Published : 01 Feb 2020 12:53 PM
Last Updated : 01 Feb 2020 12:53 PM

ஊராட்சித் தலைவர்களான சூழலியல் செயற்பாட்டாளர்கள்

ச.கோபாலகிருஷ்ணன்

அரசியல் என்றாலே ஊழலும் லஞ்சமும் அதிகார அடாவடிகளும்தான் என்று நினைத்து அரசியலை வெறுப்பவர்கள் பலர். அதேநேரம், யதார்த்தப் பிரச்சினைகளையெல்லாம் கடந்து உழைப்பும் பொதுநல உணர்வும் இருந்தால் மக்களுக்கு நன்மை செய்ய அரசியல் அதிகாரமும் சிறந்த கருவிதான் என்பதை உணர்ந்தவர்களும் தேர்தல்களில் அவ்வப்போது போட்டியிடுகிறார்கள்.

அவர்களில் வெற்றிபெற்ற சிலர் தாங்கள் வாழும் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சாதித்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல்களில் இப்படி சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றவர்களால் நிகழ்ந்த நன்மைகளின் விகிதம் அதிகம்.

தமிழகத்தில் மூன்றாண்டுகளாகக் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளில் கிராமப்புற அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இவற்றில் கணிசமான அளவில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களும் முதல்முறையாகத் தேர்தல் அரசியலில் கால்பதித்தவர்களும் ஊராட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகள் சமூக செயற்பாட்டாளராகச் செயல்பட்டு, தற்போது தேர்தல் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் சிலர், தங்கள் பொது வாழ்க்கை பயணத்தையும் வருங்காலத் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்:

நீர்நிலை பாதுகாப்பில் தொடங்கி...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செரியலூர் இனாம் ஊராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் முகமது ஜியாவுதீன் (48). வேளாண்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், சவுதி அரேபியாவில் பணியாற்றியவர். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அவர் வந்திருந்தபோதுதான் கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடியது. குடும்பத்துக்கு சொந்தமான மா, பலா, தென்னந் தோப்புகளை இழந்தாலும் துவண்டுவிடாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

“அரசியல் கட்சிகள், சேவை நிறுவனங்கள் அளிக்கும் நிவாரண உதவிகள் மக்களைச் சென்றடைய வைக்கும் பணிகளில் ஈடுபட்டேன். பாதிக்கப்பட்ட மக்கள் அரசு வழங்கும் நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கான ஆவண சரிபார்ப்பு, படிவங்கள் நிரப்புவது உள்ளிட்ட பணிகளில் உதவினேன். அதன் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிட முடிவுசெய்தேன். செரியலூர் ஊராட்சி இளைஞர்கள் வளர்ச்சிக் குழு என்ற குழுவை அமைத்து உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்து நலப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம்” என்கிறார்.

அந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தூர்வாரப்படாமல் இருந்த குளத்தைத் தூர்வாரும் பணியை இந்தக் குழு கையிலெடுத்துள்ளது. இதற்கு நிதி திரட்டும் பணிகள் நடந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் வந்தது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் போட்டியிட முடிவுசெய்தனர். ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் முகமது ஜியாவுதீன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

“என்னுடன் போட்டியிட்ட அனைவரும் பணத்தை வாரி இறைத்தார்கள். நான் ஒரு பைசா செலவழிக்கவில்லை. இருந்தாலும் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். எங்கள் ஒன்றியத்தில் 44 வாக்காளர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள்.

மாற்று மத சகோதரர்களும் எனக்கு வாக்களித்ததாலேயே நான் வெல்ல முடிந்தது:” என்று கூறும் ஜியாவுதீன், கிராமத்தில் உள்ள சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவது, வட்டியில்லா கடன் திட்டங்களைச் செயல்படுத்தி அநியாய வட்டி வாங்குபவர்களிடமிருந்து ஏழைகளைக் காப்பாற்றுவது, கஜா புயலால் வேலைவாய்ப்பை இழந்துள்ள உழவுக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதாகக் கூறுகிறார்.

பசுமைப் பணிகளுக்குத் தனி கவனம்

‘பசுமை தேசம்’ என்ற அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் பசுமைப் பணிகளில் ஈடுபட்டுவந்த சதீஸ்குமார் (34), தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் வாரப்பூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராகியிருக்கிறார். “பசுமை தேசம் அமைப்பின் மூலம் 2000 ஏக்கர் தரிசு நிலங்கள் பசுமை நிலமாக மாற்றப்பட்டிருக்கின்றன. கஜா புயலின்போது வாரப்பூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட 16 கிராமங்களைத் தத்தெடுத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன் நிவாரணங்களையும் மறுவாழ்வுப் பணிகளையும் ஒருங்கிணைத்தோம்.

நெருஞ்சிப்பட்டி பகுதியில் ஒண்ணேகால் லட்சம் ரூபாய் செலவில் குளத்தை தூர்வாரி குடிநீர் ஊருணி உருவாக்கியுள்ளோம். இந்த ஊருணியில் ஒரு கோடி லிட்டர் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். கஜா புயலில் மரங்களை இழந்த 500 குடும்பங்களுக்கு இலவச மரக்கன்றுகளைக் கொடுத்துள்ளோம்” என்று பசுமை தேசத்தின் பணிகளைப் பட்டியலிடுகிறார்.

