Published : 04 Apr 2020 08:44 AM
Last Updated : 04 Apr 2020 08:44 AM

இது ஒரு நல்ல வாய்ப்பு

ப. ஜெகநாதன்

இது ஒரு நல்ல வாய்ப்பு; நமக்காக, நாமே ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு! உறவுகளைப் புதுப்பிக்க, மேம்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இயற்கையுடன் நாம் கொண்டிருக்கும் உறவைச் சொல்கிறேன். எவ்வளவு அமைதியாக இருக்கிறது? இதற்குமுன் நாம் அனுபவித்திராத அமைதி. எப்போதும் இப்படியே இருந்துவிடாதா என ஏங்க வைக்கும் அமைதி. இத்தனை காலமாக எவ்வளவு இரைச்சல்களைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம்?

மலைகளை வெடி வைத்துத் தகர்த்ததால் எழுந்த இரைச்சல், கனரக வாகனங்கள் காட்டை அழித்தபோது எழுந்த இரைச்சல், நாமே வகுத்துக்கொண்ட நாட்டு எல்லைகளில் போரிட்ட இரைச்சல், தரையின் அடியிலும், கடலின் அடியிலும் அணுகுண்டை வெடிக்கவைத்தபோது ஏற்பட்ட பேரிரைச்சல், மதப் பண்டிகைகள், கேளிக்கைகள் என நாம் ஏற்படுத்திக்கொண்டிருந்த இரைச்சல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த இரைச்சலைகளைச் சகித்துக்கொண்டு, இவற்றிலிருந்து கொஞ்ச நாட்களாவது விலகியிருக்க வேண்டுமென நினைத்து, அமைதியான இடங்களுக்குச் சென்று, அங்கும் இரைச்சலை ஏற்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறதா? முன்பு தேடிச்சென்ற அமைதி, இப்போது தேடாமலேயே வந்துவிட்டது. அதை அனுபவிக்க வேண்டாமா? இத்தனை நாட்களாக நம்முடைய காதுகளை நாமே செவிடாக்கிக்கொண்டும், நம்மைச் சுற்றியிருந்த பல உயிரினங்களின் குரல்வளைகளை நெரித்து அவற்றைப் பேசவிடாமலும் செய்துகொண்டிருந்தோம். மனித உலகம் தன் இரைச்சல்களை நிறுத்திக்கொண்டபோது, உலகின் இயல்பான குரலைக் கேட்கத்தான் எவ்வளவு நன்றாக இருக்கிறது?

கேட்க மறந்த குரல்கள்

இன்று காலை வீட்டினருகில் ஓர் அணில் இடைவிடாது குரலெழுப்பிக்கொண்டிருந்தது. ஆண் குயில் தொலைவில் கூவியது. பெண் குயில் வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து ‘கெக்... கெக்... கெக்...’ எனக் கத்தியது. ஆண் குயில் கறுப்பாகவும் பெண் குயில் உடலில் பழுப்பும் வெள்ளைப் புள்ளிகளுடனும் இருக்கும். இவற்றின் நிறம் மட்டுமல்ல எழுப்பும் குரலொலியும் வேறு வேறு. காகங்கள் கரைந்தன. தெருமுனையில் சிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. இதுவரை வீட்டுக்குள் இருந்தபடியே அவற்றின் குரலைக் கேட்க முடிந்ததில்லை.

ஆனால், இன்றைக்குக் கேட்கிறது. தொலைவில் செண்பகம் ஒன்று ‘ஊப்... ஊப்... ஊப்...’ எனத் தொடந்து கத்திக்கொண்டிருந்தது. இந்தப் பறவை இந்தப் பகுதியில் இருப்பதையே அப்போதுதான் அறிய முடிந்தது. செம்மூக்கு ஆள்காட்டி ஒன்று அந்தி சாயும் வேளையில் வீட்டின் மேல் கத்திக்கொண்டே பறந்தது. வீட்டுச் சன்னலில் இருந்து பார்த்தபோது சப்போட்டா மரத்திலிருந்து எழுந்து இரண்டு வௌவால்கள் பறந்து சென்றன. என் தெருக்காரர்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு இந்த அமைதியான தருணமே, இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தந்துள்ளது.

பழைய உறவை மீட்டெடுப்பதைப் போல், சில உறவுகளைக் களைவதற்கும்கூட இந்தக் காலம் ஒரு நல்ல வாய்ப்பு. குப்பைக்கும் நமக்கும் இடையேயான உறவைத்தான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் வீட்டுக் குப்பைத் தொட்டி நிறைந்துவழியும். அதில் பிளாஸ்டிக் குப்பை, காய்கறிக் கழிவு எல்லாம் சேர்ந்தே கிடக்கும். ஆனால், கடந்த சில நாட்களாகக் குப்பைத் தொட்டி நிறைவதே இல்லை.

நொறுக்குத்தீனி இல்லையென்பதால் பிளாஸ்டிக் குப்பையும் இல்லை. அப்படியே இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் உடல்பருமன் அதிகரிக்கும் எனும் கவலையால், வாயைக் கட்டவும் கற்றுக்கொண்டாகிவிட்டது. வெளியில் செல்வது சாத்தியமல்ல என்பதால் அதிகம் ஆசைப்படாமல், மேலும் மேலும் வேண்டும் என எண்ணாமல், இருப்பதை வைத்துச் சமாளிக்க, சிறியதே அழகு - குறைவே நிறைவு என்பதை இந்த அமைதியான நேரம் கற்றுத் தந்திருக்கிறது.

இப்போது புரிகிறதா?

மற்றவர்களின் துயரங்களை உற்றுநோக்க, அவர்களுடைய நிலையில் நம்மை வைத்துப்பார்க்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது நமக்கு எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. உயிரியல் பூங்காக்களில் சிறிய கூண்டில் புலி ஒன்று ஓயாமல் அங்குமிங்கும் திரும்பித் திரும்பி நடந்துகொண்டே இருந்ததும், சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட யானை இடைவிடாமல் தலையையும் தும்பிக்கையையும் மேலும் கீழும் ஆட்டி, கால்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே இருந்ததும் நினைவுக்கு வந்தது. உயிரினங்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவு இது.

என் வீட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தால் பக்கத்து வீட்டின் வளர்ப்புக் கிளிகளின் கூண்டு தெரியும். வெகுதொலைவில் இருந்து, அமேசான் காடுகளில் இருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ கடத்திக்கொண்டு வரப்பட்டவை அவை. வளர்ப்பு உயிரினங்கள் மீது மக்கள் கொண்ட நேசம் காரணமாக உருவான கள்ளச் சந்தையின் விளைவு இது. அழகாக இருக்கின்றனவென்று ஒவ்வொரு முறை கிளிகளை வாங்கிவரும்போதும், நாமும் அந்தக் கள்ளச் சந்தையை ஊக்குவிக்கவே செய்கிறோம்.

உயிரினங்களைக் கூண்டுக்குள் அடைத்து மட்டும்தான் வைத்திருக்கிறோமா? நம்மைத் தவிர இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் சுதந்திரமாக உலவவிடாமல் ஒடுக்கியுமல்லவா வைத்திருக்கிறோம். காபி, தேயிலை, தைலமரம் என ஓரினப்பயிர்களை வளர்க்க, அகலமான சாலைகளை - ரயில் பாதையை அமைக்க, உயரழுத்த மின்கம்பிகளைக் கொண்டுசெல்ல, ராட்சத நீர்க் குழாய்களையும், கால்வாய்களையும் கட்ட, நகரங்களை விரிவாக்கிக் கட்டடங்களை எழுப்ப, மலைகளை வெட்டி, காடுகளைத் திருத்தி இயற்கையான வாழிடங்களைத் துண்டு துண்டாக்கிக்கொண்டே போகிறோம்.

இதனால் அங்கு வாழும் யானைகள், சோலை மந்திகள் (சிங்கவால் குரங்குகள்), மலையணில்கள், பறவைகள், சின்னஞ்சிறிய தவளைகள் முதலான பல உயிரினங்களின் வழித்தடத்தை மறித்தும், அவற்றின் போக்கை மாற்றியும், அவற்றில் பலவற்றைப் பலியாக்கிக் கொண்டுமல்லவா இருக்கிறோம். வீட்டுக்குள் இப்படி அடைபட்டுக் கிடக்கும்போது நம்மால் அடைத்து வைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உயிரினங்களின் நிலையையும் சற்றே உணர்ந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

யார் பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அனுசரித்து நடக்கவும், சகிப்புத் தன்மையை வளர்த்துக்கொள்ளவும்கூட இது ஒரு நல்ல வாய்ப்புதான். நான் புரிந்துகொள்ளச் சொல்வது நாம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஏற்கெனவே வசித்துவந்த உயிரினங்களை, அவற்றின் குணாதிசயங்களைத்தான். எத்தனை யானைகளைப் பிடித்துக் கட்டிவைத்திருப்போம்; எத்தனை சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வேறு இடங்களில் விட்டுவிட்டு வந்திருக்கிறோம்; எத்தனை மயில்களை நஞ்சுவைத்துக் கொன்றிருப்போம்; எத்தனை பாம்புகளை அடித்தே கொன்றிருப்போம்.

திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதைப்போல் எந்தக் காட்டுயிரினமும் நம்மைத் துரத்தித் துரத்திக் கொல்வதில்லை. ‘துஷ்டரைக் கண்டால் தூர விலகு’ என்பதுபோல் நம்மைக் காணும் போதெல்லாம் அவை விலகியே செல்ல முற்படுகின்றன. எதிர்பாராவிதமாக அவற்றின் அருகில் நாம் செல்ல நேரும் அசாதாரணமான சூழ்நிலையில், பயத்தில் அவை தாக்கி, மனிதர்கள் காயமுறவோ - இறக்கவோ செய்யலாம். ஆறறிவு கொண்ட நாம் கவனமாக இருக்க வேண்டுமில்லையா? எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டுமல்லவா?

வெறும் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரி ஒன்று, நம் மேல் தொற்றிவிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம், அதுபோல் காட்டுயிர்கள் வாழும் பகுதியில் நாமும் வாழ நேர்ந்தால் நாம்தானே பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும்? நாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போது குடும்பத்தினருடன் எவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. இருந்தாலும் அவர்களை எல்லாம் வீட்டை விட்டா விரட்டிவிடுகிறோம்? இல்லை. எனவே, எல்லா உயிரினங்களிடமும் எச்சரிக்கையுடனும் சரியான இடைவெளியுடனும், சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

யாரையும் குற்றம் சொல்லாமல் இருப்பதற்குக் கற்றுக்கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வைரஸைத் தமிழில் தீநுண்மி என்று மொழிபெயர்க்கின்றனர். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைத் தான் ஒரு நுண்ணுயிரும் செய்கிறது - பல்கிப்பெருகிக்கொண்டுள்ளது. நாம் வளர எத்தனை வகையான உயிரினங்களை அழித்திருக்கிறோம்?

இனிவரும் காலங்களில் இந்த உலகுக்கும், நமக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என எண்ணிப் பார்க்க, என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள, சிந்திக்க, அதை எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட, இந்த அமைதியான காலம் ஒரு நல்ல வாய்ப்பு.

கட்டுரையாளர் தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x