Published : 25 Jan 2020 11:47 AM
Last Updated : 25 Jan 2020 11:47 AM

எதைச் சாப்பிடப் போகிறோம்: உணவா, ஹைட்ரோகார்பனா?

சு. அருண் பிரசாத்

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை என்ற திருத்தப்பட்ட அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இதுபோன்ற கிணறுகள் அமைக்க மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என்றும் இந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழகத்தில் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்றுவந்த தொடர் போராட்டங்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது பின்வாங்கியிருந்த ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது குறித்து துறைசார் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?:

பேராசிரியர் எஸ். ஜனகராஜன்

நீரியல் நிபுணர்

ஹைட்ரோகார்பன் என்பது பெரும்பாலோர் நினைப்பதைப் போல் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மட்டுமல்ல; அது பல்வேறு பொருட்களின் கூட்டிணைவு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி) பத்து ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் கிணறுத் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் வேலை எண்ணெய் எங்கு கிடைக்கும் என்ற தேடுவது மட்டும்தான். அதற்கும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எண்ணெய், கச்சா எண்ணெய், நிலக்கரி படிவ மீத்தேன், நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவை இந்த ஹைட்ரோகார்பன் தேடுதலில் இடம்பெறும். அது மட்டுமல்லாமல், என்னவெல்லாம் கிடைக்கிறதோ அவை அனைத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் எடுத்துக்கொள்ளும் உரிமை இந்தத் திட்டத்தில் இருக்கிறது.

எண்ணெய்க் கிணறுகளால் நமக்குப் பிரச்சினை குறைவு. ஆனால், ஹைட்ரோகார்பன் என்று வரும்போது அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இத்திட்டத்தின் நடைமுறை மிகுந்த ஆபத்தைக் கொண்டது.

தகர்க்கப்படும் நிலம்

ஹைட்ரோகார்பன் திட்டங்களில் மூவாயிரம் முதல் ஐயாயிரம் மீட்டர் ஆழம்வரையிலான கிணறுகள் தோண்டப்படும். அவற்றின் இடையே உள்ள பாறைகள், கடினமான அமைப்புகள் ஆகியவற்றை fracking என்ற முறையில் வெடிவைத்துத் தகர்ப்பார்கள். இயற்கை எரிவாயு, நிலக்கரி படிவ வாயு, நிலக்கரி, எண்ணெய் ஆகியவற்றின் இருப்பு குறித்த தரவுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்; கிணறும் இடைவெளியில்லாமல் ஆழப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் ஃப்ராக்கிங் நடந்தாலும், அதைச் சுற்றிக் கிடைமட்டமாகவும் சில கிலோமீட்டர்வரையிலும் இது செல்லும்.

அத்துடன், இந்த நடைமுறையில் லட்சக்கணக்கான கேலன் அளவு தண்ணீரைக் கிணறுகளில் செலுத்துவார்கள்; இந்தத் தண்ணீருடன் 50-க்கும் அதிகமான வேதிப்பொருட்களும் சேர்த்து அனுப்பப்படும். உள்ளே ஏற்கெனவே இருக்கும் தண்ணீருடன் செலுத்தப்படும் நீரும் இணைந்து, எல்லா வகையிலும் நச்சுத்தன்மை மிகுந்த நீராக வெளியே வரும். அதை எங்கு வெளியேற்றப் போகிறார்கள் என்று தெரியாது; கடல், நிலம் என எங்கு அதைக் கொட்டினாலும் ஆபத்துதான். இதுதான் இந்த நடைமுறையின் பின்னணி.

எதைச் சாப்பிடப் போகிறோம்?

காவிரி பாசனப் பகுதியில் (டெல்டா) நடைபெறும் வேளாண்மையில் 30 சதவீதம் நிலத்தடி நீரைச் சார்ந்துதான் இருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் முழுக்க பாழாகி மாசடைந்துவிடும், நீரின் அளவும் வெகு ஆழத்துக்குச் சென்றுவிடும். ஏற்கெனவே சீர்கெட்டுள்ள சூழலியல் மாசு இன்னும் அதிகரிக்கும்.

முதலில் நிலக்கரி படிவ மீத்தேனை எடுத்துவிட்டு, பிறகு நிலக்கரியை எடுப்பது என்பது அவர்களின் தற்போதைய திட்ட மதிப்பீட்டிலிருந்து தெரியவருகிறது. இப்படிப் பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். திட்டம் செயல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் காவிரி பாசனப் பகுதியை மொத்தமாகக் கைவிடும் சூழல் ஏற்படும். நம்முடைய தேவை உணவுப் பாதுகாப்பா, ஹைட்ரோகார்பனா என்பதே இன்றைக்கு முக்கியமான கேள்வி.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் 70 சதவீதம்வரை காவிரி பாசனப் பகுதிதான் நிறைவுசெய்கிறது. இது ஏற்கெனவே பல காரணங்களால் குறைந்துவரும் நிலையில், இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது காவிரி பாசனப் பகுதி. இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இத்தனை லட்சம் மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா அல்லது ஹைட்ரோகார்பன் முக்கியமா?

