Last Updated : 03 Sep, 2020 04:06 PM

 

Published : 03 Sep 2020 04:06 PM
Last Updated : 03 Sep 2020 04:06 PM

நாய்களும் வணிகமும்: ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் கிடைப்பது அரிதா?

'மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலமாகப் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 30-ம் தேதியன்று பேசியபோது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதில் தமிழக நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கன்னி / சிப்பிப்பாறை, கோம்பை போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.

இந்தச் செய்தி நாட்டு நாய் இன ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதேநேரம், “அந்த நாய்கள் எல்லாம் இப்போது அழிந்து விட்டன” என்பது போன்ற கருத்துக்களையும் பலர் முன்வைத்திருந்தார்கள். இந்தக் கருத்து உண்மைதானா? இந்த நாய்கள் அரிதாகி அழிந்துவிட்டனவா?

அழிந்து போனது எனும் நழுவல்

முதலில் ராஜபாளையம் நாய்களை எடுத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட 200 குடும்பங்கள், ராஜபாளையம் நாய் வணிகத்தை மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டு, அந்த ஊரைச் சுற்றி இயங்கி வருகிறார்கள். ஒரு குட்டியானது பத்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் வரை விலை போகிறது. தமிழக நாயினங்களில் முதலில் சந்தைப்படுத்தப்பட்ட ராஜபாளையம் நாய் வகைகளில் போலிகளும் அதிகம்.

ராஜபாளையம் நாய்களில் போலி எனப்படுவது கலப்பின நாய்களும், காது கேளாத குட்டிகளும்தான். இதற்குக் காரணம் தேவைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் லாபநோக்கத்தை மட்டுமே கொண்டு சிலர் ‘INBREEDING’ மூலம் குட்டிகளை உருவாக்குவதுதான். அத்துடன் மக்களின் பொறுமையின்மையும் முக்கியக் காரணம்.

ராஜபாளையம் நாய் ஆர்வலர்கள் பலரும் கவனப்படுத்துவது என்னவென்றால் குற்றால சீசன், சபரிமலை போகும் சீசன்களில் ராஜபாளையம் குட்டிகளை வாங்குவதை முதலில் தவிர்த்துவிடுங்கள். அந்த நேரத்துக்காகவே விலை போகக் காத்திருக்கும் தரமற்ற குட்டிகள் பல நூறு உண்டு. இத்தனை தடையையும் மீறிப் பல அருமையான ராஜபாளையம் நாய்களைக் கண்டறிய முடியும். ராஜபாளையம் நாயின் புகழ் அப்படிப்பட்டது. அதேநேரத்தில் அதற்குச் சற்றும் குறையாத நாயினங்களும் நம்மிடம் உண்டு. அவை கன்னி, சிப்பிப்பாறை நாயினங்கள்.

மூன்று தலைமுறைகளாக இந்த நாய்களை வளர்க்கும் பின்புலத்தில் இருந்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த 50 ஆண்டுகளைவிட இப்போது அதிக எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. முந்தைய கால நாய்களைவிட ஆரோக்கியமான சூழலில், இன்று அவை வளர்கின்றன.

ராஜபாளையம் நாய்கள் அளவுக்கு வெளிப்படையான சந்தை, கன்னி/ சிப்பிப்பாறைக்கு இல்லை. காரணம் பல கிராமங்களில் இன்னமும் இவை கவுரவத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகின்றன. அவ்வளவு எளிதாக அந்த கவுரவத்தைப் பிறருக்குத் தரும் மனநிலை உள்ளவர்கள் நம்மிடையே இல்லை. அதுவே இந்த நாய்களின் விற்பனைக்கு பெரிய மனத்தடையை முன்பு உருவாக்கியிருந்தது.

வியாபாரி எனும் பழிச்சொல்

“அவன் வியாபாரி! அவனும் நானும் ஒன்றா”?” என்ற வசனம் நாட்டு நாய் விற்பனையில் பிரபலம். “இந்தப் பொருள் உனக்கும் சொந்தமாவதா?”” என்ற எண்ணத்துடன் கன்னி, சிப்பிப்பாறை நாய்களை வளர்த்தவர்கள் உதிர்க்கும் வார்த்தை அது. கால மாற்றம் வரவர, வெட்டி கவுரவங்களை உடைக்கும் தேவைகள் பெருகத் தொடங்கின. உண்மையில் தாங்களாகவே முன்வந்து குட்டிகளை விற்பனை செய்தவர்கள் மூலம்தான், இந்த நாய்கள் பரவத் தொடங்கின.

