Published : 29 Feb 2020 10:48 AM
Last Updated : 29 Feb 2020 10:48 AM
சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில் வயல் சூழல் ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. வயல் வெளியில் ஏதாவது ஒரு தீமை செய்யும் பூச்சியைப் பார்த்தால்கூட, அந்தப் பூச்சி பெருகிப் பயிருக்குச் சேதம் விளைவித்துவிடுமோ என்ற அச்சம் உழவர்களுக்கு ஏற்படுகிறது.
ஆனால், எந்தப் பூச்சியும் தன்னிச்சையாக அதிக அளவில் பெருகிவிட முடியாது. ஏனெனில், வயலில் உள்ள வெவ்வேறு விதமான சூழ்நிலைகள் ஒரு பூச்சியின் இனப்பெருக்கத்துக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கின்றன. இதைக் கணிப்பதற்கு வயல் சூழல் ஆய்வின்போது குறுக்கும் நெடுக்குமாக 10 செடிகளை ஆங்காங்கு ஆய்வு செய்வதன் மூலம் பூச்சிகளைப் பெருக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளான பருவநிலை, பயிரின் வளர்ச்சி நிலை, தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை, பயிரின் தாங்கும் திறன், பயிரின் ஊட்டம், நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை, மண் நலம் ஆகியவற்றைக் கணக்கிட முடியும். இதன் மூலம் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக மாற்று முறைகளை நோக்கி உழவர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதான் இதன் நோக்கம்.
பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியைக் காற்றின் திசைவேகம், அங்கு நிலவும் வெப்பம், ஈரப்பதம் ஆகியவை தீா்மானிக்கின்றன. உதாரணமாக, நெற்பயிரின் புகையான் தாக்குதல் ஏற்பட நெருக்கமாக நடப்பட்ட நெல் வயல்களில் உருவாகும் வெப்பமும் ஈரப்பதமும் முக்கியக் காரணிகள்.
பயிர்களுக்குச் சரியான இடைவெளி கொடுக்கும்போது காற்றோட்டம் ஏற்படுவதாலும் சூரிய ஒளி மண்ணில் படுவதாலும், தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும். சில வகையான பூச்சிகளின் தாக்குதல் நாற்றுப் (இளம்) பருவத்தில் அதிகமாகவும் வேறு சில வகையான பூச்சித் தாக்குதல் வளர்ந்த பயிர்களிலும் ஏற்படுகிறது.
எனவே, பயிரின் வயதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் பருவப் பயிர்களில் அசுவினிப் பூச்சிகள் இருந்தால் பயிர் நன்றாக வளர்ந்து ஊட்டமுடன் இருக்கும்போது பூச்சி, நோய்த் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். அசுவினிக்கு எதிரிப்பூச்சிகளான பொறி வண்டு, அசுவினி ஈ, அசுவினி கொம்பன், சிர்பி்ட் ஈ, பச்சைக் கண்ணாடி இயற்கைப் பூச்சி ஆகியவற்றின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாகச் சத்துகளைக் கொடுக்கும்போது, பூச்சித் தாக்குதல் அதிகமாக ஏற்படும்.
உதாரணமாக, அதிகப்படியான தழைச்சத்து (யூரியா) இடுவதன் மூலம், புகையான், இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும். தீமை செய்யும் பூச்சிகளுக்குக்களை உணவாகவும் இருப்பிடமாகவும் இருக்கும் அதே நேரத்தில், நன்மை செய்யும் பூச்சிகளுக்கும் உணவாகவும் இருப்பிடமாகவும் இருப்பதால் வயலில் குறைந்த அளவுக்காவது களைகள் இருப்பது அவசியம். வயல் சூழல் ஆய்வின் மூலம் பயிர்கள் பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ளும், தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதை நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலின்போது உருவாகும் பக்கக்கிளைகள் மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கத்தரிச்செடியில் தண்டு, காய்த் துளைப்பான் தாக்குதலின்போது உருவாகும் பக்கக் கிளைகள்மூலமாகவும் இது கண்டறியப் பட்டிருக்கிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுபோல் பூச்சிகளைக்கொண்டே பூச்சிகளை அழிக்கும் முறையை ஊக்கப்படுத்தும் வயல் சூழல் ஆய்வைப் பிரபலப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவர் வயல்வெளிப் பள்ளிகள்.
வட்டாரங்கள் தோறும் வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் உழவர் வயல்வெளிப் பள்ளிகள் மூலம் உழவர்களின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவும் பூச்சித் தாக்குதலுக்கும் பொருளாதாரச் சேத நிலைக்கும் உள்ள வேறுபாட்டைப் பகுத்தறிந்து, உடனடித் தீர்வாக பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைத் தவிர்த்துத் தீமைசெய்யும் பூச்சிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவும் இதன்மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதில் வரப்புப் பயிர், ஓரப் பயிர், ஊடு பயிர், சாகுபடி மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரித்துப் பல்லுயிர்ப் பெருக்கத்தை உருவாக்குவதே உழவர் வயல்வெளிப் பள்ளிகளின் முக்கிய நோக்கம்.
கட்டுரையாளர்கள் தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT