Published : 29 Feb 2020 10:39 AM
Last Updated : 29 Feb 2020 10:39 AM

காலநிலை நெருக்கடி: அச்சுறுத்தும் ‘உச்சப் புள்ளிகள்’!

சு. அருண் பிரசாத்

புவி என்பது மனிதர்களால் ஆனதோ மனிதர்களுக்கு மட்டுமானதோ அல்ல. பல கோடிக்கணக்கான உயிர்களுடனும் உயிரற்ற பொருட்களுடனும் மனிதர்களையும் அது ஓர் அங்கமாகக் கொண்டிருக்கிறது. காடு, மலை, கடல் போன்றவற்றை உள்ளடக்கிய அதன் புவியியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை; அவற்றுள் காலநிலை அமைப்பும் (Climate system) ஒன்று. பல நூற்றாண்டுகளாகச் சூழலியல் சமநிலையை இவை பேணிவந்தன.

ஆனால், புவியின் பிரம்மாண்ட வரலாற்றில் மிக அண்மைக் காலத்தில் தோன்றிய மனிதர்களால் அந்தச் சமநிலை கடுமையாகக் குலைக்கப்பட்டிருக்கிறது. மனிதச் செயல்பாடுகள் புவியின் சுற்றுச்சூழல், புவியியல் அமைப்புகள் ஆகியவற்றில் தாக்கம் செலுத்தி, அதன் போக்கை மாற்றியமைத்திருக்கும் இந்தக் காலகட்டத்துக்குப் புவியியல் அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்று பெயரிடுவது குறித்து அறிவியலாளர்கள் பரிசீலித்துவருகின்றனர்.

காலநிலை மாற்றம்

தொழிற்சாலைகள், கட்டுமீறிய உற்பத்தி, முறையற்ற நுகர்வு, புதைபடிவ எரிபொருள் பயன்பாடு போன்ற மனிதச் செயல்பாடுகளால் கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் கட்டுப்பாடற்ற அளவில் வெளியேறி வளிமண்டலத்தில் சேர்கின்றன. இதனால் புவி வெப்பமாதல், உலகளாவிய கடல்மட்ட உயர்வு எனக் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகம் முழுக்க நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு, சராசரி வெப்பநிலை, சராசரி மழைப்பொழிவு உள்ளிட்ட காலநிலை நிகழ்வுகள் அன்றாடம் புதிய உச்சத்தைத் தொட்டு அறிவியலாளர்களைத் திகைக்க வைத்துவருகின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 2019-ல் மட்டும் சுமார் 37 ஆயிரம் கோடி டன் கரியமில வாயு வளிமண்டலத்தில் சேர்ந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டு, அதிதீவிரத்துடன் நிகழ்ந்துவரும் இந்தத் தனித்தனி நிகழ்வுகள், ஒட்டுமொத்தமாக அடிப்படைப் புவியியல் அமைப்புகளின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உச்சப் புள்ளிகள்

சிக்கலான அமைப்பு ஒன்றில் ஏற்படும் சிறு மாற்றம், அந்த அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அதன் தன்மையையே ஒட்டுமொத்தமாகச் சீர்குலைத்துவிடும் நிலைக்கு ‘உச்சப் புள்ளி’ (Tipping Point) என்று பெயர். காலநிலை மாற்றத்தில் புவி வெப்பமாதல் போன்ற குறிப்பிட்ட சில விளைவுகள் வரம்பை மீறி, கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் செல்லும்போது, அவை ‘காலநிலை உச்சப்புள்ளி’ (Climate Tipping Point) என்று அழைக்கப்படுகின்றன. இவை உயிர்க்கோளத்தில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தி, மீள முடியாத நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியவை.

‘காலநிலை உச்சப் புள்ளி’ என்ற சொல்லை 15 ஆண்டுகளுக்கு முன் ஹன்ஸ் யோவஹிம் ஷென்ஹுபா (Hans Joachim Schellnhuber) என்ற அறிவியலாளர் பரிந்துரைத்தார். இங்கிலாந்தின் எக்ஸ்டெர் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த திமோதி லென்டன், 11 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றில், காலநிலை உச்சப் புள்ளிகளின் ஆபத்துகளைப் பட்டியலிட்டிருந்தார். புவியின் சராசரி வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸை மீறும்போதுதான் இத்தகைய உச்சப் புள்ளிகள் அரங்கேறும் என்றே அப்போது கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு டிகிரி செல்சியல் வெப்பநிலைக்கே உச்சப் புள்ளிகளில் சில நிகழத் தொடங்கிவிட்டன.

ஒன்பது உச்சப் புள்ளிகள்

காலநிலை மாற்றத்தால் தூண்டப்படச் சாத்தியமுள்ள 9 உச்சப் புள்ளிகளைக் கணித்து ‘கார்பன் பிரீஃப்’ இணையதளம் சமீபத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவை:

1) அட்லாண்டிக் கடல் சுழற்சி நின்றுபோதல்

2) மேற்கு அண்டார்க்டிகா பனிப்பாளம் சிதைந்துபோதல்

3) அமேசான் மழைக்காடுகளின் மரணம்

4) மேற்கு ஆப்பிரிக்கப் பருவக்காற்று/ பருவமழை மாற்றம்

5) நிலத்தடி உறைபனி உருகுதல், மீத்தேன் வெளியேற்றம்

6) பவளத்திட்டுகள் மறைதல்

7) இந்தியாவில் பருவமழை தவறுதல்

8) கிரீன்லாந்து பனிப்பாளம் சிதைந்துபோதல்

9) வட அமெரிக்க, ஐரோப்பாவின் சில பகுதிக் காடுகள் பாதிக்கப்படுதல்

1) அட்லாண்டிக் கடல் சுழற்சி நின்றுபோதல்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலை மையமாகக் கொண்டிருக்கும், AMOC என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் புவியின் கடல் சுழற்சி அமைப்பில் (Atlantic Meridional Overturning Circulation) ஏற்படும் மாறுபாடு, அமேசான் படுகையில் மழைப்பொழிவைக் குறைத்து உச்சப் புள்ளிகளின் தொடர் விளைவுகளைத் தொடங்கி வைக்கும். புவியின் காலநிலையை நிர்ணயிக்கும் வெப்பத்தை உலகம் முழுக்கப் பரவச் செய்யும் அமைப்பு இது என்பதால், இதில் ஏற்படும் மாறுபாடு பிராந்திய குளிரூட்டல், கடல்மட்ட உயர்வு ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும்.

2) மேற்கு அண்டார்க்டிகா பனிப்பாளம் சிதைந்துபோதல்

பனிப்பாறை தண்ணீரில் மிதக்கத் தொடங்கும் நிலைக்கு ‘கிரவுண்டிங்-லைன்’ என்று பெயர். மேற்கு அண்டார்க்டிகாவின் பனிப்பாறைகளில் இந்நிகழ்வு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்படி நிகழும்பட்சத்தில், பனிப்பாறைகளின் ஒட்டுமொத்தத் தகர்வு, கடல்மட்டத்தை ஐந்து மீட்டர்வரை உயர்த்தக்கூடும்.

3) அமேசான் மழைக்காடுகளின் மரணம்

இயற்கை நிகழ்வுகளால் அமேசான் படுகையின் தன்மை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் வேளாண்மை, கால்நடை மேய்ச்சல் போன்ற மனிதச் செயல்பாடுகளால் நிகழும் காடழிப்பு, அமேசான் மழைக்காடுகளின் அடிப்படைத் தன்மையை அழித்து, சவானா புல்வெளியாக மாற்றிவிடும். இதனால் உயிர்ப் பன்மை இழப்பு, மழைப்பொழிவுக் குறைவு போன்ற மீள முடியாத சிக்கல்கள் உருவாகும்.

4) மேற்கு ஆப்பிரிக்கப் பருவக்காற்று/ பருவமழை மாற்றம்

மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து கிழக்கில் செங்கடல்வரை சுமார் 5,400 கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும் ஆப்பிரிக்காவின் சஹெல் பகுதிப் பருவமழைப் பொழிவில் திடீர் மாற்றம் ஏற்படும்; தொடர்ந்து அந்தப் பகுதி நிரந்தர வறட்சியில் விழும் ஆபத்தும் உண்டு. வேளாண்மைக்கு இடையூறு, சூழலியலில் மாற்றம் போன்ற பின்விளைவுகளால் இந்தப் பகுதி பாதிக்கப்படும்.

5) நிலத்தடி உறைபனி உருகுதல், மீத்தேன் வெளியேற்றம்

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு பூஜ்யம் டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையில், நிலத்தில் உறைந்த நிலையில் இருக்கும் பனி அல்லது கரிமப் பொருளுக்கு நிலத்தடி உறைபனி (Permafrost) என்று பெயர். புவியின் வட துருவத்திலும் சைபீரியா, அலாஸ்கா, கனடாவின் வட பகுதி ஆகிய பகுதிகளில் இவை அதிக அளவில் இருக்கின்றன.

உலகின் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு, கார்பனை அதிக அளவு கொண்டுள்ள இந்த நிலத்தடி உறைபனியை உருகச்செய்யும். பசுங்குடில் வாயுக்களான கரியமில வாயு, மீத்தேன் ஆகியவை இதிலிருந்து வெளிப்பட்டு, புவி வெப்பமாதலை மேலும் துரிதப்படுத்தும்.

6) பவளத்திட்டுகள் அழிந்துபோதல்

புவி வெப்பமாதல் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தாங்கும் திறனைக் குறைவாகப் பெற்றுள்ள சூழலியல் அமைப்புகளில் பவளத்திட்டுகள் (Coral Reefs) முதன்மையானவை. உயர்ந்துவரும் கடல் வெப்பநிலை, பவளத்திட்டுகளின் அழிவுக்கு வழிவகுக்கிறது. கடல் வளத்துக்கு இன்றியமையாதவையாகக் கருதப்படும் இவற்றின் அழிவு, கடல் சூழலியலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது மற்ற சூழலியல் அமைப்புகளிலும் எதிரொலிக்கும்.

7) இந்தியாவில் பருவமழை தவறுதல்

கரியமில வாயுவை அதிகம் உமிழும் நான்காம் மிகப் பெரிய நாடான இந்தியாவிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாகத் திகழும் பருவமழைப் பொழிவில், எல்-நினோ போன்ற நிகழ்வுகள் மிகப் பெரிய மாறுதல்களைக் கொண்டுவரலாம். இது வேளாண்மையை மிகப் பெரிய அளவில் பாதித்து, தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.

8) கிரீன்லாந்தில் பனிப்பாளம் சிதைந்துபோதல்

உயர்ந்துவரும் உலகச் சராசரி வெப்பநிலையால், வட துருவத்தில் உள்ள கிரீன்லாந்தில் பனிப்பாளம் சிதைந்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாத அளவுக்கு நிலைமை சீர்குலையும். இதனால் சுமார் 7 மீட்டர் அளவுக்குக் கடல்மட்டம் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

9) வட அமெரிக்க, ஐரோப்பாவின் குளிர்க் காடுகள் பாதிக்கப்படுதல்

புவியின் வட துருவம், அட்சரேகைப் பகுதிகளில் (higher latitude) அதிகம் உள்ள குளிர்பகுதிக் (போரியல்) காடுகள் கரியமில வாயுவைச் சேகரிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆனால், உலகச் சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக இப்பகுதி வெப்பமடைந்துவருவதால், கரியமில வாயுவைச் சேகரிக்கும் தன்மையை அவை இழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நன்றி: Carbon Brief, Nature, Yale E360.

கட்டுரையாளர் தொடர்புக்கு:

arunprasath.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x