Published : 04 Jan 2020 01:30 PM
Last Updated : 04 Jan 2020 01:30 PM
அ. முன்னடியான்
நெல் சாகுபடியில் புதுமையான நீர் சேமிப்புக் குழாய் நீர்ப்பாசனம் பற்றிய பரிசோதனை ஆய்வில் பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் களிப்பு நிலப்பகுதியில் 25 சதவீதம் நீரும் மணல் பகுதியில் 15 சதவீதம் நீரும் சேமிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளனர். இதற்காகப் புதுச்சேரி கல்வித்துறை, புதுச்சேரி அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய மாநில அறிவியல் மாநாட்டில் முதல் இடமும் கிடைத்துள்ளது.
மத்திய நீர் ஆணையத்தின் கூற்றுப்படி இந்தியாவில் ஆண்டுக்குப் பயன்படுத்தப்படும் மொத்த நீரில் 85.03 சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது, அவற்றுள் 45 சதவீதம் நீர் நெல் சாகுபடிக்கு மட்டும் செலவிடப்படுகிறது. உலக அளவில் நெல் சாகுபடியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நெல் உற்பத்திக்காகப் பெரும் நீர் வளத்தைச் செலவிடுகிறது.
1 கிலோ நெல் உற்பத்திக்கு 15,000 லிட்டர் நீரை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள், ஆனால் 600 லிட்டர் நீரே போதுமானது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் கூறுகிறது. கடந்த கோடைக்காலத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு குழாயின் மூலம் நீர்ப் பாசனம் பெறும் நெல் வயல்கள், நிலத்தடி நீர் மட்டம் குறைந்த காரணத்தால் பாசனம் பெறமுடியாமல் கருகிப் போனதைப் பரவலாகப் பார்க்க முடிந்தது.
இது போன்ற காலங்களில் மட்டும் நீரின் தேவை பற்றிச் சிந்திக்காமல் அனைத்துக் காலங்களிலும் நிலத்தடி நீரை விரயம் செய்யாமல் தேவைக்கேற்ப நெல் வயல்களில் நீர்ப் பாசனம் செய்யும் புதுமையான நீர் சேமிப்புக் குழாயை (Innovative water saver piper) பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு குறித்துப் பள்ளி ஆசிரியரும் ஆய்வு வழிகாட்டியுமான குருநாதன் பகிர்ந்துகொண்டார்:
நீர்ப் பாசனத்தில், நீர் விரயத்தைக் குறைத்து மகசூல் பாதிப்பில்லாமல் நெல் சாகுபடி செய்வதற்காக இதைக் கண்டறிந்துள்ளனர். இந்தப் புதுமையான நீர் சேமிப்புக் குழாய் இரண்டடுக்குகளைக் கொண்டது. கீழ் அடுக்கின் பெயர் நீர் தேங்கும் குழாய் (வாட்டர் ஸ்டேக்னேட்டிங் பைப்). இது 10 செ.மீ விட்டம் கொண்ட பிவிசி பைப். இதன் உயரம் 40 செ.மீ. இந்தக் குழாயின் அடிப்பகுதி 20 செ.மீ துளையிடப்பட்டு மண்ணின் மேற்பரப்புக்குக் கீழ் பொருத்தப்பட்டு மண்ணின் கீழுள்ள நீர் தேங்குவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
துளையிடப்படாத 20 செமீ குழாய் மண்ணின் மேற்பரப்புக்கு மேலே இருக்கும். இவ்வாறு துளையிடப்பட்ட கீழ்ப் பகுதியில் தேங்கும் நீரானது நிலத்தின் கீழுள்ள நீர் மட்டத்தை அறிந்து நீர்ப் பாசனம் செய்யப் பயன்படுகிறது. மேல் அடுக்கு வாட்டர் லெவல் ஷோயிங் பைப் 7 செ.மீ விட்டம் கொண்ட பிவிசி பைப் இதன் உயரம் 100 செ.மீ. இந்த மேல் அடுக்கு நீர் தேங்கும் குழாயின் மேல்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த வாட்டர் லெவல் ஷோயிங் பைப்பின் உட்புறத்தில் புலோட்டரால் (மிதவை) கூடிய நீரின் அளவைக் காண்பிக்கக்கூடிய அலுமினிய கம்பியும் பொருத்தப்பட்டிருக்கும். இதனுள்ளே உள்ள புலோட்டரின் உதவியுடன் நிலத்தில் நீர் உலரும்போது நிலத்துக்குக்கீழுள்ள நீரின் அளவைக் கண்காணித்து அவற்றுக்கு ஏற்றாற்போல் நீர்ப் பாசனம் செய்ய வழி வகுக்கிறது.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி நெல் நாற்று நடவு செய்த 15 நாட்களும் பூக்கும் காலத்தில் 5 நாட்களும் மண்ணின் மேற்பரப்புக்கு மேல் 5 செ.மீட்டர் நீர் பாய்ச்சுதல் வேண்டும். நெற்பயிர் வளர்பருவத்தில் நீர்ப் பாய்ச்சலும் காய்ச்சலுமாக இருக்க வேண்டும். நெற்பயிர் வளர் கால மாதத்தில் மறு நீர்ப்பாசனத்துக்கு முன் நீர் மட்டம் மண்ணின் மேற்பரப்பிலிருந்து 10 செ.மீட்டர் வரை செல்ல அனுமதிக்கலாம். இந்த முடிவு தாவரத்தின் வேர் நிலத்தை மையமாகக் கொண்டு எங்களால் எடுக்கப்பட்டது.
