Published : 22 Feb 2020 11:46 AM
Last Updated : 22 Feb 2020 11:46 AM
சு. அருண் பிரசாத்
குஜராத்தில் ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் தொழில்முனைவோரான ராதாகிருஷ்ணன், ‘மியாவாகி முறை’ என்ற நுட்பத்தின் மூலம் காடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘என்விரோ கிரியேட்டர்ஸ் அறக்கட்டளை’யின் துணை நிறுவனர்களில் ஒருவர். இந்த நிறுவனம் இந்தியாவில் 9 மாநிலங்களில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு, காடுகளை உருவாக்கியுள்ளது. இதன் தொடக்கம், பின்னணி குறித்து ராதாகிருஷ்ணனிடம் உரையாடியதில் இருந்து:
‘காடு வளர்ப்பு’ என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியது எப்படி?
காடு, சூழலியல் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு ஈடுபாடு இருந்தாலும், 8 ஆண்டுகளுக்கு முன்பு அது தீவிரமடைந்தது. குஜராத்தின் உம்பர்காவில் கொண்டுவரப்பட்ட ஒரு சாலைத் திட்டத்துக்காக 50 ஆண்டுகள் பழமையான, 185 மரங்கள் தேவையின்றி வெட்டப்பட்டன. அப்படி வெட்டப்பட்ட மரம் ஒன்றில் இருந்து கீழே விழுந்துகிடந்த பறவைக் கூட்டைப் பார்த்தேன். அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நொறுங்கிப் போயிருந்தன. அதைப் பார்த்தபோது எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது; அந்தப் பறவைகளுக்காக அடர்ந்த காட்டை உருவாக்க வேண்டும் என்று அப்போது தீர்மானித்தேன்.
உடனடியாக அலுவலகத்துக்கு வந்து காடு வளர்ப்பு குறித்துத் தேடியபோது, ஜப்பானியத் தாவரவியலாளரான அகிரா மியாவாகி பற்றியும் அவருடைய காடு வளர்ப்பு முறை குறித்தும் அறிந்தேன். பிறகு நண்பர் ஒருவரும் நானும் மியாவாகிக் குழுவினரைத் தொடர்புகொண்டு அதன் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டோம். முதன்முறையாக உம்பர்காவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 38 வகையான 1,459 மரக்கன்றுகளை மியாவாகி முறையில் நட்டோம்.
‘மியாவாகி முறை’யின் தாக்கம் எப்படி இருந்தது?
‘மியாவாகி முறை’யை ஆழமாகக் கற்றோம். அதே வேளை, எனக்குத் தெரிந்த வழிமுறைகள் சிலவற்றையும் அத்துடன் இணைத்தேன். அது நன்றாகப் பலனளிக்கவே பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பேட்டைகள் எனப் பல இடங்களில் காடு வளர்ப்புக்கு அழைப்பு வந்தது. வளர்க்கப்பட்ட காடுகளுக்குத் தேனீக்கள், பறவைகள் வர ஆரம்பித்தன. தொடப்பட்ட காடுகள் என்று அழைக்கப்படும் மாமரங்கள் உள்ள காடுகளில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
நாங்கள் உருவாக்குபவை தொடப்படாத காடுகள்; இங்கு பறவைகள் கூடு கட்டும், தேனீக்கள் வரும், மண்புழுக்கள் உருவாகும். இயற்கை தனக்குத் தேவையானதைத் தானே உருவாக்கிக்கொள்கிறது. நாம்தான் அதை அழித்துக்கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் உருவாக்கத் தேவையில்லை; அழிக்காமல் பாதுகாத்தாலே போதுமானது!
இந்தியாவில் 9 மாநிலங்களில், இதுவரை சுமார் 8 லட்சம் மரங்களை நட்டு, 46 காடுகளை உருவாக்கியுள்ளோம். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பந்திரிபனி, ஜுரிதா கிராமங்களில் 7 ஏக்கர் பரப்பில் 1 லட்சம் மரங்களை நட்டதும், அங்கு ஏரி ஒன்றை உருவாக்கியதும் இது வரையிலான எங்களுடைய செயல்பாட்டில் மிகப் பெரியது. பறவை இனங்களில் 80, ஊர்வன இனங்களில் 3, தேனீக்கள் ஆகியவை இங்கு வரத் தொடங்கிவிட்டன.
மகாராஷ்டிரத்தின் தாராபூர் தொழிற்பேட்டையில், 4 ஏக்கர் பரப்பிலான ரசாயனக் கிடங்கை அடர்ந்த காடாக மாற்றியுள்ளோம். இதற்காக அம்மாநில அரசின் வசுந்தரா விருது கிடைத்தது. அப்பகுதி மக்கள் இதற்குமுன் அங்கு பார்த்திராத சுமார் 100 பறவை இனங்கள் வந்துள்ளன. நடப்பட்டுள்ள 30, 40 வகை மரங்களுடன், மருத்துவத் தாவரங்களும் மரங்களும் இயற்கையாகவே துளிர்த்துள்ளன.
வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?
மரங்கள் நட அழைப்பு விடுக்கும் தொழிற்பேட்டை நிர்வாகிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைப்பார்கள். பழம் தரும் மரங்கள், ஆலமரம் ஆகியவற்றை நட வேண்டாம் என்பதே அது. இலைகளும், பழங்களும், வேர்களும் கட்டிடங்களை பாதிக்கின்றன என்பதே அவர்களுடைய கவலை.
இன்றைக்கு நடப்படும் மரம், 15 ஆண்டுகள் கழித்து எவ்வளவு பலன் தரும் என்று, மரம் வளர்ப்பையே காசாகப் பார்க்கும் மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம். நகர்ப்புறங்களில் உள்ள பசுமைப் போர்வையை அழித்துக் கட்டிடங்களாக்கி, மீண்டும் செயற்கையாக மரங்களை அதே இடத்தில் நடுகிறார்கள். அதில் பறவைகள் கூடுகட்டாது, ஆக்ஸிஜன் இயல்பாக உருவாகாது, கரியமில வாயு உறிஞ்சப்படாது, சூழலியல் சமநிலைக்கு உதவாது, உயிர்ப் பன்மை உருவாகாது.
இந்தியப் பெருநகரங்களில் பசுமைப் போர்வை சுருங்கி வருகிறது; வளர்ச்சி என்ற பெயரில் கார் நிறுத்துமிடம் போன்றவற்றுக்காகக்கூட மரங்கள் பெருமளவில் வெட்டப்படுகின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நகரமயமாக்கல் ஒரு முக்கியப் பிரச்சினை. வளர்ச்சி வேண்டும்தான்; அதைத் தடுக்க முடியாது. ஆனால், வளர்ச்சி என்பது காடுகளை அழித்து ஏற்படுத்தப்படக் கூடாது. சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர் தாழ்ந்துபோவதற்கு மரங்கள் இல்லாததும், நிலத்தின் வெப்பம் அதிகரிப்பதும் காரணங்கள். சிமெண்ட் கட்டுமானங்கள் ஒரு துளி மழைநீரைக்கூட மண்ணுக்குள் அனுப்புவதில்லை.
கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் உள்ளே செலுத்தவும் முடியும், ஆழ்துளைக் கிணறுகளில் முடியாது. சூழலியலைப் பொருளாதாரம் கெடுத்துவிட்டது.
இந்தப் பிரச்சினைகளை அரசு எப்படிக் கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இயற்கையை அழிப்பதற்கு ஏன் இத்தனை தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. கட்டுமானத் திட்டங்களுக்காக மரங்கள் இல்லாத, சூழலியலுக்குப் பாதிப்பு ஏற்படாத இடங்களைத் தேர்வுசெய்ய முடியும். பாதிப்பு ஏற்படும் என்றால், அதற்கான மாற்று இடத்தைத் தேட வேண்டும். நீர்நிலைகள், சூழலியல் ஆகியவற்றை பாதிக்காத வகையில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஆய்வுசெய்த பிறகே ஒரு திட்டத்தை ஓரிடத்தில் தொடங்கலாமா என்பதை அரசு முடிவுசெய்ய வேண்டும்.
‘நம்பிக்கை விளக்கு’ விருது திண்டுக்கல் அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை ஆண்டுதோறும் நடத்திவரும் ‘சூழலியல் நலவாழ்வு’ கருத்தரங்கம் இந்த ஆண்டு பிப்ரவரி 7,8 தேதிகளில் நடைபெற்றது. பெரியார் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், அதிகரித்துவரும் சூழலியல் பிரச்சினைகள் குறித்து உளவியல்-சமூக நோக்கில் விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெற்றன. கருத்தரங்கின் முக்கிய நிகழ்வாக ‘இந்தியாவின் காடு மனிதர்’ ஜாதவ் பயேங், ‘மியாவாகி முறை’யில் காடுகளை வளர்க்கும் ராதாகிருஷ்ணன், ஐ.நா.-வின் இளம் பருவநிலைத் தூதுவர் ஜனனி சிவகுமார், மண்புழு அறிவியலாளர் சுல்தான் இஸ்மாயில், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் ஆகியோருக்கு ‘நம்பிக்கை விளக்கு’ விருது வழங்கப்பட்டது. |
‘மியாவாகி முறை’ என்றால் என்ன? ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளரான அகிரா மியாவாகி (Akira Miyawaki) விதைகள், இயற்கைக் காடுகள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். தரிசு நிலங்களில் தாவரங்களை வளர்க்க இவர் கண்டறிந்த முறை இவருடைய பெயரால், ‘மியாவாகி முறை’ என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது; செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்தி, வழக்கமான வளர்ச்சி அளவைவிட 10 சதவீதம் அதிக வேகத்தில் அடந்த காடுகளை உருவாக்க முடியும். இந்த முறையில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும் தாவரங்களுக்கு நீர் பாய்ச்சினால் போதுமானது. 99 சதவீதம் பிழைத்துக்கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கிறது இந்தக் காடு. |
கட்டுரையாளர் தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT