Published : 08 Feb 2020 10:34 AM
Last Updated : 08 Feb 2020 10:34 AM

விதை முதல் விளைச்சல் வரை 18: ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு வழிமுறைகள்

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

பூச்சி இனங்கள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. கற்கால மனிதன் சாகுபடி செய்த நாளிலிருந்தே பூச்சி இனத்துக்கும் மனிதனுக்குமிடையே போராட்டம் தொடங்கிவிட்டது.

இது தவிர சேமித்து வைக்கும் தானியங்களுக்கும் கால்நடைகளுக்கும் பூச்சிகள் தொல்லை தர ஆரம்பித்தன. காடுகளை அழித்து அதிகளவில் பயிர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டபோது இப்பூச்சியினங்களும் பெரும் அளவில் பரவத் தொடங்கின.

இந்தப் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்த மனித இனம் பூச்சிகளைக் கையாலும் குச்சிகளாலும் அடித்து அழித்தது. விளக்கு வைத்துப் பிடித்தும் பூச்சிகளுக்கு எதிரான பயிர் ரகங்களைக் கண்டுபிடித்தும் அவற்றைக் கட்டுடப்படுத்தத் தொடங்கியது. எனினும் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சியினங்களை முற்றிலும் அழிக்க இயலவில்லை.

இந்த நேரத்தில்தான் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தைக் கண்டுபிடித்து அதைப் பயிர்களில் தெளித்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த நினைத்தது. இந்தத் திடீர்த் தாக்குதலுக்கு ஆரம்பித்தில் தடுமாறிப்போன பூச்சிகள், கொஞ்ச காலத்தில் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொண்டன.

கொசுவுக்கு எதிராகக் கண்டறியப்பட்ட முதல் பூச்சிக்கொல்லி மருந்தான டி.டி.டி. முதல் இது நாள்வரை கண்டறியப்பட்ட எந்தப் பூச்சிக்கொல்லியாலும் கொசுவை அழிக்க முடியவில்லை. பூச்சிகளில் பயிரைத் தாக்கி முழுமையாக அழிக்கும் சைவப்பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் என்றும் தீமை செய்யும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் அசைவப் பூச்சிகள் நன்மை செய்யும் பூச்சிகள் என்றும் மண்ணை மக்க வைக்கும் பூச்சிகள் நடுநிலைப்பூச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி, தாக்கும் முறை, தாக்குதல் அறிகுறிகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி ஆகிய நான்கு நிலைகளைக் கொண்ட முழு உருமாற்ற வகையில் வண்ணத்துப் பூச்சி, வண்டு, ஈ, குளவி, தேனீ ஆகியவையும் அடங்கும்.

குறை உருமாற்ற வகையில் முட்டை, சின்ன பூச்சி, முழு வளர்ச்சியடைந்த தாய்ப் பூச்சி என்ற மூன்று நிலைகளைக் கொண்ட வெட்டுக்கிளி, கரையான், நாவாய்பூச்சி ஆகியவை அடங்கும். சாகுபடி செய்யப்படும் பயிர்களில் ஏதாவது ஒரு பருவத்தில் அதிக எண்ணிக்கையில் உருவாகி மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகள், எபிடெமிக் வகைப் பூச்சிகள் எனப்படும் (எ.கா நெல் - புகையான், நிலக்கடலை - சிவப்பு கம்பளிப்புழு).

ஒரு பயிரில் அனைத்துப் பருவங்களிலும் குறைந்த அளவு சேதத்தை விளைவிக்கும் பூச்சிகள் எண்டெமிக் வகைப் பூச்சிகள் எனப்படும் (எ.கா நெல் இலை சுருட்டுப்புழு, நிலக்கடலை சுருள் பூச்சி). பூச்சிகள், செடிகளின் பல்வேறு பாகங்களைத் தாக்கி ஏற்படுத்தும் சேத அறிகுறிகளைக் கொண்டு கீழ்க்காணும் படி வகை பிரிக்கலாம்.

# சாறு உறிஞ்சும் பூச்சிகள்

ஊசி போன்ற வாய் பகுதியுடன் இருக்கும். பெரும்பாலும் இவை நுனிக்குருத்துப் பகுதிகளில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் தாவரம் பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறுகின்றன. (எ.கா – அசுவினி, மாவுப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள்)

# கடித்து மென்று உண்ணும் பூச்சிகள்

இவ்வகைப் பூச்சிகள் இலை, பூ, காய், பழம், வேர், தண்டு ஆகியவற்றின் பச்சையத்தைச் சுரண்டியும் துளைகள் ஏற்படுத்தியும் கடித்தும் மென்றும் சேதம் விளைவிக்கின்றன. (எகா- இலை சுருட்டுப்புழு, வெட்டுக்கிளி, தண்டுப்புழு, வேர் புழு)

கொப்புளங்கள், கழலைகளை உண்டு பண்ணும் பூச்சிகள் இவ்வகைப் பூச்சிகள் செடிகளின் வெவ்வேறு பாகங்களைத் தாக்கும்போது கொப்புளங்கள் உருவாகின்றன. (எ.கா நெல் ஆனைக்கொம்பின் ஈ, மாமரம் - புங்கை மரத்தில் தேயிலைக் கொசு)

# சேமிப்புக் கிடங்கு பூச்சிகள்

சேமிப்புத் தானியங்களைக் குடைந்து மாவுப்பொருளை உண்டு சேதப்படுத்துகின்றன. (எகா.நெல்- அந்துப்பூச்சி, பயறு-வண்டுகள்)

# மறைமுகத் தீங்கு விளைவித்தல்

சாறு உறிஞ்சும் பூச்சிகள் நோய் தாக்கிய செடிகளிலிருந்து வைரஸ் எனப்படும் நச்சு உயிரிகளை வேறு செடிகளுக்குப் பரப்புதல் (எகா.வெள்ளை ஈ, அசுவினி)

# பூச்சிகள் அதிக அளவில் பரவக் காரணங்கள்

1) காடுகளை அழித்து பயிர் சாகுபடிக்குக் கொண்டு வருதல்.

2) பூச்சிகளின் இயற்கை எதிரிகளை அழித்தல்.

3) தீவிர சாகுபடி முறையைக் கடைபிடித்தல்.

4) புதிய பயிர்களை ஓரிடத்தில் சாகுபடி செய்தல்.

5) அயல் நாடுகளிலிருந்து புதிதாகப் பூச்சிகள் பரவுதல்.

6) பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறன் வாய்ந்த பூச்சிகள் தோன்றுதல்.

கட்டுரையாளர்கள்
தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com,
selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x