Published : 07 Mar 2020 10:55 AM
Last Updated : 07 Mar 2020 10:55 AM
த.சத்தியசீலன்
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிளகாய் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மிளகாய் உற்பத்திசெய்வது மட்டுமல்லாது, நுகர்விலும் ஏற்றுமதியிலும் இந்தியா உலக அளவில் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் இருந்து சீனா, வியட்நாம், தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய மசாலா வாரியத்தின் கணக்கெடுப்பின்படி 2018-19-ம் ஆண்டில் 7.21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு, 16.89 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் 49 சதவீதமும், கர்நாடகாவில் 18 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 6 சதவீதமும், தமிழகத்தில் 3 சதவீதமும் மிளகாய் பயிரிடப்படுகிறது.
'உலகின் மசாலாக் கிண்ணம்’ என இந்தியா அறியப்படுகிறது. இதற்கு மிளகாயின் பங்களிப்பு இன்றியமையாதது. மசாலாவின் மூலப்பொருளாகவும் சுவையூட்டியாகவும் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. இதில் கேப்சைசின் நிறைந்திருப்பதால் உட்கொள்ளும்போது காரச்சுவையை உணர முடிகிறது.
இதேபோல் கேப்சாந்தின் காணப்படுவதால் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. காரம், நிறம் ஆகிய பண்புகளின் அடிப்படையில் இதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
இதில் சோடியம், கொழுப்பு ஆகியவை குறைந்து காணப்படுகிறது. வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி', வைட்டமின் 'ஈ', ஃபோலிக் அமிலம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
மானாவாரி, இறவையில் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2, கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1, பிகேஎம் 1 ஆகியவை மிளகாய் ரகங்கள் சிறந்தவை. கடற்கரையோர மாவட்டங்களுக்கு பயிரிட பிஎல்ஆர் 1 ரகம் சிறப்பானது. சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு ரகங்களும் அந்தந்தப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன. நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும்.
உறைபனி இல்லாத 250 சென்டி கிரேட்வரை இருக்கக்கூடிய வெப்பம் உகந்தது. மானாவாரியிலும், இறவையிலும் இதைப் பயிரிடலாம். இந்தப் பயிரில் 2 மணி நேரத்துக்கு மேல் நீர் நின்றால் செடியின் வேர் அழுகிவிடும். நுனிக்கருகல் நோய், பழம் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது ட்ரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.
அசோஸ்பைரில்லம் நுண்ணுயிரியை ஹெக்டேருக்கு 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையை 25 சதவீதம் குறைக்கலாம். நிலத்தை 4 முறை உழுது, கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 25 டன் தொழு எரு அல்லது மக்கும்குப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து, பயிருக்குப் பயிர் 30 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
கோ 3 வகைகளுக்கு 30-க்கு 15 செ.மீ. இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். அடியுரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப் பயிருக்குத் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். இறவையில் விதைத்த 70, 100 -130-ம் நாள், நடவுப் பயிரில் நட்ட 30, 60, 90-ம் நாள் ஒவ்வொரு முறையும் ஹெக்டேருக்கு 30 கிலோ வீதம் இடவேண்டும்.
கோடைக் காலங்களில் 7 நாள்களுக்கு ஒரு முறையும், மழைக் காலங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். இறவைப் பயிர் நாற்றுக்கள் நட்ட 3-ம் நாள் ஹெக்டேருக்கு புளுகுளோரலின் ஒரு கிலோ மருந்து என்ற அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து சீராகக் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
நட்ட 45-ம் நாள் மண் அனைத்து ஒரு கைக்கிளை எடுக்க வேண்டும். மிளகாயில் 45 செ.மீ. என்ற அளவில் வரிசைக்கு வரிசை இடைவெளி விட்டு ஊடுபயிராகக் கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை இரு வரிசைக்கு மத்தியில் வளர்த்துக் களைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உபரி வருமானம் பெறலாம்.
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100-ம் நாளில் ஒரு முறையும், 30 நாள்களுக்குப் பிறகு இரண்டாம் முறையும் வளர்ச்சி ஊக்கி (என்ஏஏ) 10 மில்லி கிராம், ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பச்சை மிளகாயை நட்ட 75 நாள்களிலும் அல்லது விதைத்த 105 நாள்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்துக்குப் பின்னும் அறுவடை செய்யலாம்.
விலை நிலவரம் ஆய்வு
இந்நிலையில் அறுவடையின்போது மிளகாய்க்கு எவ்வளவு விலை கிடைக்கும் என்று ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஆர்.அசோக், பேராசிரியர் கே.எம்.சிவக்குமார் ஆகியோர் அதன் முடிவுகளைப் பின்வருமாறு விளக்குகின்றனர்.
“தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2018-19-ம் ஆண்டில் 46,873 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு 21,693 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முண்டு, சம்பா ஆகிய ரகங்கள் தமிழகத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் முண்டு ரகமும், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சம்பா ரகமும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இம்மாவட்டங்களில் பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் மிளகாய் விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் மே மாதம்வரை சந்தைகளில் வரத்து காணப்படும். அறுவடையின்போது அதிக அளவில் கொள்முதல் செய்து சேமித்து வைக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் ரகங்கள் கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, விருதுநகர் ஆகிய சந்தைகளுக்கு மார்ச் மாதம் முதல் மே மாதம்வரை அதிக வரத்து காணப்படும்.
அதிக விலை கிடைக்கும்
இதேபோல் மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து நவம்பர் மாதமும் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து டிசம்பர் மாதமும் வரத்து காணப்படும். இந்நிலையில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு முன்னறிவிப்புத் திட்டத்தின் மூலமாக, ராமநாதபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த 19 ஆண்டுகளாக நிலவிய மிளகாய் விலை நிலவரம், சந்தை நிலவரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் வரும் மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தரமான மிளகாய்க்குப் பண்ணை விலையாக ரூ.160-ரூ.170 வரை கிலோவுக்கு விலை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT