Published : 15 Feb 2020 11:13 AM
Last Updated : 15 Feb 2020 11:13 AM

பறவைகள்: நம்பிக்கைகளும் உண்மையும்

ப. ஜெகநாதன்

வெளிநாட்டுப் பறவைகள் நம் பகுதிகளில் கூடமைக்குமா?

புவிப்பந்தின் வடக்கு அரைக்கோளத்தில் கடும் குளிர் நிலவும் காலத்தில் அங்குள்ள பறவையினங்களில் பல தென் பகுதியான இந்தியா, இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் வலசை வருகின்றன. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இவை வடக்கு அரைக்கோளத்துக்கே திரும்பிச் சென்றுவிடுவதால், அந்தப் பறவைகள் இங்கே கூடமைத்து இனப்பெருக்கம் செய்வதில்லை.

இங்கே கூடமைத்து இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் உள்ளூர்ப் பறவைகள் (Resident Birds) என்றும், வெகு தொலைவில் இருந்து உணவுக்காக இங்கே வருபவை வலசை அல்லது விருந்தாளிப் பறவைகள் (Migrant birds) என்றும் அழைக்கப்படுகின்றன

பறவைகளைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து வளர்ப்பவர்களைப் பறவை ஆர்வலர்கள் எனலாமா?

எந்த விதத்திலும் பறவைகளைத் துன்புறுத்தாமல், அவற்றின் வாழிடங்களைச் சீர்குலைக்காமல் இயற்கையான சூழலில் பார்த்து மகிழ்வோரே பறவை ஆர்வலர். செல்லப்பிராணிகளாகப் பறவைகளை—குறிப்பாக வெளிநாட்டுப் பறவைகள்—வாங்கி வீட்டில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தப் பறவைகள், அதிலும் குறிப்பாகக் கிளிகள்—பெரும்பாலும் கள்ளத்தனமாகப் பிடித்து வரப்பட்டு நம் பகுதிகளில் விற்கப்படுகின்றன.

அவற்றை ஒருவர் வாங்கும்போது அந்தப் பறவைகளின் கள்ளவேட்டைக்கு மறைமுகமாகத் துணைபோகிறார் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். இப்படிச் செல்லப்பிராணி வர்த்தகத்தால் உலகில் பல வகைப் பறவைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கூண்டில் அடைத்து வளர்க்கப்படும், கள்ளத்தனமாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வெளியேற்றி வானில் பறக்க விடலாமா?

பொதுவாக இது போன்ற பறவைகளின் சிறகுகள் வெட்டப்பட்டிருக்கும். பறக்க இயலாத இந்தப் பறவைகளை வெளியே விட்டால், அவற்றால் வெகுநாட்கள் உயிருடன் இருக்க முடியாது. பூனை, நாய் முதலியன அவற்றைக் கொன்றுவிடக் கூடும். அவை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட செல்லப்பிராணிகளாக இருந்தால், அவற்றை நம் ஊரில் பறக்கவிடக் கூடாது.

ஒருவேளை அது உள்ளூர்ப் பறவையாக இருந்தால், பறவைகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் உள்ள கால்நடை அல்லது காட்டுயிர் மருத்துவரிடம் காண்பித்துப் பரிசோதிக்க வேண்டும். அனுமதி பெற்ற காட்டுயிர்க் காப்பாளர்களிடம் ஒப்படைத்து, காப்பிடத்தில் வைத்து, ஓரளவுக்கு அவை பறக்கும் நிலையை அடைந்த பின்னர் அவை எங்கே பிடிக்கப்பட்டதோ அங்கேயே கொண்டுபோய் விட வேண்டும்.

பறவைகளுக்கு இரை இடலாமா?

மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்திரமாகச் சுற்றித் திரியும் எந்த ஒரு உயிரினத்துக்கும் உணவளிப்பது முறையல்ல. சேவை மனப்பான்மையுடன், நல்லது செய்கிறோம் என்று நினைத்து உணவிடுவது அவற்றுக்குப் பெரும்பாலும் பாதகமாகவே முடியும். நாளடைவில் அந்த உயிரினங்களையே நாம் ‘தொந்தரவு செய்யும் உயிரினங்களாகக்’ கருதவும் சாத்தியம் உண்டு. பாலூட்டிகளுக்கு உணவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பறவைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், அது பறவையின் வகையையும், எந்த மாதிரியான இரையை அவற்றுக்குக் கொடுக்கிறோம், எதற்காகக் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் பொறுத்தது. காகத்துக்கு இரை இடுவதைப் போல் எப்போதாவது இரை இடுவதால் பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்றாலும், தொடர்ந்து இரை கொடுப்பது அவற்றின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இரை இடுவதால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதைப் பற்றிய திட்டவட்டமான புரிதல் நம்மிடையே இல்லை. ஆகவே, இரை இடாமலேயே தவிர்த்துவிடுவது நல்லது.

சாதகப் பறவை என்பது எது? அது மழைநீரை மட்டுமே குடிக்குமா?

சுடலைக்குயில் (Pied Cuckoo) தான் சாதகப் பறவை (வடமொழியில் சாதகா). புராண, இதிகாசங்களில் இந்தப் பறவை மழைநீரை மட்டுமே அருந்தும், மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் என மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தப் பறவை வந்தால் மழைவரும் என்ற நம்பிக்கை வட இந்தியப் பகுதிகளில் இன்றும் உள்ளது. அண்மையில் தொடக்கக் கட்ட அறிவியல் ஆய்வு முடிவுகளால் இந்தப் பறவையின் பரவல், அவற்றின் வலசை போகும் பண்பு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சுடலைக்குயிலில் மூன்று உள்ளினங்கள் (Sub species) உள்ளன. முதலிரண்டு ஆப்பிரிக்காவில் உள்ளவை. மூன்றாவது ஆண்டு முழுக்கத் தென்னிந்தியாவில் வசிப்பவை. இவை தவிட்டுக்குருவி முதலான பறவைகளின் கூட்டில் முட்டையிடும். மத்திய, வட இந்தியாவுக்கு மே மாத இறுதியில் மழைக்காலத்தின் தொடக்கத்தில் வரும் சுடலைக்குயில்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வலசை வருபவை. சுடலைக்குயில்கள் புழு, பூச்சி, பழங்கள் முதலியவற்றை இரையாகக் கொள்ளும். அவை மழைநீரை அருந்துவது குறித்து எந்த அறிவியல் பதிவும் இல்லை.

ஊர்ப்புற, வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு: பிப்ரவரி 14 - 17

வீடு முதல் தினசரி நாம் சென்றுவரும் இடங்கள் வரை ஏதேனும் சில பறவைகளைத் தற்செயலாகப் பார்த்திருப்போம். அப்படி நம் சுற்றுப்புறங்களில் பார்க்கும் பொதுப்பறவைகளைக் கணக்கிடுவதே ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு [Great Backyard Bird Count (GBBC)] . இது உலகம் முழுவதும் ஒரே வேளையில் நடைபெறும் மாபெரும் திருவிழா.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பை ஒரு வளாகத்துக்குள் இருந்து மேற்கொள்வது வளாகப் பறவைகள் கணக்கெடுப்பு (Campus Bird Count). பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்கள் வளாகத்துக்கு வந்துசெல்லும் பறவைகளைக் கணக்கெடுக்க இது ஒரு வாய்ப்பு. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தின் சூழல் தன்மையை அறியலாம்.

மேலும் அறிய: http://bit.ly/38mUnUH

கட்டுரையாளர், எழுத்தாளர்-காட்டுயிர் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x