Published : 04 Jan 2020 01:11 PM
Last Updated : 04 Jan 2020 01:11 PM

விடைபெறும் 2019: 2019-ல் கவனம்பெற்ற சூழலியல் புத்தகங்கள்!

சு. அருண் பிரசாத்

வாழ்க்கை வரலாறு

The Wizard and the Prophet:
Two Groundbreaking Scientists and Their Conflicting Visions of the Future of Our Planet,
Charles C. Mann, Picador

21-ம் நூற்றாண்டின் மனித வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட இரண்டு நேரெதிர் கருத்துகளைக் கொண்ட இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்மன் போர்லாக், வில்லியம் வோட் என்ற இரண்டு அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறு ‘தி விசார்டு அண்டு தி ப்ராஃபெட்’. ‘1491’, ‘1493’ போன்ற புகழ்பெற்ற அறிவியல் வரலாற்றுப் புத்தகங்களை எழுதிய சார்லஸ் சி. மன் ‘மந்திரவாதியும் தீர்க்கதரிசியும்’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். புவியின் மக்கள்தொகை இன்னும் நாற்பது ஆண்டுகளில் 1,000 கோடியைத் எட்டிவிடும்.

அதை உலகம் தாங்குமா? அப்போது உலகம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் அடங்கும். நாம் இந்தப் புவி நமக்கு வழங்கியவற்றை மீறி நுகர்ந்தால், அந்த வளர்ச்சி நம்மை அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பது சூழலியல் முன்னோடியான வோட்-ன் கொள்கை. மாறாக, ‘புத்தாக்கம்!’ - அதுவே நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்பது, தன் ஆய்வின் மூலம் அதிக மகசூல் தரும் பயிர் வகைகளை உருவாக்கி பசியில் இருந்து லட்சக்கணக்காணோரைக் காப்பாற்ற வழிசெய்த போர்லாக்-ன் அறைக்கூவல். வோட்-ஐத் தீர்க்கதரிசியாகவும் போர்லாக்-ஐ மந்திரவாதியாகவும் உருவகித்து உணவு, தண்ணீர், ஆற்றல், பருவநிலை மாற்றம் ஆகிய நான்கு விஷயங்களை வரலாற்று ரீதியில் அணுகி எதிர்காலத்தில் நமக்கிருக்கும் வாய்ப்புகளை மன் ஆராய்ந்திருக்கிறார்.

பூச்சியின் வரலாறு

The Mosquito: A Human History of
Our Deadliest Predator,
Timothy C. Winegard, Text Publishing

‘கொசு’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் மனித குல வரலாற்றை முற்றிலும் புதிய கோணத்தில் விவரிக்கிறது. நூற்றாண்டுகளாக மனித குலத்தின் விதியைத் தீர்மானித்த ஒற்றைச் சக்தியாகச் சின்னஞ்சிறிய கொசு எப்படி இருந்துவந்திருக்கிறது என்பதை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார் திமோதி சி. வைன்கார்டு. தேசங்கள்-பேரரசுகளின் போக்கை கொசுக்கள் மாற்றியமைத்திருக்கின்றன; பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து, மோசமான போர்களுக்கு இட்டுச் சென்ற கொசுக்களால் மனித குலத்தில் பாதிக்கும் மேல் அழிந்துபோனது.

இப்படி இந்த உலகில் வாழும் எண்ணற்ற உயிரிகளில், மனித குலத்தின் போக்கை நிர்ணயித்த முதன்மை உயிரியாக கொசு விளங்குகிறது. ‘கொசு தானே!’ என்று நாம் மிகச் சாதாரணமாக நினைக்கும் இந்தச் சிறு உயிரியைப் பற்றி திகைக்கச் செய்யும் தகவல்கள் ஆச்சரியமூட்டும் பார்வைகள் என கொசுக்களைப் பற்றிய முக்கிய ஆவணமாக இந்தப் புத்தகம் விளங்குகிறது.

பருவநிலை நெருக்கடி

The Uninhabitable Earth:
Life After Warming,
David Wallace-Wells, Allen Lane

பருவநிலை நெருக்கடி சார்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் டேவிட் வாலஸ்-வெல்ஸ், 2017-ம் ஆண்டு‘நியூ யார்க்’ இதழில் ‘தி அன்இன்ஹாபிடபிள் எர்த்’ என்ற தலைப்பில் புவி வெப்பமாதலின் விளைவுகளைப் பட்டியலிட்டு நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மிகுந்த வரவேற்பையும் சர்ச்சையையும் ஒருங்கே பெற்ற அந்தக் கட்டுரையை விரித்து அதே தலைப்பில் கடந்த ஆண்டு புத்தகமாக அவர் வெளியிட்டிருக்கிறார். கணிக்கப்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு புவியின் எதிர்காலம் எப்படி இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியங்களை வாலஸ்-வெல்ஸ் இந்தப் புத்தகத்தில் விவாதித்திருக்கிறார்.

பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டாலுமே கடல்மட்ட உயர்வு, அதிதீவிர வெப்ப அலைகள், உயிரினப் பேரழிவு, கொள்ளை நோய் உருவாதல், கடும் வறட்சி, புவி அரசியல் மோதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்கிறார். சரியான அறிவியல் நோக்கும் அரசியல் உறுதியும் இருந்தால் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இப்போதும் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

India in a Warming World:
Integrating Climate Change and Development, Navroz K. Dubash (Ed.),
Oxford University Press

பருவநிலை நெருக்கடி இன்றைக்கு இந்தியாவையும் நேரடியாக அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது. முன்னணி ஆராய்ச்சி யாளர்கள், பயிற்சியாளர்கள் - செயற்பாட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகி இருக்கும் இந்தப் புத்தகம், ‘பருவநிலை நெருக்கடியை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது’ என்ற கேள்விகான விவாதங்களுக்கு வலுசேர்க்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகள், பேச்சுவார்த்தைகள், அரசியல், கொள்கைகள், ஆற்றல், நீர் சார்ந்த துறைகளின் விவாதங்களில் பருவநிலையின் இணைவு உள்ளிட்டவற்றை இந்தப் புத்தகம் பேசுகிறது.

பருவநிலை மாற்றம் இன்றைக்கு இந்தியாவில் வளர்ச்சியின் பிரச்சினை என்ற இடத்துக்கு வந்திருப்பதை மையப்படுத்தி, அவற்றை எதிர்கொள்வதற்கு உள்ளூர், மாநிலம், தேசியம் என்ற அளவில் பருவநிலை மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. இந்தியாவின் ‘கொள்கை ஆராய்ச்சி மைய’த்தில் (CPR) பேராசிரியராகப் பணியாற்றும் நவ்ரோஷ் கே. துபாஷ் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகத்தை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ் பதிப்பித்திருக்கிறது. புத்தகத்தை இலவசமாக இங்கு தரவிறக்கிக் கொள்ளலாம்: bit.ly/INDIACLIMATE

இயற்கை எழுத்து

The Way Home:
Tales from a Life Without Technology, Mark Boyle,
Oneworld Publications

புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருட்கள், மின்சாரத்தை பயன்படுத்தும் பொருட்கள், கணினி, கைபேசி போன்ற தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், சூரியத் தகடுகள், காற்றாலைகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் ஆற்றல் போன்ற நவீன சமூகத்தின் வசதிகள் ஏதுமின்றி ஓராண்டு காலம் அயர்லாந்தின் கிராமப்புறம் ஒன்றில் வாழ்ந்த மார்க் பாயில், அந்த அனுபவங்களைத் தொகுத்திருக்கும் புத்தகம் ‘தி வே ஹோம்’.

பாயிலும் அவருடைய இணையரும் சேர்ந்து தங்கள் கைகளைக் கொண்டே சீரமைத்த மூன்று ஏக்கர் நிலத்தில், இன்றைய சராசரி மனிதர் வாழும் வாழ்க்கையை விடுத்து இயற்கையோடு அணுக்கமான வாழ்க்கையை ஓராண்டு காலம் வாழ்ந்தனர். எல்லோரும் பாயிலைப் போல் வாழ்வதற்கு இந்தப் புவியில் இடம் இல்லை; ஆனால், அப்படிப்பட்ட கனவொன்றில் வாழ்வதற்கான சாத்தியத்தை இந்தப் புத்தகம் வழங்குகிறது.

சூழலியல் புனைவு

The Overstory,
Richard Powers,
Random House

புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரான ரிச்சர்டு பவர்ஸ்-ன் 12-வது நாவல் ‘ஓவர்ஸ்டோரி’. ஒன்பது வெவ்வேறு அமெரிக்கர்களுக்கு மரங்களோடு நேரும் தனித்துவமான அனுபவங்கள் எப்படி காடழிப் புக்கான தீர்வுக்கு வழிசெய்கின்றன என்பதை ஓவர்ஸ்டோரி விவரிக்கிறது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பவர்ஸ் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கலிபோர்னியாவின் மாபெரும் ரெட்வுட் மரங்களை முதன்முறையாகப் பார்த்தார்; அதிலிருந்து ஊக்கம்பெற்று இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

தங்கள் வாழ்வை மாற்றியமைத்த புத்தகம் என்று வாசகர்களால் கொண்டாடப்படும் இந்த நாவல், ‘மேன் புக்கர் பரிசு’ உள்ளிட்ட பல்வேறு சர்வதேச இலக்கிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது; 2019-ன் புனைவுக்கான ‘புலிட்சர் பரிசு’ இந்த நாவலுக்கு வழங்கப்பட்டது. இந்த நாவலுக்காக மரங்களைப் பற்றிய சுமார் 120 புத்தகங்களைப் படித்ததாக பவர்ஸ் கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x