இதற்காக நான்கு விதமான ஆய்வு மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதாவது 5-க்கு 5 அடி கொண்ட (25 சதுர அடி) 16 நிலப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள பனித்திட்டைச் சேர்ந்த சரவணன் என்பரின் நிலைத்தைப் பயன்படுத்தினோம். அதன்படி 5-க்கு 5 அடி கொண்ட 16 பகுதிகளை ஆய்வுக்காக நான்காகப் பிரித்து நான்கு ஆய்வு மாதிரிகளை உருவாக்கினோம். அந்த நான்கு மாதிரிகளுக்கும் P1,P2,P3,P4 எனப் பெயரிட்டோம்.
முதலாம் ஆய்வு மாதிரியான P1 5க்கு 5 அடி கொண்ட நான்கு பகுதிகள், களிப்பு நிலத்தில், சின்ன பொன்னி ரக நெல் உற்பத்தியைப் பாரம்பரிய நீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்வது, இரண்டாம் ஆய்வு மாதிரியான P2 களிப்பு நிலத்தில், சின்ன பொன்னி ரக நெல் உற்பத்தியைப் புதுமையான நீர் சேமிப்பு குழாய் நீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்வது, மூன்றாம் ஆய்வு மாதிரியான P3 நான்கு பகுதிகள் கொண்ட மணல் நிலத்தில், சின்ன பொன்னி ரக நெல் உற்பத்தியைப் புதுமையான நீர் சேமிப்புக் குழாய் நீர்ப் பாசன சாகுபடி செய்வது, நான்காம் ஆய்வு மாதிரியான P4 5-க்கு 5 அடி அளவு கொண்ட நான்கு பகுதிகள், களிப்பு நிலத்தில் ADPT 37 ரக நெல் உற்பத்தியை இந்தப் புதுமையான நீர் சேமிப்புக் குழாய் நீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்வது என முடிவுசெய்தோம்.
இந்த 4 ஆய்வு நிலங்களிலும் நெல் சாகுபடியின்போது நீர்ப் பாசனம் செய்யப்பட்ட மொத்த நீரின் அளவு, மழையின் அளவு, நெல் தாவரத்தின் வளர்ச்சி, நிலத்தடி நீர்மட்டம், வளிமண்டல வெப்பநிலை போன்ற 6 வகையான ஆய்வுகளில் தகவல் சேகரிப்பு தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் ஆய்வு மேற்கொண்டோம். புதுமையான நீர் சேமிப்புக் குழாய் உதவியுடன் நீர்ப்பாசனம் மேற்கொண்ட செய்த நெற்பயிரின் மகசூல் பாரம்பரிய முறையில் நீர்ப்பாசனம் செய்த நெற்பயிரின் மகசூலைவிட 2.5 சதவீதம் குறைந்திருப்பினும், களிப்பு நிலப்பகுதியில் 25 சதவீதம் நீரும், மணல் பகுதியில் 15 சதவீதம் நீரும் சேமிக்கப்பட்டிருக்கிறது.
எங்கள் மாணவர்களின் இந்த ஆய்வுக்குப் புதுச்சேரி கல்வித்துறை, புதுச்சேரி அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாநில அறிவியல் மாநாட்டில் ஜூனியர் பிரிவில் முதல் இடம் கிடைத்தது. முதல் இடம் பிடித்த மாணவர்கள் மகாவிஷ்ணி, முகுந்தன் ஆகியோர் வரும் 27 முதல் 31 வரை திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஜனவரி 3 முதல் 7 வரை பெங்களூருவில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வாகித் தங்களுடைய ஆய்வு திட்டத்தைச் சமர்ப்பிக்க உள்ளனர். இந்தப் புதுமையான நீர் சேமிப்புக் குழாய் நீர்ப்பாசனம் நீர் சேமிப்பில் ஒரு புதிய மயில் கல்லை எட்ட உதவியாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT