளியில் சென்று தங்கியது. கடைசியாக அது அடையு மிடத்தைப் பார்த்துவிட்டேன். மூன்றாண்டு தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. அப்பொழுது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இப்போது மே, ஜூன் மாதத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். அம்மாதம்தான் அதனுடைய இனப் பெருக்க காலம். அதையும் கண்காணிக்க வேண்டும் என்கிற ஆவல். இந்த மூன்றாண்டுப் பயணத்தில் ஓர் உண்மை உறைத்தது. ஒரு பறவையின் வாழிடம், உணவு முறை, இனப்பெருக்கக் காலம், இடும் முட்டைகளின் எண்ணிக்கை, அடைகாக்கும் காலம் ஆகிய தகவல்களை எல்லாம் படித்துவிட்டு சாதாரணமாகக் கடந்துபோய்விடு கிறோம். இந்தத் தகவல்களை அறிவியல்பூர்வமாக நமக்குத் தந்ததில் எத்தனை பறவை ஆர்வலர்கள், ஆய்வாளர்களின் நெடிய உழைப்பு அடங்கியிருக்கிறது என்பதை உணர முடிந்தது. நேரில் காணாத அந்தப் பறவை நேயர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
(இந்திய மொழிகளில் இயற்கை சார்ந்த எழுத்தை ஊக்குவிப்பதற்காக 'Nature Communications' என்கிற திட்டத்தின்கீழ் Nature Conservation Foundation (NCF) முன்னெடுத்துள்ள தொடர் இது. பறவைகள், இயற்கை குறித்து நீங்கள் எழுத நினைத்தால் NCF-India-வைத் தொடர்புகொள்ளுங்கள்: https://www.ncf-india.org/contact-us)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு, வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இந்த ஆண்டு பிப்ரவரி 12-15 ஆகிய நான்கு நாள்கள் நடைபெறுகின்றன. ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GREAT BACKYARD BIRD COUNT):
வீடு தொடங்கி அன்றாடம் சென்றுவரும் இடங்கள்வரை ஏதேனும் சில பறவைகளை தற்செயலாகவாவது நாம் பார்த்திருப்போம். நமக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று நினைத்தாலும், உண்மையில் நிறையவே தொடர்பு உண்டு. அப்படி நம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளைக் கணக்கிடுவதே GREAT BACKYARD BIRD COUNT (GBBC) என்னும் ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு. இது உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் திருவிழா. கூடுதல் தகவல்களுக்கு: https://bit.ly/3a707Ft வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு (CAMPUS BIRD COUNT)
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பையே ஒரு வளாகத்துக்குள் மேற்கொள்வதுதான் வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு. பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவனங்களில் பணிபுரிவோர் தாங்கள் இருக்கும் வளாகத்துக்கு வந்து செல்லும் பறவைகளைக் கணக்கெடுக்க ஓர் வாய்ப்பு இது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தின் சூழலின் தன்மையை அறியலாம். கூடுதல் தகவல்களுக்கு: https://bit.ly/3tMQP9p |
கட்டுரையாளர், பள்ளித் தலைமை ஆசிரியர்
தொடர்புக்கு: zenthil75@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT