Published : 15 Aug 2015 02:30 PM
Last Updated : 15 Aug 2015 02:30 PM
சென்னகோத்தபள்ளியின் புதர்க்காடு நிரம்பிய மலைப்பாங்கான பகுதியை 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருந்தால், யாரும் அங்கு வாழ விரும்பியிருக்க மாட்டார்கள். தண்ணீருக்கான எந்தத் தடயமும் அப்போது அங்கில்லை. ஆனால், இன்றைக்கு அந்த மலைச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட வகை மரங்கள், புதர்கள், செடிகொடிகள் நிறைந்த பசுமையான காடு நம்மை வரவேற்கிறது. இது ‘திம்பக்ட்டு' நிகழ்த்திய அதிசயம்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சென்னகோத்தப்பள்ளி கிராமத்தில் உள்ளது ‘திம்பக்ட்டு'. இந்தியாவில் மோசமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று அனந்தபூர். 1992-ல் பப்லு கங்குலியும் மேரி வட்டமட்டமும் திம்பக்ட்டுவை அங்கே ஆரம்பித்தபோது, அவர்களும் வறட்சியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். இந்தத் தம்பதியும், அவர்களுடைய நண்பர் ஜான் டிசோசாவும் 32 ஏக்கர் தரிசு நிலத்தை அங்கே வாங்கினார்கள். "எங்களுடைய முயற்சி எந்த வகையிலும் வெற்றி பெறாது" என்றே எல்லோரும் சொன்னார்கள். ஆனால், தங்கள் கனவைப் பின்தொடரும் நம்பிக்கை பப்லுவும் மேரிக்கும் இருந்தது.
தவறான புரிதல்
அதற்கு ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற உலகை மாற்றிய புத்தகத்தை, அவர்கள் ஆயுதமாக ஏந்தினர். சொந்த முயற்சியில் 7,000 மரக்கன்றுகளை வாங்கி நட்டுவிட்டு, பேசாமல் இருந்தார்கள். ஆனால், எதுவும் மாறவில்லை. ஃபுகோகாவின் ‘எதுவும் செய்யாமலிருக்கும் வேளாண்மை' என்ற கொள்கைப்படி, எதையுமே செய்யத் தேவையில்லை என்று அவர்கள் அப்போது நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது தவறு. மண்ணுக்குத் தேவையற்ற உரத்தையோ, பூச்சிக்கொல்லிகளையோ இடும் வேலையைச் செய்யக்கூடாது என்றுதான் ஃபுகோகா சொல்லியிருந்தார்.
நிலத்தைச் சுற்றியிருக்கும் மரங்கள், நீர்நிலைகளைப் பாதுகாத்தால்தான் மண் பலனைத் தரும் என்று சீக்கிரமே அவர்களுக்குப் புரிந்தது. மண்ணுக்கு உயிர்கொடுக்க, அருகிலுள்ள கிராம மக்களுக்கு அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினர். மண் அணைகள், சிறிய தடுப்பணைகளைக் கட்டப்பட்டன. மிகுந்த ஊட்டம் நிரம்பிய ஹோல்கர் மாடுகள் தரிசு நிலங்களில் மேயவிடப்பட்டு, கோமியமும் சாணமும் இடப்பட்டன. உள்ளூர் தாவரமான போதா புல் விதைகளைப் பரவலாக்கி, அந்த வைக்கோலைத் தீவனமாகப் பயன்படுத்தினார்கள். இப்படி ஒவ்வொரு நடவடிக்கையையும் தவறு செய்து, திருத்தி, மரபை மீட்டெடுக்கக் கடுமையாக உழைத்தார்கள். உள்ளூர் விதைகளைச் சேகரித்து, ஒரு விதை சேகரிப்பு மையத்தை உருவாக்கி அந்த மண்ணுக்கான பயிர்களைப் பப்லுவும் மேரியும் பரவலாக்கினார்கள். நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தும் மர வகைகள் பயன்படுத்தப்பட்டன.
இயற்கையின் திறன்
அவர்களுடைய முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பலன் தெரிய ஆரம்பித்தது. மண்ணில் புத்துயிர் எட்டிப்பார்த்தது. கிட்டத்தட்ட 250 நீர்நிலைகள், சுனைகள் மறுவாழ்வு பெற்றன. பயிர் சுழற்சி முறை பின்பற்றப்பட்டது. வேதி உரங்கள் தடை செய்யப்பட்டு, முழுக்கமுழுக்க இயற்கை விவசாய முறை பின்பற்றப்பட்டது. “தனக்குத் தானே புத்துயிர் ஊட்டி கொள்ளும் திறன் இயற்கைக்கு உண்டு. அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும்,” என்கிறார் மேரி.
தற்போது வேளாண் காடு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, பூச்சிக்கொல்லி தவிர்ப்பு ஆகியவை தரும் நன்மைகள் பற்றி நூற்றுக்கும் குறையாத கிராம விவசாயிகளுக்குப் பப்லுவும் மேரியும் ஆலோசனை வழங்கிவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக மண், காடுகள், தீவனம், விலங்குகள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விவசாயிகள் உணர்ந்துகொண்டுவருகின்றனர். “தங்களுக்கு லாபம் தருவதாகவும் பொருத்தமாகவும் இருக்கும் தொழில்நுட்பங்களை மட்டுமே விவசாயிகள் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்கள் அவற்றைக் கைவிட்டு விடுவார்கள். அவர்களுடைய தேவையை எங்களுடைய இயற்கை வேளாண் முறைகள் பூர்த்தி செய்கின்றன” என்கிறார் பப்லு.
நிஜமான கனவு
அந்த விவசாயிகள் பணப் பயிர்களில் கவனம் செலுத்தியபோது வீரிய விதைகள், உரங்கள், கடன்கள், வளம்குன்றிய நிலங்கள் என்ற விடுபட முடியாத சுழற்சிக்குள் தள்ளப்பட்டார்கள். அதற்குப் பதிலாகச் சூழ்நிலையின் தேவைக்கேற்ப எதை வளர்க்க வேண்டும் என்ற சுதந்திரத்தை இயற்கை வேளாண்மை வழங்கியுள்ளது.
‘ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தைப் படித்ததன் மூலம், 'மண்ணை மீட்டெடுத்தல்' என்ற சிறிய சிந்தனை மேரி, பப்லுவின் மனதில் உதித்தது. அதன்காரணமாக ‘திம்பக்ட்டு' என்ற பெருங்கனவு இன்றைக்கு நிஜமாகி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT