Published : 21 Dec 2019 12:01 PM
Last Updated : 21 Dec 2019 12:01 PM
கேரளக் காடு ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) 1977-ம் ஆண்டு அமைதிப் பள்ளத்தாக்கை ஆய்வுசெய்து, இந்தப் பகுதியை உயிரிக்கோள காப்புப் பகுதியாக (Biosphere reserve) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அப்போது மத்திய அரசின் வேளாண்துறைச் செயலராக இருந்த எம்.எஸ். சுவாமிநாதன் ஓர் அறிக்கையைத் தயாரித்தார்.
அமைதிப் பள்ளத்தாக்கு (89.52 சதுர கி.மீ.), புதிய அமரம்பலம் (80 சதுர கி.மீ.), அட்டப்பாடி (120 சதுர கி.மீ.) போன்ற கேரளப் பகுதிகளும் குந்தா (100 சதுர கி.மீ.) என்ற தமிழகப் பகுதியும் ஒன்று சேர்ந்து ஒரு உயிர்கோளக் காப்பகமாக மாற்றப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் பரிந்துரைத்தார். இதன் மூலம் மிகவும் மதிப்புவாய்ந்த மரபணு வளம், இழப்பிலிருந்து தடுக்கப்படும் என்று அவர் கருதினார்.
மேற்கண்ட பரிந்துரைகளின் அடிப்படையில் 1978-ம் ஆண்டு இந்திரா காந்தி, இந்த உயிரிக்கோளக் காப்பகத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததுடன், இதுதொடர்பான ஒரு சட்ட முன்வரைவைக் கொண்டுவந்து, அதை உறுதிப்படுத்த கேரள அரசைப் பணித்தார். அதே ஆண்டு இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பும் (IUCN) சோலை மந்தியை அமைதிப் பள்ளத்தாக்கிலும் களக்காடு (அகத்திய மலைப்பகுதி) பகுதியிலும் பாதுகாக்கப் பரிந்துரைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தது.
ஒரு சார்புச் செயல்பாடு
மக்களின் தொடர் போராட்டங்கள், சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் வலியுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக கேரள அரசு இந்தப் பள்ளத்தாக்கைப் பாதுகாக்கவும், நீர்மின் திட்டத்தைக் கைவிடவும் தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்கிடையில் 1980 ஜூனில் கேரள உயர் நீதிமன்றம் அணை கட்டத் திட்டமிடப்பட்டிருந்த பகுதியில் மரம் வெட்டலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது. என்றாலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி கேரள அரசு அணை தொடர்பான வேலைகளை நிறுத்தியது. நீர் மின்நிலையத் திட்டப் பகுதியைத் தவிர்த்த அமைதிப் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளைத் தேசியப் பூங்காவாக அறிவித்தது. மீண்டும் மக்கள் எதிர்ப்பு வலுத்தது. கேரள ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது; அரசின் முடிவை ஆளுநர் தடைசெய்தார்.
ஒருவழியாகத் தடை
நீர்மின் உற்பத்தித் திட்டத்தை முற்றிலும் கைவிட விரும்பாமல் எப்படியாவது அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் 1982-ல் பல துறைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க சூழல் சிதைவு இல்லாமல் நீர்மின் நிலையம் சாத்தியமா என்று ஆய்வுசெய்யப் பணிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராகப் பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன்,பேராசிரியர் மாதவ் காட்கில், திலீப் கே. பிஸ்வாஸ் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். 1983-ன் தொடக்கத்தில் இந்தக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையிலும் மத்திய அரசு நீர்மின் நிலையத் திட்டத்தை நிராகரித்து, மொத்தப் பகுதியையும் தேசியப் பூங்காவாக அறிவித்தது.
அதற்குப் பத்து மாதங்களுக்கு பின்பு 1985 செப்டம்பர் 7 அன்று தேசியப் பூங்கா முறையாகத் தொடங்கப்பட்டு, சைராந்தி பகுதியில் இந்திரா காந்திக்கு ஒரு நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. 1986 செப்டம்பர் 1 அன்று அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா நீலகிரி உயிரிக்கோளக் காப்பகத்தின் முக்கியக் கூறாகச் சேர்க்கப்பட்டது. மக்களின் போராட்டம் வீண்போகவில்லை!
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT