Published : 15 Feb 2020 11:00 AM
Last Updated : 15 Feb 2020 11:00 AM
அருண்
காலநிலை நெருக்கடியின் தீவிரம் இந்த ஆண்டுத் தொடக்கம் முதலே பல்வேறு வழிகளில் வெளிப்படத் தொடங்கிவிட்டது. அமேசான், இந்தோனேசியா, ஆர்க்டிக் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ, காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் சூழலியல்-பொருளாதாரப் பின்விளைவுகள் குறித்த பாதுகாப்பை தீவிரப்படுத்தியது. இந்தப் பெரும் காட்டுத்தீயால் மரபார்ந்த காடுகள், உயிரினங்கள் அழிவது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான டன் அளவுக்கு வெளியேறும் பசுங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்தில் சேர்கின்றன.
இதன் பின்னணியில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் படங்கள், வெளியேறிய கரியமில வாயுவின் அளவு ஆகிய தரவுகள் சமீபத்தில் வெளியாகி நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
காட்டுத்தீயால் ஏற்பட்ட கரியமில வாயு வெளியேற்றம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்திருந்தாலும், 2019-ல் அது உயர்ந்திருக்கிறது. காட்டுத்தீயில் கரியமில வாயு வெளியேற்றத்தின் கடந்த ஆண்டு ஒட்டுமொத்த அளவு, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு, 26 சதவீதம் அதிகரித்து 780 கோடி மெட்ரிக் டன் என்ற அளவில் கட்டுமீறி அதிகரித்திருக்கிறது.
தென்னமெரிக்க கண்டத்தின் பிரேசில், பொலிவியா, பெரு உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ள அமேசான் மழைக்காடுகளில், குறிப்பிட்ட காலத்தில் காட்டுத்தீ உருவாவது வழக்கம்தான். என்றாலும் வேளாண்மை, கால்நடை மேய்த்தல் ஆகியவற்றுக்காகக் காட்டுத்தீ மூட்டிவிடப்படுவது சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது.
2018-ஐவிடக் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் அமேசானில் ஏற்பட்டிருக்கும் நிலையில், அமேசான் காடுகளின் ஐந்தில் ஒரு பகுதி, கரியமில வாயுவை உறிஞ்சும் அளவைவிட அதிகமாக அதை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சார்ந்து கவனிக்க வேண்டியது, அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையோ அவை வெளியேற்றிய கரியமில வாயுவின் அளவோ அல்ல; அவை எங்கு நிகழ்ந்தன, எத்தனை தீவிரத்துடன் எரிந்தன என்பதுதான். முன்னெப்போதும் இல்லாத வகையில் சைபீரியா, அலாஸ்கா ஆகியவற்றின் சில பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயின் அளவு அறிவியலாளர்களைத் திகைக்கவைத்திருக்கிறது.
ஒப்பீட்டளவில் காட்டுத்தீயால் உருவாகும் கரியமில வாயு வெளியேற்றத்தைவிட, போக்குவரத்து, தொழிற்சாலை என மனிதச் செயல்பாடுகள் உருவாக்கும் கரியமில வாயு வெளியேற்றம் நாள்தோறும் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு பிப்ரவரி 10 அன்று 416.08 பி.பி.எம். (ppm-கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) ஆகப் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஹவாயீ தீவின் மோனாலோவா ஆய்வக-கண்காணிப்பகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அளவு 2019 பிப்ரவரி 10 அன்று 411.97 பி.பி.எம். ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீ மேலும் அதிகரிப்பதற்கு புவி வெப்பமாதல் வழிவகுக்கும் என்று அறிவியலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்; கடந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகளின் உயர்வு, ஒற்றை விளைவா அல்லது புது நிகழ்வு ஒன்றின் தொடக்கமா என்பதே இப்போதைய கேள்வி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT