Published : 28 Dec 2019 12:06 PM
Last Updated : 28 Dec 2019 12:06 PM

விதை முதல் விளைச்சல் வரை 13: நஞ்சை, தோட்டக்கால் நிலங்களில் நீா் மேலாண்மை

சொ.பழனிவேலாயுதம், பூச்சி செல்வம்

நீர் மேலாண்மையில் ஒரு அங்கமான மாற்றுப்பயிர்த் திட்டத்தின் தேவையும், அதைச் செயல்படுத்தும் முறை குறித்தும் பார்த்தோம். தற்போது நஞ்சை, கிணறு, ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யும் தோட்டக்கால் ஆகிய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான பயிர்களில் நீா் மேலாண்மையையும் நீா்ச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் பற்றிப் பார்ப்போம்.

தற்போது பரவலாக நெற் பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறைகளைக் கடைப்பிடிக்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இம்முறையில் சாகுபடி செய்யும் நெற்பயிரில் நீா்ச்சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது. அது எவ்வாறெனில், இம்முறையில் குத்துக்கு ஒற்றை நாற்று வயது குறைந்த நாற்றுகளை வரிசை நடவு முறையில் நடுவது ஆகியவை முக்கிய அம்சம்.

இத்திருந்திய நெல் சாகுபடியில் நீா்ப்பாசனத்தின்போது நெல் நாற்றுகள் நடவுசெய்த வயலில் நடவு நட்ட நாளிலிருந்து 10 நாட்கள் வரையிலும் நிலத்ததை நனைக்கும்படியான ஈரப்பதம் இருந்தால் போதுமானது. பின்பு நிலத்தில் மயிரிழை போன்ற வெடிப்பு ஏற்படும்போது 1 இஞ்ச் அல்லது 2 ½ செ.மீ அளவுக்கு நீரைப் பயிருக்கு நிலம் முழுவதும் நிற்கும் படியாக நிறுத்திக் கதிர் வெளிவரும் வரை பார்த்துக்கொள்வது நல்லது.

கதிர் வெளிவந்த பின்பு 2 அங்குலம் அல்லது 5செ.மீ அளவு நீரைத் தேக்கிப் பின் அந்நீா் முழுவதும் வற்றிய நிலையில் ஒருநாள் இடைவெளிவிட்டு மறுமுறை அதே அளவு நீா்ப்பாய்ச்ச வேண்டும். சுருங்கக்கூறின் காய்ச்சலும் பின் பாய்ச்சலும் ஆக நீா்ப்பாசனத்தை மேற்கொண்டால் பயிர் வளா்ச்சிப் பருவம் நீடிக்காமல் உற்பத்தி நிலையைப் பயிர் அடைய வழிவகுக்கும்.

இவ்வாறு வயல்மட்ட அளவில் 1 அங்குலம் அல்லது 2.5செ.மீ நீரை அவ்வபோது அளந்து பார்ப்பது என்பது கூடாத ஒன்றாதலால் நடைமுறைக்கு உகந்த எளிய முறையில் நடவு வயலில் ஆங்காங்கே சுமார் 5 மூங்கில் குச்சிகளை நட்டு அவற்றில் நீரின் தேவையான 1 அங்குலம் 2 அங்குலம் அளவுக்குச் சிவப்பு வரைவு குச்சியில் ஏற்படுத்தி நடும்போது அதைப் பார்த்து நீரின் இருப்பு அளவைப் பார்த்துப் பின் தேவைக்கேற்ப நீா் பாய்ச்சலாம்.

குறிப்பாக, நெற் பயிரில் பல்வேறு முறைகளில் சாகுபடி செய்யும்போது சிம்புகள் வெடிக்கும் பருவம், கதிர் வெளிவரும் பருவம், கதிர் முற்றும் பருவம் ஆகிய முக்கிய நிலைகளில் தண்ணீா்ப் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

நேரடி ஆற்றுப் பாசனப் பகுதியில் கரும்புப்பயிர் சாகுபடியில் பல்வேறு முறைகளில் சாகுபடி மேற்கொண்டாலும் குறிப்பாக 2 முதல் 3 செ.மீ வரை நீரைத் தேக்கி வைப்பது போதுமானது. குறைந்த பட்சம் 8 நாட்கள் இடைவெளிவிட்டு நீா்ப்பாய்ச்சுவது சிறந்தது. கிணறு, ஆழ்துளைக் கிணறு சாகுபடிகளில் பயிருக்குத் தற்போது பரவலாகச் சொட்டு நீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனம் ஆகிய முறைகளைப் பயன்படுத்தி நீர்ச்சிக்கனம் பேணலாம்.

அனைத்து வகை தரைமட்டத்துக்கு மேல் சிறிய உயரம் வரை வளரும். நிலக்கடலை, கிழங்கு வகைப்பயிர்கள், பயறுவகைப் பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப்பாசனமும் அதிக உயரத்துடன் கூடிய பயிர்களான அனைத்துக் காய்கறிப்பயிர்கள், பருத்தி, மக்காச்சோளம் கரும்பு, வாழை ஆகிய பயிர்களுக்குச் சொட்டு நீர்ப் பாசனத்ததை மேற்கொள்வது சிறந்தது.

இப்பாசன முறைக்காக உழவியல் முறைகளை மாற்றி அதாவது பாத்திகட்டும் முறையை மாற்றி மேட்டுப்பாத்தி அமைத்து அதன் இரு கரைகளிலும் விதையை ஊன்றுவதும், மேட்டுப்பாத்தியின் நடுவில் சொட்டுநீர்ப் பாசனத்தின் இறுதி நிலைக்குழாய்களும் அதனுடன் கூடிய சொட்டுவான்களும் அமைத்து நீர்ப்பாய்ச்சுவதும் நீர்ச்சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் வழிமுறை.

இப்பாசன முறையில் நீர்ப்பாய்ச்சுவதற்கு வேலையாட்கள் தேவையும் குறைகிறது. அதற்கான செலவும் குறைகிறது. இச்சொட்டு நீர்ப்பாசன அமைப்புகளை பயன்படுத்தும்போது அப்பயிர்க்காலம் முடிவடைந்த நிலையில் இச்சொட்டுநீர்ப் பாசன இறுதிநிலை குழாய்களை மடித்து ஓரமாக நிலத்தில் வைத்திருந்து பின் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு அதே நிலத்தில் விதைப்பு முடிந்தவுடன் பயன்படுத்துவது எளிது. தெளிப்பு நீர்க்கருவிகளின் அமைப்பு எளிதில் ஓரிடத்திலிருந்து மறுஇடத்திற்கு மாற்றம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்முறையில் மேம்பாடுசெய்து தற்போது கரும்பு, காய்கறிப் பயிர்களின் நிலத்தடியிலேயே குழாய்களைப் பதித்து நிலமட்டத்துக்குக் கீழேயே வேர்க்கருகில் நீர்ப்பாசனத்ததை மேற்கொள்வதும் மேலும் கணினி மூலம் கணிப்புசெய்து பயிரின் தேவைக்கேற்ப நீர் மேலாண்மையை மேற்கொள்வதும், இம்முறையில் நவீன வடிவம். இச்சொட்டு நீர்ப்பாசனத்துக்குச் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் சொட்டு நீர்ப்பாசன வசதி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

தொடர்புக்கு: palani.vel.pv70@gmail.com, selipm@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x