சட்ட மீறல்

இந்தத் திட்டத்தால் பொருளாதாரரீதியிலும் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்றால், அதுவும் இல்லை. ஏனென்றால், வளைகுடா நாடுகளில் வாங்கப்படும் அதே விலைக்குதான் இங்கேயும் வாங்கப் போகிறார்கள். அரசின் நோக்கம் உழவர்களை, வேளாண்மையைப் பாதுகாப்பதா அல்லது ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களின் மூலம் சூழலியலைக் கொன்று பெருநிறுவனங்கள் கொழிக்க வழிசெய்வதா? இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் மிக மோசமான சூழலியல், சுற்றுச்சூழல், சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும். ஆகவேதான் மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

பத்து மாடி அடுக்ககம் கட்டுவதற்கே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - 1986 சட்டத்தின்படி மிக மோசமாக மாசுபடுத்தக்கூடிய (தீவிர சிவப்புத் தொழிற்சாலை) பிரிவில் வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு, பொதுமக்களின் கருத்துக் கேட்பு ஆகியவற்றைத் தவிர்த்திருப்பது சட்டத்தை மீறும் செயல்; இது மிகவும் ஆபத்தானது.

தமிழக அரசு என்ன சொல்கிறது?

இதைத் தடுப்பதற்கு, டெல்டா மாவட்டங்களைச் சூழலியல்-சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவிதமான திட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்; இதுதான் ஒரே வழி! அப்படி இல்லையென்றால், இன்றைக்கு இல்லையென்றாலும் நாளைக்கு இந்த நிறுவனங்கள் வேறு வழியில் வரும்.

சட்ட நடைமுறையின்படி இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி கேட்கும் நிறுவனம் ஒன்றின் விண்ணப்பத்தை, 30 நாட்களுக்குள் அரசு நிராகரித்து திருப்பி அனுப்ப முடியும்; அந்த நிறுவனத்தால் திட்டத்தைத் தொடங்க முடியாது. ஆனால், முப்பது நாட்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால், ஒப்புதல் கொடுத்ததாகவே பார்க்கப்படும். எனவே, அரசு இதை நிராகரிக்க வேண்டும். இன்னும் நிராகரிக்காமல் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சூழலியல், சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்குதான் முன்னுரிமை தரப்பட வேண்டும்; மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். உணவுப் பாதுகாப்புதானே முதல் தேவையாக இருக்க முடியும்.

நக்கீரன்

சூழலியல் எழுத்தாளர்

மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அரசு மக்களுக்கானது எனும் தன்மையை அரசியலமைப்புச் சட்டம் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசோ அடிப்படை உரிமைகளைக்கூட மதிப்பதாகத் தெரியவில்லை. என் வீட்டின் நடுவில் வந்து ஒருவர் குப்பையைக் கொட்டினால், அதைக் கேள்வி கேட்கும் உரிமைகூட எனக்குக் கிடையாது; அது குறித்து முன்கூட்டியே என்னிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் இன்றைய நிலை. கேள்வி எழுப்புவதற்குக்கூட எனக்கு உரிமை கிடையாது எனும்போது, அரசியலமைப்பைப் பின்பற்றும், ஜனநாயகத்தன்மை கொண்ட நாடா இது என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன; சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் தளர்த்தப்படுகின்றன. இப்போது அவை எதுவுமே இன்றி, நேரடியாக நிலத்தை எடுத்துக்கொள்வோம் என்ற நிலை வந்துவிட்டது. புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுக்க வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நாம் புதைபடிவ எரிபொருட்களை இன்னும் வெளிக்கொண்டு வரும்போது, காலநிலை மாற்றத்துக்கு எப்படிப்பட்ட தொந்தரவுகளை உருவாக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

நித்யானந்த் ஜெயராமன்

சூழலியல் செயற்பாட்டாளர்

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மேற்கொண்ட திருத்தம் குறித்து தங்களிடம் ஆலோசிக்கவில்லை என்றும் அதை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், மாநில அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஆகியவற்றின் உண்மையான தேவை சார்ந்து இந்தத் திருத்தம் குறித்து நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x