“பதவி இருந்தால் நலப் பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று முடிவெடுத்து தேர்தலில் போட்டியிட முடிவுசெய்தோம். மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் குடிநீர் கிடைப்பதையும் அனைத்து சாலைகளிலும் இரவு நேரம் தெருவிளக்குகள் எரிவதையும் உறுதிசெய்வதே எங்கள் தலையாய பணி” என்று சொல்லும் சதீஸ் குமார் கல்வி வசதிகளையும் மேம்படுத்த விரும்புகிறார்.

பதவிக்கு உந்தித் தள்ளிய தடைக்கற்கள்

அரசுப் பதவி இல்லாமல் மக்கள் பணியில் ஈடுபடத் தடைகளைச் சந்தித்தாலேயே தேர்தலில் போட்டியிட்டு சிவகங்கை மாவட்டத்தில் திருக்களாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார் சத்தியகலா (30) . ”எனது மாமனார் சிங்கப்பூரில் பணியாற்றினார். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்த நாங்கள் கிராம மக்களுக்கு நலப் பணிகளைச் செய்தோம். அதற்கு் அரசு அதிகாரிகள் சிலர் முட்டுக்கட்டை போட முயன்றனர். இதனால் பதவிக்கு வரத் தீர்மானித்தோம்.

ஆழ்துளைக் கிணறு அமைப்பது, தெருவிளக்கு போடுவது ஆகிய பல பணிகளை அரசு அதிகாரிகள் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி தடுக்க முயன்றனர். பதவிக்கு வந்தபின் கிணறு அமைக்க விரும்பிய இடத்தில் அமைக்க முடிந்திருக்கிறது. கிராம சபைக் கூட்டத்தில் விவாதித்து அவர்களின் அனுமதியைப் பெற்ற பிறகே இதைச் செய்திருக்கிறோம்” என்கிறார் சத்தியகலா.

சமூகப் பணியிலிருந்து நிர்வாகிப் பணிக்கு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள என்.கீழையூர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக்கம் (65), நாற்பது ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றியவர். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்தபோது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுநலப் பணிகளை மேற்கொண்டவர். அப்போதே ஊராட்சித் தலைவராகும் வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

இப்போது குடும்பத்துக்கு உழைத்தது போதும் என்றும் தனது கிராமத்துக்காக உழைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். “சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் ஆகியும் இந்த ஊராட்சியில் சில கிராமங்களில் சாலைகள், பேருந்து வசதிகள் இல்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். அரசு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலங்கள் மக்கள் அனைவருக்கும் பயன்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்கிறார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆற்று நீர்

விஸ்காம் படித்துவிட்டு விளம்பர முகமை நிறுவனம் நடத்திவந்த பிரபஞ்சன் (33), தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் திருக்களூர் ஊராட்சி மன்றத் தலைவர். அரசியல் ஆர்வம் மிக்கவரான பிரபஞ்சன் சொந்த ஊருக்கு வரும்போது கிராமப் பஞ்சாயத்து கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். தேர்தல் நடத்தப்படாமல் பதவிகள் காலியாக இருந்ததால், கூட்டங்களில் எட்டு பத்துப் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்தக்

கூட்டங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதாலும், தான் பிறந்த கிராமம் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பதாலும் தேர்தலில் போட்டியிட இவர் முடிவெடுத்திருக்கிறார்.

இவருடைய தாத்தாவான தனசேகரபாண்டியன் அதே பகுதியில் ஊராட்சித் தலைவராக இருந்தவர். தேர்தல் பிரச்சாரத்தில் மக்களைச் சந்தித்தபோது தனது தாத்தா செய்த நலப் பணிகளை ஊர்மக்களிடமிருந்து தெரிந்துகொண்டதாகச் சொல்கிறார் பிரபஞ்சன். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இளைஞர்கள் அனைவரும் இவருக்காக தன்னிச்சையாகப் பிரச்சாரம் செய்தனர். தாத்தாவின் நற்பெயரும் இளைஞர்களின் துணையும் இவர் வெற்றிபெற உதவியிருக்கின்றன.

”அரசு திட்டங்களும் உதவிகளும் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானவையாக இருக்கும். உதாரணமாக பசுமை வீடுகளை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே ஒதுக்குவார்கள். அவற்றைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்று தெரிந்துகொண்டு அந்தப் பட்டியலை உரிய அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டால், வீடு தேவைப்படுபவர்களுக்கு தாமதமில்லாமல் கிடைக்கும்” என்று தன் களப்பணிக்கான காரணத்தைச் சொல்கிறார். அனைத்து வீடுகளுக்கும் குடிப்பதற்கான ஆற்று நீர் கிடைக்கச் செய்யும் பணிகளைப் பிரபஞ்சன் தொடங்கியிருக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x