Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

தியடோர் பாஸ்கரனுக்கு சாங்சுவரி வாழ்நாள் சாதனை விருது

இயற்கை-காட்டுயிர் இதழான சாங்சுவரி ஏசியா கடந்த 20 ஆண்டுகளாக ‘சாங்சுவரி காட்டுயிர் விருது’களைக் வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான ‘சாங்சுவரி வாழ்நாள் சாதனையாளர் விருது’ மூத்த சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அவருடைய சூழலியல் எழுத்து, குறிப்பாகத் தமிழில் சூழலியல் எழுத்தைப் பரவலாக கவனப்படுத்தியது இந்த அங்கீகாரத்துக்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது. அத்துடன் இயற்கைப் பாதுகாப்பு சார்ந்தும், இயற்கை அவதானிப்புகள் சார்ந்தும் அவருடைய பணிகள் குறிப்பிடத்தக்கவை. அவருடன் சேர்த்து 13 பேருக்கு இந்த ஆண்டு சாங்சுவரி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலத்தில் இயற்கை, காட்டுயிர்கள் சார்ந்து எழுதிவரும் பாஸ்கரன், ஆங்கிலத்தில் ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய சமீபத்திய ஆங்கில நூல் ‘A Day with the Shama: Essays on Nature’.

இயற்கைப் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாறுவதற்கு, தமிழில் அது சார்ந்து எழுதப்பட வேண்டுமென்று வலியுறுத்தியவர், வழிகாட்டியவர். தமிழில் இயற்கை, காட்டுயிர்கள் சார்ந்து எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பான ‘கையிலிருக்கும் பூமி’ (உயிர்மை) பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்து தமிழ் உயிர்மூச்சு இணைப்பு, உயிர்மை மாத இதழ் ஆகியவற்றில் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். தமிழில் அவருடைய சமீபத்திய நூல் ‘விண்ணளந்த சிறகு’ (இந்து தமிழ் வெளியீடு).

அத்துடன், தமிழகத்தின் மதிப்புறு காட்டுயிர் காவலராகவும் உலக இயற்கை நிதியத்தின் அறங்காவலராக இரண்டு முறையும் பொறுப்பு வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x