கன்னி / சிப்பிப்பாறை நாய்களை வாங்கக் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்துக்கு வருபவர்கள் முதலில் கேட்கும் வசனம். “அவரிடம்தான் நல்ல நாய்கள் உண்டு, என்ன ஒன்று அவர் சட்டென யாருக்கும் தரமாட்டார். விலை கொடுத்தெல்லாம் அவரிடம் குட்டியை வாங்கிவிட முடியாது” என்று வலை விரிக்கும் ஒரு வணிக சூட்சுமம் உண்டு. இந்த வார்த்தைகள் வாங்க வருபவர்களைச் சுண்டி இழுக்கும். முடிவில் குட்டி கிடைக்கும். ஆனால், இதே பாணியைத்தான் எல்லோரிடமும் அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பதை, வாங்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க மாட்டார்.

நிதர்சனமான உண்மை என்னவென்றால் தென் மாவட்டங்களில் கன்னி/ சிப்பிப்பாறை வளர்ப்பவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் பேர் குட்டிகளை விற்பவர்கள்தாம். இதில் எந்தக் கேவலமும் இல்லை. மீதம் உள்ள ஒரு சதவிகிதம் பேரைப் பொருட்படுத்தத் தேவையுமில்லை.

குட்டிகள் அவற்றின் தரத்தின் அடிப்படையில், ரூபாய் எட்டாயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் வரை விலைபோகின்றன. வாங்கும் குட்டியின் தரத்தைச் சோதிப்பதும், பயனை அனுபவிப்பதும், தவறினால் வருந்துவதும் மக்கள்தான். எனவே, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டபின் குட்டி வாங்குவது நல்லது.

அரசு செய்ய வேண்டியது

சென்னையில் செயல்பட்டுவந்த ‘நாய்களுக்கான இனவிருத்தி மையம்’ மூடப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. நல்ல தரமான நாய்களைத் தேர்ந்தெடுத்து, குறைகள் களையப்பட்டு இதுபோன்ற மையங்களைத் தொடங்கலாம். தேசியப் பேரிடர் மீட்புப் பணிகளிலும், ராணுவ, காவல்துறைப் பிரிவுகளிலும் ஆண்டுக்கு 1,000 நாய்களுக்கும் மேல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தனையும் வெளிநாட்டு நாயினங்கள்.

அந்த பணிகளைச்செய்ய நம் இனங்களையே பயன்படுத்தலாம். குறைந்தபட்சம், நமது நாட்டு இனங்கள் எவை? அவற்றின் பண்பு நலன்கள் என்னென்ன? அவற்றின் பயன்கள் என்ன என்பதை உரிய நிபுணர்களுடன் ஆலோசித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மக்கள் செய்ய வேண்டியது

நீங்கள் தேர்ந்தெடுக்க உள்ளது ரூ.10 ஆயிரம் - ரூ.15 ஆயிரம் கொடுத்து ஆண்டுதோறும் மாற்றக்கூடிய ஒரு பொருள் (Smart Phone)அல்ல. பதினைந்து வருட ஆயுள்காலத்தை உங்களிடம் ஒப்புக்கொடுக்கப் போகும் ஓர் உயிரை. அதனுடைய ஒட்டுமொத்த உலகமும் உங்களுடைய சிறு குடும்பமும் வீடும் மட்டும்தான். அப்படியிருக்கும்போது அதைத் தேர்வுசெய்ய நீங்களும் கொஞ்சம் மெனக்கிட வேண்டுமில்லையா?

ஒரு குட்டியை வாங்குவதென்பது ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று உணர்ந்தபின் முடிவெடுங்கள். ஒரு முறைக்குப் பல முறை ஆலோசித்துத் தேடுங்கள். கொடுப்பது உங்கள் பணம். வாங்கப்போது உங்கள் நாய். எல்லாவற்றுக்கும் தயார் என்ற உறுதியுடன் நீங்கள் தெளிவாக இருக்கும்பட்சத்தில், உங்களுக்கான நாய்க்குட்டி உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியும்.

இரா.சிவசித்து, கட்டுரையாளர், நாட்டு நாய் இன ஆர்வலர்.

தொடர்புக்கு: sivarichheart@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x