Last Updated : 05 Sep, 2015 02:29 PM

 

Published : 05 Sep 2015 02:29 PM
Last Updated : 05 Sep 2015 02:29 PM

பசுமை இலக்கியம்: நகரத்துக்குள் ஒரு காடு!

சென்னையின் இதயமாக இருந்த, இருக்கின்ற ஒரு காட்டைப் பற்றி 1990-களில் வெளியானது 'Forest in the City' எனும் புத்தகம். சென்னையைச் சேர்ந்த இயற்கையியலாளர் குமரன் சதாசிவம் எழுதியுள்ள இந்தப் புத்தகம் அளவில் சிறிதாக இருந்தாலும், உள்ளடக்கத்தில் பெரிய புதையல்தான்!

சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்துக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள், தங்கள் கல்லூரியைச் சூழ்ந்திருக்கும் காட்டுக்குள் பயணிக்கிறார்கள். அங்கு அவர்கள் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள், அவர்களுடைய மனதில் புதிய, வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த மூன்று பேரோடு சேர்ந்து பலவகைப் பறவைகள், வெளிமான், புள்ளிமான் மற்றும் முதலைகள் ஆகியவையும் இதர கதாபாத்திரங்களாக இந்தப் புத்தகத்தின் வழியே நம்முடன் உலாவுகின்றன. அந்த மாணவர்கள் பெற்ற அதே அனுபவத்தை, வாசகர்களாகிய நாமும் பெற முடிகிறது. அதற்குச் சதாசிவத்தின் எழுத்து துணைபுரிந்திருக்கிறது.

கிண்டி தேசியப் பூங்காவைத் தவிர, ஐ.ஐ.டி.யில் உள்ள காடுகள்தான் மாநிலத் தலைமையகம் சென்னையின் கடைசி நுரையீரல் என்று சொல்வது மிகையில்லை.

நூலாசிரியர் முடிவுரையில் சொல்லியிருப்பதுபோல, இந்தக் காடுகள் இன்றைக்குப் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. இந்தப் புத்தகத்தை இன்றைக்கு வாசிக்கும் இளைஞர்கள் மட்டுமல்லாமல், சென்னை நகர மேம்பாட்டுக்காகத் திட்டமிடுபவர்களையும் இது சிந்திக்க வைக்கும்.

'Trees of Delhi' என்ற புத்தகத்தை எழுதிய பிரதீப் கிரிஷென், இந்த நூலுக்கு அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. இயற்கையின் மீது விழிப்புணர்வு பெருகிவரும் இந்த நேரத்தில், இப்புத்தகத்தின் புதிய பதிப்பை வெளிக்கொண்டு வந்துள்ள 'சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட்'டுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

A forest in the city, குமரன் சதாசிவம், சில்ட்ரன்ஸ் புக் டிரஸ்ட், 781,

ரயாலா டவர்ஸ், 18 பி, எல்.ஐ.சி. எதிரே, அண்ணா சாலை,

சென்னை - 2. தொடர்புக்கு: 044-30221850

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x