Published : 27 May 2014 11:11 AM
Last Updated : 27 May 2014 11:11 AM
யானைக் கூட்டம் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அந்தோனி சடலமாக இருக்கும் சரணாலய வீட்டையே அவை சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் அந்தோனி அவற்றைக் காப்பாற்றப் பட்டபாடு அசாதாரணமானது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த லாரன்ஸ் அந்தோனி கானுயிர் மீதான ஆர்வத்தால் 5,000 ஏக்கர் பரப்பில் தூலா தூலா என்ற சரணாலயத்தை நடத்தி வந்தார். மனிதர்களால் பிரச்சினைக்குள்ளான யானைகளைக் கொண்டுவந்து அமைதிப்படுத்தி, மீண்டும் காடுகளில் விட்டுவிடுவதுதான் அவர் செய்த வேலை. அப்படி ஒரு வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்த யானைக் கூட்டங்களில் முதலாவது கூட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மிகுந்த கோபம் கொண்டவையாக இருந்தது.
நடந்தது என்ன?
அந்தோனி நடந்ததை விவரிக்கிறார். “யானைகள் நல்வாழ்வு அமைப்பிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘ஒரு யானைக் கூட்டத்தைக் காப்பாற்ற வேண்டும். மின்வேலிகளை அறுத்துத் தப்பிப்பதில் வல்லமை கொண்டவை அவை. சுட்டு கொல்லப்படலாம் என்ற நிலை உள்ளது. தலைவி யானை தனது தந்தங்களைப் பயன்படுத்தி மின்கம்பிகளை அறுத்தோ அல்லது மின்னதிர்ச்சி தரும் வலியைத் தாங்கியோ வேலியைச் சிதைத்துத் தப்பிப்பதில் திறமை மிகுந்தது. நீங்கள்தான் அவற்றைக் காப்பாற்ற வேண்டும்’ என்றார் அந்தப் பக்கம் பேசிய பெண்.”
சுமார் 950 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த யானைக் கூட்டம் இருந்த இடத்தைச் சென்றடைவதற்குள் தப்ப நினைத்த இரு யானைகள் சுட்டு கொல்லப்பட்டிருந்தன. பிடிபட்டவற்றை டிரக்குகளில் ஏற்றிவந்தோம். துப்பாக்கி ஊசியால் மயக்க மருந்து செலுத்தி யானைகள் அழைத்து வரப்பட்டன. டிரக்கைத் திறந்தபோது தலைவி யானை முதலில் இறங்கியது. தொடர்ந்து குட்டிப் பெண் யானையும், 11 வயதுடைய ஆண் யானையும் 3 பெண் யானைகளும் இறங்கின. இறுதியாக இறங்கிய 15 வயதுடைய இளம் ஆண் யானையின் தாயும் தங்கையும், தப்பிக்க முயற்சித்தபோது அதன் கண் முன்னாலே சுட்டு கொல்லப்பட்டிருந்தன.
தூலா தூலாவில்
மூத்த பெண் யானைக்கு நாணா என்று பெயரிட்டோம். அவற்றுக்கு மனிதர்கள் மீதிருந்த கோபம் குறைந்து தன்னிலை அடையும்வரை 8,000 வோல்ட் மின்சக்தி பாயும் மின்கம்பி வேலியுள்ள தனி இடத்தை ஒதுக்கியிருந்தோம். நாணாவின் வெறுப்பு நிறைந்த பிளிறல் அந்த வட்டாரத்தையே நடுங்க வைத்தது. மெல்ல நடந்து மின்கம்பியைத் தொட்டாள். அதிர்ச்சியால் உடல் அதிரப் பின்நகர்ந்து, மின்வேலியின் கம்பி அருகே தும்பிக்கையை நீட்டி மின்துடிப்பைச் சோதித்தபடியே நடந்தாள். மற்றவர்கள் பின்தொடர்ந்தனர்.
அன்றிரவு யானைகள் தங்களுடைய காட்டை நோக்கி நிற்க, நான் உறங்கிப் போனேன். திடீரெனப் பணியாளர்கள் பதைபதைப்புடன் ‘யானைகள் தப்பித்துவிட்டன, வேலியை உடைத்துவிட்டன’ என்றனர். மின் வேலியருகே இருந்த பெரிய மரத்தைச் சாய்த்து வேலியை உடைத்து, மின்வேலிக்கு மின்சாரம் தரும் ஜெனரேட்டர் அறையைக் கண்டுபிடித்துத் தகர டப்பாவை நசுக்குவது போல் சிதைத்து தங்களுடைய காட்டுக்குப் பயணப்பட்டுவிட்டன.
தேடுதல் குழுவுடன் தூலா தூலாவின் எல்லைவரை சென்றோம். ஆனால் அது தாமதமான நடவடிக்கை. உள்ளூர் மக்கள் சிலர் பெரிய துப்பாக்கிகளுடன் எங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தனர். எங்களது வண்டியிலிருந்த வானொலியில் யானைகளைக் கொல்ல வழங்கிய உத்தரவு ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்தக் கூட்டத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் கொண்டுவந்து சேர்த்தோம். ஆனால் பிரச்சினைகள் ஓயவில்லை.
அடைபட்டிருப்பது அவற்றின் சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சியை அதிகரிக்கவே செய்தது. அவற்றின் உயிரைக் காக்க மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தபோது, மின்னலாய் வழி தோன்றியது, நான் அந்த யானைக் கூட்டத்துடனே வாழவேண்டும். அவற்றுடன் தங்க வேண்டும். நானே தீனி போட வேண்டும். உரையாடி உறவாட வேண்டும். இரவும் பகலும் அவற்றுடனே இருக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. அதையே நான் செய்தேன். எனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள் நாணா. அவளுடைய உடல் முழுக்க வெறுப்பு கசிந்து கொண்டிருந்தது. நாணாவை நிழலாகத் தொடர்ந்துகொண்டிருந்தது அதன் குடும்பம். சீக்கிரத்திலேயோ அல்லது இன்னும் கொஞ்சம் காலம் கழித்தோ இங்கிருந்து அவை தப்பித்து விடுதலை பெற முயற்சிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குத் தவித்தேன்.
ஒரு நாள் 4.45 மணியிருக்கும், அந்த அதிகாலையில் முரட்டுக் கோபத்துடன் இருக்கும் நாணாவிற்கு முன் நம்பிக்கையிழந்து கெஞ்சிக் கொண்டிருந்தேன். என்னையும் நாணாவையும் 8,000 வோல்ட் மின்கம்பி வேலி மட்டுமே பிரித்திருந்தது. நாணா தப்பிக்கத் தயாராக இருந்தாள். நாணா உடலை இறுக்கி, காதுகளைப் பரப்பியிருந்தாள். ‘வேண்டாம் நாணா, நீ இதைச் செய்யக்கூடாது,’ எவ்வளவு அமைதியுடன் கூற முடியுமோ, அவ்வளவு அமைதியுடன் கூறினேன். ஆனால் அவள் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். மற்ற யானைகள் சிலைகள் போல் இருந்தன. தொடர்ந்து கூறினேன், ‘இதுதான் உன்னுடைய வீடு, தயவு செய்து அதைச் செய்யாதே என் பெண்ணே’.
"நீ இங்கிருந்து வெளியே சென்றால் கொன்றுவிடுவார்கள். இதுதான் உங்களுடைய வீடு. நாணா இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை," என்றேன். நான் இருந்த சூழலின் முட்டாள்தனத்தையும் உணர்ந்திருந்தேன். குட்டியுடன் இருக்கும் ஒரு காட்டுப் பெண் யானையிடம் மென்னிருட்டில் பேசிக் கொண்டிருக்கிறேன், இருப்பதிலேயே மோசமான கூட்டணி இது. நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பது போல, அதனுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து வெளியேறினால், அத்தனை பேரும் இறந்து விடுவீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் இதயத்திலிருந்து கூறினேன். அவள் வெளியேறத் தயாராகி, உடலை மீண்டும் இறுக்குவது தெரிந்தது.
விடாமல் பேசினேன்
வேலியைத் தள்ளித் தப்பிக்கும் அவர்களின் பாதைக்குக் குறுக்கே நான் நின்று கொண்டிருந்தேன். பக்கத்தில் இருக்கும் மரத்தில் ஏறித் தப்பிக்க எனக்குச் சில நொடிகளே கிடைக்கும். மனிதர்களை மொத்தமாக வெறுக்கும் அந்த யானைகளின் கால்களிடமிருந்து தப்பிக்க அவ்வளவு வேகமாக இயங்க முடியாது என்பதும் தெரிந்திருந்தது. ஆனாலும் அவளிடம், “இங்கிருந்து செல்லாதே, அது ஆபத்தானது,” என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். அப்படி நான் பேசிக் கொண்டிருந்த ஒரு சிறிய கணத்தில் எனக்கும் நாணாவுக்கும் இடையில் ஏதோ ஒன்று நடந்தது. மிகக் குறுகிய காலத்தில் அந்தப் புரிதல் வெளிச்சம் பெற்றது. நாணா மெல்லப் புதருக்குள் கரைந்தாள். மற்ற யானைகளும் அவளைத் தொடர்ந்து இருட்டில் கரைந்தன. எங்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பதைத் தர்க்கப்பூர்வமாக விளக்க முடியாது. ஆனால், எனக்கு நம்பிக்கை பிறந்தது” என்று அந்தோனி குறிப்பிட்டிருக்கிறார்.
லாரன்ஸ் அந்தோனி இறந்தபோது எங்கோ தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த அந்த யானைக் கூட்டம், அந்தோணியின் மரணத்தை எப்படியோ உணர்ந்து 12 மணி நேரம் பயணித்துத் தூலா தூலா சரணாலயத்தைச் சுற்றி வந்தன. அஞ்சலி செலுத்துவது போல் ஒற்றை வரிசையில், தங்களின் அன்பையும் நன்றியையும் காட்டி.
யானைகள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், நாம்?
அரச்சலூர் செல்வம்- கட்டுரையாளர், முன்னோடி இயற்கை விவசாயி, தொடர்புக்கு: organicerode@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT