Last Updated : 29 Aug, 2015 02:44 PM

 

Published : 29 Aug 2015 02:44 PM
Last Updated : 29 Aug 2015 02:44 PM

இயற்கை சார்ந்த வாழ்க்கையே, அறம் சார்ந்த வாழ்க்கை!- ‘பசுமைநடையின் 50-வது நிகழ்ச்சி

ஒரு பெரிய வெல்லக்கட்டியை கடித்துவிட்டு எறும்புக் கூட்டம் ஒன்று நீரருந்த நகர்வதுபோல் இருந்தது மக்கள் கூட்டத்தைப் பார்க்க. மதுரைக்கு மேற்கே உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிராமம் கீழக்குயில்குடி. இந்த ஊரில் உள்ள பிரம்மாண்டமான குன்றையும், அதன் அடிவாரத்தில் உள்ள தாமரைத் தடாகத்தையும் கடந்த ஞாயிறன்று பருந்துப் பார்வையில் அதிசயித்துப் பார்த்தபோது, மேற்கண்ட காட்சியே ஞாபகத்துக்கு வந்தது.

குடும்பம் குடும்பமாக மக்கள் குழுமியிருந்தார்கள். சிலர் கைக்குழந்தைகளுடனும். அதிகாலை 5.30 மணிக்கே முதல் பஸ்ஸைப் பிடித்து மலையடிவாரத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். மக்களின் இந்த ஆர்வத்துக்குக் காரணம், சுற்றுச்சூழல் மற்றும் வரலாறு சார்ந்த நிகழ்ச்சி என்றால் நம்ப முடிகிறதா?

தண்ணீரைத் தேடி

'இன்னீர் மன்றல்' என்ற தலைப்பில் நடந்த 'பசுமை நடை'யின் 50-வது விழாதான் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக நடந்து முடிந்திருக்கிறது. "மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று சின்னங்கள், மலைகள், சமணர் படுகைகளுக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அழைத்துச் செல்வதும், அதன்மூலம் சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று புரிதலை ஏற்படுத்துவதும்தான் பசுமை நடை அமைப்பின் நோக்கம். யானைமலைக்கு ஆபத்து வந்தபோது, அதைக் காக்கப் புறப்பட்ட இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த இயக்கத்தின் 25-வது நடையை ‘விருட்சத் திருவிழா'வாக நடத்தினோம்.

நமது வரலாற்றை இந்தத் தலைமுறைக்குக் கொண்டுவந்து சேர்த்தது பாறைகளும் கல்வெட்டுகளும்தான் என்பதால், 40-வது நிகழ்வைப் பாறைத் திருவிழா வாகக் கொண்டாடினோம். 'தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்ன?' என்பது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கும் வகையில், 50-வது நடை இன்னீர் மன்றலாக அரங்கேறியிருக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன்.

தொலைக்க வேண்டாம்

மதுரை மாவட்டத்திலேயே அதிக வயது கொண்ட பிரம்மாண்டமான ஆலமரமும், அதன் விழுதில் தோன்றிய புதிய மரங்களும்தான் விழா அரங்கம். ஒரு மரத்தடியில் வரவேற்பாளர்கள், இன்னொரு மரத்தடியில் புகைப்படக் கண்காட்சி, மற்றொரு மரத்தடியில் கருத்தரங்குத் திடல் என்று எங்கும் பசுமையாகக் காட்சியளித்தது விழாத் திடல்.

"எனக்குப் பிடித்த சித்தாந்தங்கள் இரண்டு. ஒன்று சுற்றுச்சூழல், மற்றொன்று சமணம். சமணத்தை ஒரு சித்தாந்தமாகவே நான் பார்க்கிறேன். சமணச் சரவணம் என்னும் வட்டத்தில் ஆடு, மாடு, புலி என்று அனைத்து உயிர்களும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமையுண்டு என்று சொன்னது சமண மதம். ஒரு தனிமனிதனுக்கு நினைவாற்றல் எப்படி முக்கியமோ, அதைப் போலத்தான் ஒரு சமூகத்துக்கு வரலாறும்.

நம் முன்னோர்களின் ஒட்டுமொத்த நினைவாற்றலின் தொகுப்புதான் வரலாறு. அதை நாம் தொலைத்துவிடக் கூடாது. எதிர்காலத்தில் தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்பார்கள், அதன் விலை பாலின் விலையைத் தொடும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது சொன்னால், சிரித்திருப்போம். ஆனால், இப்போது அதுதான் நடக்கிறது. எழுத்தறிவைப்போலச் சுற்றுச்சூழல் அறிவும் எல்லோருக்கும் பரவலாக்கப்பட வேண்டும்" என்றார் சூழலியல் அறிஞர் தியடோர் பாஸ்கரன்.

"என் பால்ய காலத்தை மல்லாட்டை (நிலக்கடலை), நண்டு, ஓணான், சிட்டுக்குருவி, பூச்சிகள் எல்லாம் அழகாக்கின. இப்போது அவற்றை எல்லாம் அழித்துவிட்டோம். எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு மனிதன் மட்டும் எதற்காக வாழ வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார் எழுத்தாளர் பவா.செல்லதுரை.

நாலும் தெரிந்தவர்கள்

இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் பேசும் போது, "1870-களில் தென்னிந்திய விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்து எத்தகைய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று அறிய அகஸ்டஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை என்ன சொன்னது தெரியுமா? இவர்களுக்கு எதையும் புதிதாகச் சொல்லித் தரத் தேவையில்லை. அவர்களிடமிருந்து நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்றது. அந்தளவுக்குப் பாரம்பரிய அறிவு பெற்றவர்கள், நம் முன்னோர்" என்றார்.

ராஜஸ்தானில் வறண்டு, அழிந்தே போய்விட்ட ஒரு ஆற்றைக் கிராம மக்கள் உதவியுடன், ராஜேந்திர சிங் என்ற தனிமனிதர் மீட்ட கதையைச் சொன்னார் எழுத்தாளர் நக்கீரன்.

அறிவுத்திரட்டை மீட்போம்

உயர் நீதிமன்ற நீதிபதி அரி.பரந்தாமன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இரா. பிரபாகர் ஆகியோரைத் தொடர்ந்து பேசிய பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், "தண்ணீரைப் பற்றியும், மூலிகைகளைப் பற்றியும் நம்மவர்களுக்குப் பெரிய அளவில் ஞானம் இருந்துள்ளது. நாமோ சுற்றியுள்ள உயிர் வகைகளையும், பயிர் வகைகளையும் பற்றிக்கூடத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். இந்த மெத்தனத்தால் முன்னோரின் அறிவுத்திரட்டை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அறிவுத்திரட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்க வேண்டும்.

நம் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதை தர்ப்பணம் செய்வது அல்ல. தண்ணீரையும் இயற்கையையும் மதிப்பதுதான். இதை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். இயற்கை ஈவிரக்கம் இல்லாமல் அழிக்கப்படுகிறது. மூலிகைகளின் சுரங்கமாக இருந்த குற்றாலம், அழுக்குகளின் கிடங்காக மாறிவிட்டது. இயற்கை சார்ந்த வாழ்க்கைதான் அறம் சார்ந்த வாழ்க்கை. இங்கு வந்து சென்றதற்கு நமக்குக் கிடைத்த செய்தி இதுதான்" என்று முத்தாய்ப்பாக முடித்தார் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன்.

"நிச்சயமாக உங்கள் எல்லோரின் வாழ்த்துகளுடனும் வழிகாட்டுதலுடனும் இந்தப் பணியை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வோம்" என்றார் அ. முத்துகிருஷ்ணன். வெற்றுப் பேச்சாக இல்லாமல் நிகழ்ச்சி முடிந்த அரை மணிநேரத்துக்குள் அங்கிருந்த குப்பையையும், கழிவையும் கவனத்துடன் அப்புறப்படுத்தியது பசுமைநடை இளைஞர் படை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x