Published : 20 May 2014 04:03 PM
Last Updated : 20 May 2014 04:03 PM
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் சுத்தமாக இருந்ததாகவும், அதில் படகுகள் சென்றதாகவும் ஒரு கற்பனையான நம்பிக்கை சமீபகாலமாக வலுவடைந்து வருகிறது. கூவத்தைச் சுத்தப்படுத்த ரூ. 3,833 கோடியில் மற்றுமொரு புதிய திட்டத்தை அரசு இப்போது தொடங்கியுள்ள நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூவம் ஆறு எப்படி இருந்தது என்று சிந்திக்க இது நல்ல தருணம்தான்.
கூவம் கடைசியாக எப்பொழுது சுத்தப்படுத்தப்பட்டு, நல்ல தண்ணீர் ஓடியது என்று தேடினால், ஆதாரங்கள் மிகவும் குழப்பமாக உள்ளன. 1780-களை ஒட்டி காஞ்சீவரம் பச்சையப்ப வள்ளல், கூவம் நதியில் குளித்ததாகக் கதைகள் உண்டு. கோமலீஸ்வரன் பேட்டையில் அவர் வாழ்ந்தார். அப்போது கூவம் ஆறு இந்தப் பகுதிக்கு அருகில் இருந்ததால், உயர்குடி மக்கள் அந்த இடத்தில் வாழ்ந்துவந்தனர். இப்போதும்கூட அப்பகுதியில் ஒரு தெருவுக்குப் பச்சையப்பர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அரசியல் கட்சியை நினைவுபடுத்துவது போல, அந்தப் பெயர் சி.பி.எம். தெரு என்று துரதிருஷ்டவசமாகச் சுருக்கப்பட்டுவிட்டது.
கூவம் ஆற்றின் துறையில் உள்ள கோமலீஸ்வரன் கோயிலில் ஒரு சடங்கு இருக்கிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் கடவுளை வழிபடுவதற்கான மலர்கள் பரிசல் மூலம் கொண்டுவரப்படும் அந்த விழாவுக்குப் பரிசல் திருவிழா என்று பெயர்.
இந்தக் கோயிலுக்கு எதிர் கரையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் 1730-களில் நெசவாளர் குடியிருப்பு உருவாக்கப்பட்டது. இந்த இடம் தாழ்வான பகுதி, ஆற்றில் வெள்ளம் வந்தபோதெல்லாம் வழக்கமாகக் கரைப் பகுதி மூழ்கியிருக்கிறது. இதன் காரணமாக டாம்ஸ் ரோட்டில் (அணைத் தெரு), அடிக்கடி கரை எழுப்பப்பட்டதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூவம் வறண்டுவிட்டது. 1815-ல் கொடிக்கம்பம் இருக்கும் பகுதி அருகே, கடலோடு கூவம் கலக்கும் இடத்தில் மணல்மேடு உருவாகி ஆற்றை அடைத்ததால், அப்பகுதி தோண்டப்பட்ட திறந்துவிடப்பட்டது.
அதன் காரணமாக மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டன. கடல் பகுதி திறந்துவிடப்பட்டதால், விஷமுள்ள கடல் பாம்புகள் கூவம் ஆற்றுக்குள் வர ஆரம்பித்தன. அடுத்த இரண்டு மாதங்களில் 18 பேர் கடல் பாம்புகள் கொத்தி இறந்தனர். அந்தப் பகுதி மீண்டும் மணலால் மூடப்பட்ட பிறகு, கூவம் ஆற்றில் தேங்கியிருந்த ஒரே திரவம் சாக்கடைத் தண்ணீராக மட்டுமே இருந்தது.
அப்போது அந்த ஆறு, பண்டைய ரோமின் முதன்மை சாக்கடையான குளோகா மேக்சிமாவுடன் ஒப்பிடப்பட்டது. 1861-ல் வெளியான ஓர் ஆய்வறிக்கை வேப்பேரி, திருவல்லிக்கேணியிலிருந்து பல ஆண்டுகளாக வெளியேறிய கழிவுநீரில் திடக் கழிவு அதிகம் இருந்ததால், கூவம் ஆறு பின்னோக்கிப் பாய ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது.
அதிகச் சாக்கடைநீர் வந்ததால் 1870-ல் நாற்றமடிக்கும், பொறுத்துக்கொள்ள முடியாத கழிவுநீர்க் குட்டையாக அது இருந்திருக்கிறது. 1871-ல் வெளியான சுகாதார ஆணையரின் அறிக்கை, "புறக்கணிக்கப்பட்ட, உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும் கூவம் ஆறு, சென்னை நகரத்துக்கு அவப்பெயரைப் பெற்றுத் தரும் வகையில் இருக்கிறது" என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டி இருந்தது. அதே அறிக்கை, நம்பிக்கையளிக்கும் ஒரு குறிப்புடன் முடிவடைந்திருந்தது - ஆற்றிலிருந்து கழிவுநீரை மடைமாற்றுதல், கரைகளைச் சுத்தப்படுத்துதல், ஆற்றுப்படுகைகளை ஆழப்படுத்துதல் போன்றவற்றுக்கான திட்டங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன என்று.
அதேநேரம், பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியிருந்தது. அது சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னால் கூவம் ஆற்றுடன் இணைந்தது. இந்தக் கால்வாய், தொடர் மடைகளின் வழியாக இயங்கியது. அந்த மடைகளில் கடைசியானதைச் சென்னை பல்கலைக்கழகத்துக்குப் பின்னே பார்க்கலாம். கூவத்தில் படகைச் செலுத்தலாம் என்பதற்குத் தவறான அடையாளமாக அது சுட்டிக்காட்டப்படுகிறது.
1883-ம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றப் பொதுஅவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், கூவத்தைச் சுத்தப்படுத்திய முயற்சி வெற்றிகரமாக முடிந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "இன்னும் ஒரு சில ஆண்டுகளில், கழிவுநீரிலிருந்து முற்றிலும் விடுபட்டுக் கூவம் சுத்தமாகிவிடும்" என்று அது பிரகடனப்படுத்தி இருக்கிறது. அதே வாசகத்தைத்தான் 143 வருஷங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: வள்ளி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT